நவீன உலக மனிதனின் இருப்பு தான் எனது கவனமாகிறது. எவ்வளவு விதமான சாத்தியங்களுக்கு மனித இருப்பை நகர்த்த முடியும்? பிறப்பு, உடல், சாதி, நிறம், மரணம் எதுவுமே நமது தேர்வில் இல்லை. நமது இருப்பு மட்டும் தான் குறைந்த பட்சம் நமது தேர்வில் இருப்பது போல தோன்றுகிறது. ஆனால், மனித இருப்பை சட்டதிட்டங்களால் சமூகம் இறுக்குகிறது, திட்டமிடுகிறது. அப்போது குறிப்பிட்ட வாய்ப்புகளே உள்ள வாழ்வை வாழத் தள்ளப்படுகிறோம். உலக வாழ்வே ஒரு அலுவலக நடைமுறையாகிவிட்ட இந்த நிலையில் மனிதன் தன் வாழ்விற்கான சாத்தியங்களை விஸ்தரித்துக்கொண்டு போவதன் மூலமாகத்தான் அர்த்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
– பிரான்ஸ் காஃப்கா
தன் காலத்திய உலகமே ஒரு அலுவலகமாக மாறி விட்டதாக காஃப்கா கருதுவது மிகச் சரியான கணிப்பு. இன்றைய இந்த நிலையில் வேறு வெளிகளை நோக்கியும் கட்டுப்பாடற்ற வெட்டவெளிகளின் சுவாசத்தை நோக்கியும் நம்மை அழைத்துச்செல்ல படைப்பாளி விழைகிறான். அவன் காட்டும் திசைகளில் தான் நம் வாழ்வுக்கான கனவும், சுதந்திரமும், கொண்டாட்டமும் தங்கி இருக்கின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கவிமொழி கொண்டது நம் தமிழ். “தமிழ் கவிமொழி” படைப்பாளிக்கு இது பலம்; சவால்; பலவீனம். காலத்துக்கும் மனித வாழ்வுக்கும் மொழிக்குமான உறவை பேணுவதில் நவீன தமிழ்க் கவிதை படைப்பாளிகளான கவிஞர்கள் அப்படியொன்றும் சோடைப்போய்விடவில்லை. இன்றைய “நவீன விருட்சம்” என்ற நிலையை அடைய கவிதை மேற்கொண்ட தன்னிலை மாறுதல்கள் பல உண்டு.
பாரதிக்குப்பின் 1921 – 1934 காலக்கட்டத்தில் கவிதை எழுதியுள்ளவர்களில் முக்கியமானவர்களாக பாரதிதாசன், தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் வே. இராமலிங்கம் பிள்ளை ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். மரபு வழிக் கவிதை அமைப்பில் பல புதுமைகளைச் செய்து இசைப்பாடல்களை கவிதையின் தரத்திற்கு உயர்த்தி தமிழ்க் கவிதைப்போக்கில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய – பாரதி, தன் இறுதிக்காலத்தில் வசன கவிதை முயற்சிகளையும் மேற்கொண்டார். பாரதியின் வசன கவிதை முயற்சியை தமிழில் புதுக்கவிதை இயக்கத்திற்கான விதை என்று கொள்ளவேண்டும்.
பாரதியை தொடர்ந்து அவரது கவிதைப்பாட்டையில், அவரது நிழல்களாகவே பயணம் செய்த கவிஞர்கள் யாருமே வசன கவிதை முயற்சியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சுத்தானந்த பாரதியார், சாது. சு. யோகி, திருலோக சீதாராம், எஸ்.டி. சுந்தரம், வாணிதாசன், கம்பதாசன், கொத்தமங்கலம் சுப்பு என்று அப்போதைய கவிஞர்களின் பட்டியல் நீண்டாலும் கவிதைப்போக்கு திருப்திகரமானதாக இல்லை. பரவலாகப்பேசப்பட்ட சீர்திருத்தக்கருத்துக்களையே திரும்பத் திரும்பத் தம் கவிதைகளில் சலிப்படையும் விதத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தனர். மரபின் தொடர்ச்சியான பாரதியையே அவர்கள் நகலெடுத்துக் கொண்டிருந்தனர்.
