இர்விங் லேட்டன் 1912ல் ருமேனியாவில் பிறந்தவர். ஒரு வயதில் கனடாவிலுள்ள மாண்ட்ரியலுக்கு புலம் பெயர்ந்தவர். வேளாண் இயலில் இளங்கலை பட்டம் பெற்றவர். சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றி, மெக்கில் பல்கலைக்கழகத்தில் அரசியல் படித்தார். நாற்பது கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
1969-78 காலகட்டத்தில் யார்க் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக பதவி வகித்தார். இவரின் பெயர் இருமுறை நோபல் பரிசுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டது.
"Fortunate Exile" என்னும் இவருடைய கவிதை தொகுப்பு வரலாற்றுடனான நீண்ட தனித்தன்மை வாய்ந்த யூதர்களின் அனுபவங்களைப் பேசுகின்றன. குறிப்பாக நாஜிகளுடன் பல்வேறு சமயங்களில் எழுதப்பட்ட கவிதைகளின் இந்தத் தொகுப்பிலிருந்து தமிழில் சில.
பாடம்
இது ஒரு விரல்
இது ஒரு கண்
ஒரு சிறிய வெட்டுக்கூட வலிக்கிறது
பிறகு எரிச்சலோடு
பெரும் அச்சம் வருகிறது
எலும்புகளைத் துண்டுகளாக்கும்
துப்பாக்கிரவை
கழுத்திலோ அடி வயிற்றிலோ நுழையும்போது
அல்லது இரத்தம் பின்வாங்கும்
கத்தியை தொடர்ந்து வரும்போதும்
மரணத்தைப் பற்றிய
திடீரென சூன்யமாய் அழிக்கப்படும் நினைப்பு
உதடுகளை வெளிறச் செய்கிறது.
உனக்கு நீயே சொல்லிக்கொள்ள வேண்டும்
இது திரைப்படமல்ல. இது நிஜம்
ஒரு சமயம் இருளில் குழந்தையாயழுத
ஒரு மனிதனுக்கு நிகழ்கிறதென்று
அவை உண்மையான குடல்கள்
அவன் கைகளில் வழிந்து கொண்டிருப்பவை
வலியும் பேரச்சமும் உண்மையானவை
நாம் மீண்டும் துவங்குவோம்
இது ஒரு விரல்
இது ஒரு கண்
ஆஸ்க்விட்ஜ்க்குப் பிறகு
(ஆஸ்க்விட்ஜ் : நாஜிகளின் வதைமுகாம்)
மகனே
தெளிவற்ற கவிஞனாய் இராதே
நீ எழுதும் ஒவ்வொரு வார்த்தையும்
நேரடியாகவும் நேர்மையாகவுமிருக்கட்டும்
துப்பாக்கியின் சத்தத்தைப்போல.
இருபதாம் நூற்றாண்டின்
முதிர்ந்த கவிஞனொருவனை நம்பு
நம்பாதே பழைய ஆகமத்தை
புதிய ஆகமத்தையும்
அல்லது குரானின் அறிவுரைகளை
அல்லது மூன்று கூடைகளின் ஞானத்தை
அல்லது தம்மபதத்தை
அவை மனிதனின் மிருகத்தனத்தை
மாற்றுமென்றும் கட்டுப்படுத்துமென்றும்.
அன்பை உபதேசித்த
மக்களின் தோல்களிலிருந்து
விளக்குச் சீலைகள் செய்யப்பட்டன
ஆஸ்க்விட்ஜின் பெல்சன் எரியடுப்புகள்
அவர்களின் முட்டாள்தனத்துக்கு
பகிரங்க சாட்சிகளாயின.
பயங்கரத்துக்கும் வருத்தத்துக்கும்
நினைவுப் பேழைகளிருப்பினும்
வருத்தம், மகனே
அற்ப நேரத்துக்காகத்தான்
ஒரு தானியங்கித் துப்பாக்கி
காக்கிறது
ஒரு ஆயுட்காலத்தை.
(மொழிபெயர்ப்பு – லாவண்யா)
நன்றி : புது எழுத்து, நவ் 2005
4 பின்னூட்டங்கள்
Comments feed for this article
ஏப்ரல் 29, 2006 இல் 7:14 பிப
மதி கந்தசாமி
நீங்கள் மொழிபெயர்த்திருக்கும் கவிதைகளை இன்னும் படிக்கவில்லை – ஆங்கிலக் கவிதைக்கான சுட்டிகளையும் கொடுத்தால் நன்றாகவிருக்கும்.
இந்த வருடத் தொடக்கத்தில்தான் மறைந்தார். இங்கே மொன்ரியலில்தான் அஞ்சலிக் கூட்டம் நடந்தது. இவரது நண்பர் Leonard Cohen அருமையான உரையாற்றியிருந்தார். அருமையான கட்டுரையொன்று இங்கேயிருந்து வரும் பத்திரிகையில் வந்திருந்தது. சேமித்து வைத்த நினைவு. கணினியில் தேடிப்பார்த்து இருந்தால், பகிர்ந்துகொள்கிறேன்.
வித்தியாசமான பதிவு. நன்றி!
-மதி
ஏப்ரல் 29, 2006 இல் 8:05 பிப
ஜனனி
அன்புடன் மதி அவர்களுக்கு
தங்களின் மடல் கண்டேன், நீங்கள் சொல்வது சரி,ஆங்கிலக் கவிதைக்கான சுட்டிகளையும் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால், நான் எந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை சொன்னால் போதும் என எண்ணுகிறேன்,மேலும் என் வலைப்பதிவில் எனது மட்டுமல்லாது நான் ரசித்த கவிஞர்கள் அடுத்தவர்களின் மொழிபெயர்ப்பில் இருப்பினும்,அவர்களின் பெயர் இட்டு நன்றியோடு வெளியிட விரும்புகிறேன்.வலைப்பதிவில் ஆங்கிலத்தின் ஊடுறுவல் அதிகமாக வேண்டாமே என ஒரு எண்ணம்.
கொடுத்துவைத்த மனிதர் நீங்கள், இர்விங் லேட்டன் இருந்த, உலாவிய பரப்பில் இருக்கிறீர்கள். Leonard Cohen-ன் கட்டுரையிருந்தால் வாசிக்க விரும்புகிறேன்.
நன்றி, வணக்கம்
நட்புடன் (செளரி ராஜன்)
ஏப்ரல் 29, 2006 இல் 8:16 பிப
மஞ்சூர் ராசா
இர்விங் லேட்டனின் பாடம் கவிதை நன்றாக இருக்கிறது. இவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குறியது.
ஆஸ்க்விட்ஜ் – மரண தொழிற்சாலை என்று எங்கோ படித்ததாக ஞாபகம். அதைப்பற்றிய கவிதையிலும் மரணத்தின் வாடை லேசாக வருவதுபோல ஒரு தோற்றம்.
நன்றி.
மே 5, 2006 இல் 3:02 முப
மதி கந்தசாமி
சில சுட்டிகள்:
http://irvinglayton.blogspot.com
http://www.cbc.ca/arts/books/layton.html