தமிழில் புதுக்கவிதையின் தொடக்க காலம் 1934ல் தொடங்கியது என கூறலாம். பாரதியின் அடியொற்றி வசன கவிதை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிறுகதைகள் எழுதுவதிலேயே தீவிர கவனம் செலுத்தி வந்த ந.பிச்சமூர்த்தியே அம்முயற்சியின் முன்னோடி. 1934ல் “மணிக்கொடி” இதழில் ந. பிச்சமூர்த்தியின் முதல் வசனக்கவிதை “காதல்” பிரசுரமானது. “மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது” என்று தொடங்குகிறது அந்தக்கவிதை. இப்புதுக்கவிதை முயற்சிக்கு அமெரிக்க கவிஞர் “வால்ட் விட்மன்” எழுதிய “புல்லின் இதழ்கள்” என்ற தொகுப்பு தான் வித்திட்டது. அதை படித்தபோது கவிதையின் ஊற்றுக்கண் எனக்குத் தெரிந்தது. பின்னர் பாரதியின் வசன கவிதையை படிக்க நேர்ந்தது. என் கருத்து வலுவடைந்தது. இவற்றின் விளைவாக கவிதைகளை உணர்ச்சிப்போக்கில் எழுதத் துவங்கினேன் என்று பின்னொரு சந்தர்ப்பத்தில் பிச்சமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இவரை
பின்பற்றி கு.ப. ராஜகோபாலனும் 1938ல் வசன கவிதைகளை மணிக்கொடி இதழில் எழுதத்தொடங்கினார்.
ந. பிச்சமூர்த்திக்கு வெகு சமீபமாக புதுமைப்பித்தன் 1934ல் “ஊழியன்” இதழில் புதுக்கவிதை முயற்சியை தொடங்கினார். தன் சமகாலத்து வசன கவிதை முயற்சிகளை கடுமையாக விமர்சித்துள்ள போதிலும் புதிய கவிதை முயற்சிகளை வரவேற்றார். உருவ அமைப்பில் மரபுக்கவிதையை பின்பற்ற முனைந்த போதிலும் கவிதைக்கான விஷயங்களும் பார்வையும் புதுமையானவை. இவரது கவிதையமைப்பை பின்பற்றி கவிதைகளை எழுதியவர் சிதம்பர ரகுநாதன்.
1939ல் “சூறாவளி” என்னும் வார இதழை தொடங்கிய க.நா. சுப்ரமணியம், “மயன்” என்னும் பெயரில் எழுதிய “மணப்பெண்” வசன கவிதைகள் வந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் புதுக்கவிதைப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட கவிதையாகும். இந்தக்கவிதை “சூறாவளி”யில் வெளியானதை தொடர்ந்தே வசன கவிதை பற்றிய விவாதங்கள் எழுந்ததாக வல்லிக்கண்ணன் தனது “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” எனும் நூலில் குறிப்பிடுகிறார். இந்தக்காலகட்டத்தில் எம்.வி. வெங்கட்ராம், தி.க.சிவசங்கரன் போன்றோரும் வசன கவிதைகள் எழுதியுள்ளனர்.
இத்தனை பேர்கள் புதுக்கவிதையின் ஆரம்ப முயற்ச்சியில் ஈடுபட்ட போதிலும் மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி, சூறாவளி போன்ற இதழ்களின் ஆதரவு இருந்த போதிலும் குறிப்பிட்டு சொல்லும் வகையில் கவிதையின் வளர்ச்சி இல்லை. காரணம், புதிய கவிதை முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களின் கவனம் சிறுகதை எழுதுவதிலேயே, அதில் சாதனை புரிவதிலேயே முனைப்பாகக் குவிந்திருந்தது. புதிய கவிதை முயற்சியில் ஆர்வம் இருந்த அளவிற்கு அதில் செயல்படவில்லை. இதனால் சிறுகதைகளில் அவர்கள் அடைந்த வெற்றியை புதிய கவிதை முயற்சியில் அடைய முடியவில்லை. எனினும், பின்னாளில் அறுபதுகளில் புதுக்கவிதை ஓர் இயக்கமாக வளர்ந்து, தமிழ் கவிதை வரலாற்றில் உரிய அங்கீகாரம் பெறுவதற்கான விதை 1934 – 1944 காலகட்டத்தில் தான் விதைக்கப்பட்டது.
“எழுத்து” காலகட்டம்:
கு.ப.ரா (1944), புதுமைப்பித்தன் (1948) இருவரின் மறைவு, ந.பிச்சமூர்த்தியின் “இலக்கியத் துறவு”, புதிய கவிதை முயற்சிக்கு களம் அமைத்துக் கொடுத்த இலக்கிய இதழ்களின் மறைவு, இந்த காலகட்டத்தில் புதிதாக எழுதத்தொடங்கிய படைப்பாளிகளின் முனைப்பின்மை காரணமாக 1944 – 1958 காலகட்டத்தில் புதுக்கவிதை முயற்சியில் ஒரு தேக்கநிலை – இடைவெளி ஏற்பட்டது.
இந்தச்சூழ்நிலையில் “மணிக்கொடி” இதழுடனும், அதன் படைப்பாளிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சி.சு.செல்லப்பாவின் தனித்த முயற்சியில் ஜனவரி 1959ல் “எழுத்து” இலக்கிய மாத இதழ் தொடங்கப்பட்டது. இலக்கிய அபிப்ராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துகளுக்கும் களமாக “எழுத்து” அமைவது போலவே, இலக்கிய தரமான எத்தகைய புது சோதனைகளுக்கும் “எழுத்து” இடம் தரும் என்று முதல் இதழில் சி.சு.செல்லப்பா அறிவித்திருந்தார். இதே காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த சாந்தி, சரஸ்வதி, தாமரை ஆகிய இதழ்கள் புதிய கவிதை முயற்சிகளுக்கு ஓரளவே ஊக்கமளித்தன. 1959ல் சரஸ்வதி ஆண்டு மலரில் எழுதிய கட்டுரையில் “புதுக்கவிதை” என்ற பதத்தை க.நா.சு குறிப்பிட்டுள்ளார். அதுவரை வசன கவிதை, சுயேச்சா கவிதை, கட்டற்ற கவிதை, ப்ரீவெர்ஸ் என்றே புதுக்கவிதை குறிப்பிடப்பட்டு வந்தது.
“எழுத்து” முதல் இதழில் ந. பிச்சமூர்த்தியின் “பெட்டிக்கடை நாரணன்” (1944ல் கிராம ஊழியனில் வெளிவந்த அருமையான கவிதையின் மறுபிரசுரம்), மயன் (க.நா.சு) எழுதிய “கவிதை மற்றும் வர்ணம்” என்ற தழுவல் கவிதையும் சிட்டி, சாலிவாகனன் ஆகியோரின் கவிதைகளும் வெளிவந்தன. ஓராண்டு நிறைவில் எழுத்து இதழானது ஏற்கனவே இருந்த பழைய கவிகளோடு சேர்த்து பல புதியவர்களையும் அறிமுகப்படுத்தி இருந்தது.
டி.கே. துரைசாமி (நகுலன்) – காத்தபானை – இவரின் முதல் கவிதைத் தலைப்பு
சுந்தர ராமசாமி (பசுவய்யா) – “உன் கை நகம்” எனும் இவரின் முதல் கவிதை ஏற்படுத்திய அதிர்ச்சி நீங்க கொஞ்சகாலம் ஆயிற்று
சி.மணி (சி. பழனிச்சாமி) – “முக்கோணம்” என்பது இவரின் முதல் கவிதைத் தலைப்பு.
ம. இளையபெருமாள், கி. கஸ்தூரிரங்கன், தி.சோ. வேணுகோபாலன் ஆகியோரும் “எழுத்தின்” புதிய கவிஞர்கள் பட்டியலில் அடங்குவர்.
இவர்களுக்குப்பின் 1960ல் “நான்” எனும் தலைப்பில் தருமு சிவராமின் (பிரமிள்) முதல் கவிதை வெளியானது.
“ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
ஊரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும் வெளியில்
ஒன்றுமற்ற பாழ் நிறைத்து
உருளுகின்ற கோளமெல்லாம்
அன்று பெற்றுவிட்டவளென்
தாய்!”
என்று தொடங்கும் மரபு வடிவத்தை நினைவூட்டும் கவிதை அது. 1961ல் வைத்தீஸ்வரனின் முதல் கவிதையான “கிணற்றில் விழுந்த நிலவு” வெளியானது. பின்னர் ஜெயகாந்தன் எழுதிய “நீ யார் ?” என்ற கவிதையும் வெளியானது. எழுத்து இதழை நடத்தி புதிய கவிதை முயற்சிகளில் இயங்கி, சக எழுத்தாளர்களின் கவிதைத் தொகுப்புக்களை பிரசுரம் செய்து, என பன்முக தளங்களில் இயங்கியவர் சி.சு.செல்லப்பா. அன்னைத் தமிழுக்கு கிடைத்த அரும்பெரும் கொடை. 1959ல் ஆரம்பித்து 1970 ஜனவரி வரை அவர் நடத்தி வந்த “எழுத்து” மறைய நேர்ந்தது. “இந்தப் பனிரெண்டு ஆண்டு காலத்தில் அதன் பொருளாதார அவதிகளை
அனுபவித்து வைராக்கியமாக நடத்தியும் அதற்கு மேல் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை” என்று தனது பத்திரிக்கை மறைவை மிகுந்த வருத்தத்தோடு குறிப்பிடுகிறார்.
பத்தாண்டுகளுக்கும் மேற்பட்ட இந்தக் காலத்தில் 700க்கும் அதிகமான புதுக்கவிதைகளையும், 20க்கும் மேற்பட்ட நல்ல கட்டுரைகளையும் வெளியிட்டது “எழுத்து”. மேலும், பாரதி – பாரதிதாசன் கவிதை திறனாய்வுகள், சங்க கால கவிதைகளை பற்றிய கட்டுரைகள், மேல் நாட்டுக்கவிஞர்கள் பற்றிய கட்டுரைகள், (டி.எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட், யேட்ஸ், ஆஃடன் லாவரி ஆகியோரின் கவிதை பற்றிய கோட்பாடுகளை வெளியிட்டது) மொழிபெயர்ப்புக்கவிதைகளையும் வெளியிட்டது. காந்தியுகத்தின் அர்ப்பண உணர்வோடும், லட்சிய பிடிவாதத்தோடும் “எழுத்தை” ஒரு இயக்கமாக கட்டமைத்த அபார சக்தி
சி.சு.செல்லப்பாவுடையது. “எழுத்து”க்கு பின் அவ்விடத்தை நிரப்பிக்கொள்ள தாமரை, தீபம், நடை கணையாழி, ஞானரதம்,
சரஸ்வதி, இலக்கிய வட்டம் போன்ற இதழ்கள் முனைந்த போதும், “எழுத்து” விட்டுச்சென்ற பெரும் இடைவெளியை மேற்கூறிய
அத்தனை இதழ்களாலும் நிரப்பவியலாமல் போனது நமது துரதிர்ஷ்டம்.
எழுபதுகளில்:
1970களில் வெளியான இதழ்களில் தரமாக செயல்பட்ட பெருமையுடையவை “கசடதபற” மற்றும் “அஃக்”. இதில் “அஃக்”
பதிப்புக்கும், அச்சுக்கும் தேசிய விருதுகள் பெற்ற சிறுபத்திரிக்கை. அதன் காலத்திற்குப் பின்னரும் இன்றைய காலகட்டத்திலும் எந்த சிறுபத்திரிக்கையுமே தேசிய விருதுகள் எதுவும் பெறவில்லை. மேற்கூறிய இதழ்களில் எழுதியவர்களில் சுந்தர ராமசாமி, பிரமிள், க.நா.சு, ஞானக்கூத்தன், சி.மணி, நா.ஜெயராமன், கலாப்ரியா, ஆத்மாநாம், கல்யாண்ஜி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். 1973ல் குழுவினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக “கசடதபற” இதழ் நிறுத்தப்பட்டு மீண்டும் 1975ல் தொடங்கி 1977ல் வெளியான 42வது இதழுடன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது.
1971ல் கோவையிலிருந்து வெளியீட்டை தொடங்கியது வானம்பாடி என்னும் கவிதை இதழ். அதில் “கசடதபற” இதழை கடுமையாக விமர்சித்து இருந்தார் அக்கினிபுத்திரன். வானம்பாடி கவிஞர்களில் முக்கியமானவர்களாக கருதப்படுகிறவர்கள் புவியரசு, சிற்பி, மீரா, தமிழன்பன், ஞானி, சக்திக்கனல், மு.மேத்தா, பா.கங்கைகொண்டான், அக்கினிபுத்திரன் ஆகியோர். அப்துல் ரகுமான், அபி, கலாப்ரியா, இன்குலாப், கல்யாண்ஜி போன்றவர்களும் “வானம்பாடி” இதழில் எழுதி இருக்கின்றனர். ஆனால், இவர்கள் வானம்பாடி கவிஞர்கள் வரிசையில் சேரவில்லை. “நவ நவமான யுத்திகளில், புதுப்புது உருவ வார்ப்புகளில் சமூகத்தில் நசுக்கப்பட்டவர்களின் நியாயங்களை உள்ளடக்கமாகப் புனையும் இலக்கியவாதிகள் நாங்கள்” என்று (வானம்பாடிகள்) இவர்கள்
தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டதால் எழுத்து, இலக்கியவட்டம், நடை, கணையாழி, கசடதபற, அஃக் போன்ற இதழ்களில்
வெளிவந்த புதுக்கவிதைகளை இவர்கள் கவிதைகளாக ஏற்றுக்கொள்ளவில்லை.
வானம்பாடிகள் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்காக மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் கவிதை புனைவதாகப் பெருமை கொண்டவர்கள் ; இவர்கள், ஆதிக்க சக்திக்களை, சமுதாய ஊழல்களை தரைப்புழுவாய் மிதித்து நசுக்க ஆவேசம் கொண்டு இந்த சமூக அமைப்பையே தலைகீழாக மாற்றிவிடுவதாக நம்பிக்கை கொண்டவர்கள், கவிதையில் என்ன சொல்ல வேண்டும் என்று அக்கறை காட்டிய அளவிற்கு அதன் கலைத்தன்மையைக் குறித்து கவனம் கொண்டிருக்கவில்லை. இதனால் இவர்கள் எழுதியவை மேடை முழக்கங்களாகவும், அரசியல் கோஷங்களாகவும், துணுக்களாகவும் ஒலித்தனவே தவிர,
கவிதைகளாகவில்லை. வானம்பாடிகளில் கவிதையைத் தேடுவது, புதுமைப்பித்தன் ஒரு மதிப்புரையில் கூறியிருப்பது போல்,
“மணல் சோற்றில் கல் பொறுக்கும் வேலை தான்.”. புவியரசுவின் சில கவிதைகள் மட்டுமே விதிவிலக்கு.
வானம்பாடிகள் மானுட கீதமாகத் தொகுக்கப்பட்டு 1973ல் வெளிவந்த “வெளிச்சங்கள்” தொகுதி பற்றி “தெறிகள்” (1975) காலாண்டிதழில் வெளிவந்த வெங்கட் சாமிநாதனின் விமர்சனமான “வானம்பாடிகளின் வெளிச்சங்கள்” கட்டுரையின் கடைசிப்பகுதியை எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
“வானம்பாடிகளின் கவிதைகளை, அவர்களின் எழுத்துகளை எல்லாம் பார்த்தபின் எனக்கு ஒன்று சொல்லத்தோன்றுகிறது. பேச்சளவில் இவர்களிடம் அடிபடும் “சமூகப் பிரக்ஞை” இவர்களது பிரக்ஞையில் உண்மையில் இல்லை. சுய அனுபவத்தில் இருந்து கிளராத இக்கவிதைக் குரல்கள், பூர்ஷ்வா புத்திஜீவிகளின் “பேஷ்”களுக்கும், “ஆஹா”க்களுக்குமாகவே “கலையழகு”,”இலக்கிய நயம்” இவற்றைச் சேர்க்கும் கவிதை தயாரிப்பு முயற்சிகள். இவையெல்லாம், ஓர் உண்மையை எனக்குப் பளிச்சிட்டுக் காட்டுகின்றன. பாட்டாளி துயரம், முதலாளித்துவ சுரண்டல், வர்க்கப் புரட்சி இவைகளில் இவர்களுக்கு அக்கறை இல்லை. இவற்றைக் கருவிகளாக கவிதையில் பயன்படுத்திக்கொண்டு, கவிஞர்கள் என்னும் தங்களுடைய சமூக அந்தஸ்து கலையாமல் பாதுகாத்துக் கொள்கிறார்கள். “வெளிச்சங்கள்” தொகுப்பு இதற்கு சாட்சி.”.
இது கொஞ்சம் கடுமையான விமர்சனம் தான் என்றபோதும் உண்மையில் தீவிரமான சமுதாயப் பிரச்சனைகளை எல்லாம் வானம்பாடி கவிஞர்கள் கோஷங்களாகவும், மிகையுணர்ச்சி வெளிப்பாடுகளாகவும் ஆக்கிவிட்டார்கள். பிரமிள் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருப்பது போல “ரொமான்டிக் புஷ்பங்க”ளாக்கி விட்டார்கள்.
1971ல் நாகர்கோவிலிருந்து வெளிவந்த “சதங்கை” இதழ் இலக்கியத்திற்காக பிரத்யேகமாக வெளிவந்தது. இதில் முக்கியமான புதுக்கவிஞர்கள் பலரும் எழுதியிருக்கிறார்கள்.
1972ல் “ஓர் எழுத்தாயுத மாத ஏடு” மற்றும் “அஃக்” ஆகிய இதழ்கள் வெளிவரத்தொடங்கின. சிற்றிதழ்கள் பெருகியதால் புதுக்கவிதைகளும் நிறையவே வெளிவந்தன.
நீலக்குயில் இதழில் நகுலன் எழுதிய “அஞ்சலி” (குறுங்காவியம்)
தெறிகள் இதழில் கலாப்ரியா எழுதிய “சுயம்வரம்” (குறுங்காவியம்)
கொல்லிப்பாவை இதழில் நகுலன் எழுதிய “மழை, மரம், காற்று” (நெடுங்கவிதை)
கொல்லிப்பாவை இதழில் கலாப்ரியா எழுதிய “ஞானபீடம்” (குறுங்காவியம்)
யாத்ரா இதழில் பிரமிள் எழுதிய “ஊர்த்துவ யாத்ரா அல்லது மேல்நோக்கிய பயணம்” (குறுங்காவியம்)
இதே காலகட்டத்தில் தான் ஏராளமான கவிதைத் தொகுப்புகள் வெளியாயின. அதில் 32 கவிஞர்களின் 42 கவிதைகள் அடங்கிய “நாற்றங்கால்” (1974) கவிதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்கது. இந்தக் காலக்கட்டத்தில் புதுக்கவிதைகளிலும் போலிகளின் எண்ணிக்கை அதிகமாயிற்று. சமத்காரத் துணுக்குகள், வெற்றுக்கோஷங்கள், அலங்காரச் சொல்லடுக்குகள் போன்றவை புதுக்கவிதை போல வரி பிரித்து எழுதிவிட்டால் கவிதையாகிவிடும் என்ற மனப்பான்மையும் வளர்ந்தது. தவறான புரிதல்களுடன் புதுக்கவிதையை அணுகிய காரணத்தால் துணுக்குகளும், புதிர்களும், விடுகதைகளும் கூட “புதுக்கவிதை” என்ற பெயர்தாங்கி வெளியாயின. கணையாழி, தீபம் இதழ்களும் இதற்கு விதிவிலக்கல்ல. புதுக்கவிதையின் முன்னோடிகளை பின்பற்றி அதன் நோக்கத்தையும், குணாம்சங்களையும் உள்வாங்கிக்கொண்ட புதிய கவிஞர்களான கலாப்ரியா, அபி, தேவதேவன், நாரணோ ஜெயராமன், வண்ணநிலவன், விக்கிரமாதித்யன், ஆத்மாநாம் போன்றவர்களும் 70களில் புதுக்கவிதைக்கு வளம் சேர்த்தனர். சமகால அரசியல், சமுதாய பிரச்சனைகளை கவிதையாக்கிய முக்கியமான கவிஞர் ஆத்மாநாம். நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்ட சமயத்தில் அதற்கு எதிரான தனது உணர்வுகளை கவிதையில் இயல்பாக குறிப்புணர்த்தினார். “என் அறை” என்னும் அந்த கவிதையின் கடைசிப்பகுதி.
“புரட்சிக்காய்
காத்திருந்து கொட்டாவி விடும்
புத்திசாலி நடுத்தரங்கள்
வீரமாய் மார்தூக்கி
முதுகைச் சொறியும்
புத்திசாலிப் பன்றிகள்.
முதலில் ஒழிப்போம்
நம் புத்திசாலித்தனம்
நிர்வாணமாய் நிற்போம்
நீரலைகள் கரைகளிலே”
தொகுப்பு – காகிதத்தில் ஒரு கோடு, ஆத்மாநாம்.
நூல் ஒப்பீடுகள்:
1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்
2. புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்
3. காலம் கலை கலைஞன் – சி.மோகன்
9 பின்னூட்டங்கள்
Comments feed for this article
மே 5, 2006 இல் 7:02 பிப
டிசே
நெடிய வரலாறு கொண்ட தமிழ்க்கவிதை மரபில் குறுக்காய் வெட்டியெடுத்து ஒரு குறிப்பிட்ட காலக்கவிதைகள் பற்றிய நல்லதொரு பதிவு இது. நன்றி.
…..
வானம்பாடிகளின் ஊடாகத்தானே மனுஷ்யபுத்திரன் மற்றும் பிரபஞ்சன் (ஒரு புனைபெயரில் எழுதியதாய் கேள்விப்பட்டிருக்கின்றேன்) போன்றவர்களும் வெளிவந்ததிருக்கின்றார்கள் என்பது ஒரு குறிப்புக்காய்.. இன்றையக் காலக் கவிதைகள் மீண்டும் உரைநடைக்கு(அல்லது வசனகவிதையாய்) அண்மையாய் போய்க்கொண்டிருப்பதை நீங்களும் அவதானித்திருக்கக்கூடும்.
….
/…நம்மை அழைத்துச்செல்ல படைப்பாளி விழைகிறான். அவன் காட்டும் திசைகளில்…/
இப்பதிவுக்கு அவசியமில்லையெனினும் சற்று உறுத்தலாய்த் தெரிந்த விடயம் ஒன்று. படைபாளிகள் ஆண், பெண் மற்றும் அரவாணிகளாய் இருக்கும் காலகட்டத்தில் ‘அவன்’ என்று எழுதிக்கொண்டிருப்பதைத் தவிர்க்கலாமே.
மே 5, 2006 இல் 7:38 பிப
janani
அன்பு டிசே.
தங்களின் பின்னூட்டம் கண்டேன். மிக்க நன்றி நேர்மையாய் வெளிச்சொன்னதற்கு. வானம்பாடிகளின் ஊடாக மனுஸ்யபுத்திரனும், பிரபஞ்சனும் அறியப்படவில்லை. மாறாக மனுஸ்யபுத்திரனின் நுழைவு எண்பதுகளின் துவங்க வானம்பாடிகளின் காலம் எண்பதுகளில் முடிகிறது. நவீனக் கவிதைகளின் இருபத்தியாறு ஆண்டுகளின் செயல்பாடுகள் (1980-2005) இக்கட்டுரைத்தொடரின் இறுதி பாகமாக எழுத தலைப்பட்டுள்ளேன்.
படைப்பாளி பற்றிய காப்காவின் கூற்று மற்றும் அதன் விளக்கப்பாடுகள் கவிஞனை குறிக்க மற்றும் இக்கட்டுரைக்குள் வாசகனைக் கொண்டுவரும் ஒரு முயற்சியே. மேலும் அவன் என்றக் கூற்று பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டிருப்பதால் அது ஆண்பாலுக்கு மற்றும் பொருந்தும் என்றாகாது. நீங்கள் குறிப்பிட்ட பெண், மற்றும் அரவாணி படைப்பாளிகளுக்கும் அது பொருந்தும், எனது கட்டுரையின் ஒவ்வொரு இடத்திலும் அவன்/அவள்/அரவாணி என்று எழுதுவது தேவையில்லாததென நான் கருதுகிறேன்.
மே 5, 2006 இல் 8:10 பிப
டிசே
தகவலுக்கு நன்றி.
……
யமுனா ராஜேந்திரன், தானும், மனுஷுயபுத்திரனும் இன்னும் சிலரும் வானம்பாடிகளின் பாதிப்பிலிருந்து வந்ததாய் எழுதி வாசித்திருந்தேன். அந்தக்காலத்தில் ஒவ்வொரு பெயருடன் புத்திரன் என்று இணைப்பது ஒருவித மோஸ்தராக இருந்ததாயும், தான் அந்த (யமுனா புத்திரன்?) என்று பெயர் வருவும் மாற்றிவிட்டேன் என்றும் மனுஷ்யபுத்திரன் இன்னும் அந்தப்பெயரோடு இருக்கின்றார் என்றும் ‘உயிர்நிழல்’ சஞ்சிகையில் எழுதிய நினைவு. மனுஷுபுத்திரனும் கிட்டத்தட்ட இதே மாதிரியாக எங்கோ ஒரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். தனக்கு மனுஷ்ய புத்திரன் என்ற பெயர் -தான் எதோ அதீத மனித நேயத்துடன் இருப்பது போன்ற அசவுகரியத்தைத் தந்தாலும் தொடர்ந்து பாவித்த பெயரை மாற்றுவது அவ்வளவு சுலபமில்லை என்பதால் இந்தப்பெயரோடு இருப்பதாய் கூறியிருந்தார். சிலவேளைகளில் எனது வாசிப்பு பிழையாகவும் இருக்கலாம்.
…..
/ஒவ்வொரு இடத்திலும் அவன்/அவள்/அரவாணி என்று எழுதுவது தேவையில்லாததென நான் கருதுகிறேன். /
உண்மைதான். இப்படி எழுதுவது (அவன்/அவள்/அரவாணி) வாசிப்பவருக்கும் அசவுகரியத்தைக் கொடுக்கும். ஆனால் ‘அவர்’ என்ற பொதுப்படையாக பாவிக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நன்றி.
மே 5, 2006 இல் 9:53 பிப
டிசே
தகவலுக்கு நன்றி.
……
யமுனா ராஜேந்திரன், தானும், மனுஷ்ய புத்திரனும் இன்னும் சிலரும் வானம்பாடிகளின் பாதிப்பிலிருந்து வந்ததாய் எழுதி வாசித்திருந்தேன். அந்தக்காலத்தில் ஒவ்வொரு பெயருடன் புத்திரன் என்று இணைப்பது ஒருவித மோஸ்தராக இருந்ததாயும், தானும் அந்த (யமுனா புத்திரன்?) பெயர் வருவதாக வைத்திருந்ததாயும் பிற்காலத்தில் மாற்றிவிட்டேன் என்றும், மனுஷ்ய புத்திரன் இன்னும் அந்தப்பெயரோடு இருக்கின்றார் என்றும் ‘உயிர்நிழல்’ சஞ்சிகையில் யமுனா ராஜேந்திரன் எழுதியதாய் நினைவு. மனுஷ்ய புத்திரனும் கிட்டத்தட்ட இதே மாதிரியாக எங்கோ ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கின்றார். தனக்கு மனுஷ்ய புத்திரன் என்ற பெயர் -தான் எதோ அதீத மனித நேயத்துடன் இருப்பது போன்ற அசவுகரியத்தைத் தந்தாலும் -தொடர்ந்து நீண்டகாலமாய்ப் பாவித்த பெயரை மாற்றுவது அவ்வளவு சுலபமில்லை என்பதால் இந்தப்பெயரோடு இருப்பதாய் கூறியிருந்தார். சிலவேளைகளில் எனது வாசிப்பு பிழையாகவும் இருக்கலாம்.
…..
/ஒவ்வொரு இடத்திலும் அவன்/அவள்/அரவாணி என்று எழுதுவது தேவையில்லாததென நான் கருதுகிறேன். /
உண்மைதான். இப்படி எழுதுவது (அவன்/அவள்/அரவாணி) வாசிப்பவருக்கும் அசவுகரியத்தைக் கொடுக்கும். ஆனால் ‘அவர்’ என்று பொதுப்படையாக பாவிக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நன்றி.
பி.கு: மேலே அவசரமாய் எழுதிய பின்னூட்டத்தில் தவறுகள் நிறைய இருப்பதால் அதை அழித்துவிடவும். நன்றி
மே 6, 2006 இல் 5:27 முப
கில்லி - Gilli » புதுக்கவிதை - எழுத்தும் அதன் நீட்சியும்
[…] புதுக்கவிதை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் […]
மார்ச் 19, 2008 இல் 1:46 பிப
திலகபாமா
யாத்ரீகனுக்கு
திலகபாமா எழுதுவது . கட்டுரை அருமை.எழுத்து பற்றி சொல்லும் போது சி. கனகசபாபதியை அன்றைய இலக்கீயவாதீகள் மறந்து விட மாட்டார்கள். சி.சு.செல்லப்பா புதுக் கவிதைக் கான இடத்தை எழுத்து தரும் என அறிவித்த போது, வருகின்ற கவிதைகள் பற்றி எழுதப் படும் விமரிசனம் கவிதை இயங்கியலில் முக்கிய பங்காற்றும் என்று உணர்ந்து சி. க அப்பணியை செய்வது என்று தீர்மாணித்து , தொடர்ன்ந்து எழுத்து வில் விமரிசனக் கட்டுரைகள் சி. க வை எழுதச் சொல்ல்லியிருக்கின்றார். பல்கலைக் கழகங்களுக்குள் புதுக்கவிதையையும் இலக்கிய வாதிகளையும் கொண்டு சேர்த்த மிகப்பெரும் பங்கு சி. க வினது .இதுவரை வெளியே அறியப் படாத இன்னுமொரு தகவல் சி. க நிறைய கவிதைகள் எழுத்தியிருக்கின்றார்.ஆனால் வெளியே விமரிசகராக மட்டுமே அறிய தந்திருக்கின்றார்
புதுக் கவிதை வரலாற்றில் முக்கிய இடம் சி. கனகாசபாபதிக்கு உண்டு
மார்ச் 19, 2008 இல் 1:48 பிப
திலகபாமா
சி. க வின் எழுத்துக்கள், கட்டுரைக்கள் “காவ்யா” வெளியீடாக வந்திருக்கின்றது அன்னாரது மறைவுக்குப் பின்னர்
மார்ச் 19, 2008 இல் 4:44 பிப
janani
அன்புடன் பாமா அவர்களுக்கு, தங்களின் வருகைக்கும் விமரிசனத்துக்கும் நன்றி.திரு.சி.கனகசபாபதி, நகுலன்,பேராசிரியர்.ஜேசுதாசன்,கா.நா.சு(சமயங்களில் சி.சு.செல்லப்பா)கூடிப்பேசிய தினங்களும்,எழுதிய விமர்சனங்களும் கண்டிப்பாக கவிதையின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றியுள்ளதை யாரும் மறுக்கமுடியாது.என் கட்டுரையில் சில பெயர்கள் விடுபட்டு போயிருக்கலாம், ஆனால் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்தவிதமான கருத்துப் பிசகிற்கும் இடம்கொடுக்காது என நம்புகிறேன். நன்றி.
சி.கனகசபாபதி அவர்களின் விமர்சனங்களுக்கும் கட்டுரைகளுக்கும் தற்கால இலக்கிய ஆளுமைகளை உருவாக்கியதில் (அந்த ஆளுமைகளே மறுத்தாலும்) பங்கு உண்டு. தமிழிலக்கியத்தில் ஆர்வமுள்ள எந்த ஒரு வாசகருக்கும் அவர் உவப்பானவரே.
மார்ச் 21, 2008 இல் 11:37 முப
திலகபாமா
நன்றி