எனக்குச் சொற்களை மிகவும் பிடிக்கும். பேராசையுடன் சொற்களைப் பிடித்து என் கவிதையில் சேகரித்து வைப்பேன். பிரபஞ்சம் அணுக்களால் அல்ல, சொற்களால்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
– பாப்லோ நெருதா
எண்பதுகள்- தொண்ணூறுகளில்
சிறுபத்திரிக்கைகளின் பெரும்பான்மையான பங்களிப்புகளால் எண்பதுகள் கவிதை பரப்பில் வளம் சேர்த்தன. ழ, ஸ்வரம், மீட்சி, லயம், காலச்சுவடு, கனவு, முன்றில், புதிய நம்பிக்கை, மையம், கிரணம், நீலமலைப் பனிமலர் போன்றவை அவற்றுள் சில. புதுக்கவிதையில் படிமங்கள் – குறியீடுகளின் அதீதமான பிரயோகங்கள் தவிர்க்கப்பட்டு நேரடியாக அனுபவங்களை உணர்த்தும் போக்கு எண்பதுகளில் வலுவடையத் தொடங்கியது. புதுக்கவிதை வெளியீட்டில் அகவயப்பார்வை, புறவையப்பார்வை என்று எழுபதுகளில் காணப்பட்ட பெரும் இடைவெளி எண்பதுகளில் குறையத்தொடங்கியது. எண்பதுகளின் இடைக்காலம் வரையிலான புதுக்கவிதையில் அகநோக்குப்பார்வையும் புறநோக்கு பார்வையும் பிரதானமான கண்ணோட்டங்களாக நிலவின. எண்பதுகளின் இறுதியில் ஒன்றிணையத்தொடங்கி தொண்ணூறுகளில் புதிய கண்ணோட்டமாக உருவானது என்று புதுக்கவிதையின் போக்கை துல்லியமாக கணிக்கிறார் சுகுமாரன்.

“எண்பதுகளில் அகமனக் கவிதையாளர்கள் சமூகத்தை நோக்கி வந்திருப்பதும், தீவிர இடதுசாரி போக்கு தணிந்திருப்பதும் மாற்றங்களாய் தெரிகின்றன. மரபு கவிதை ஒதுக்கப்பட்ட நிலை தெளிவாகின்றது. சொல்லுக்கு அப்பாற்பட்டவைகளை சிறைபிடிக்கும் முயற்சிகளும் புலனாகின்றன.” (சிற்பி கட்டுரைகள்).

நகுலன் – ஐந்து, சுருதி, கோட்ஸ்டாண்ட் கவிதைகள்
பசுவய்யா – யாரோ ஒருவனுக்காக
பிரமிள் – மேல் நோக்கிய பயணம்
ஞானக்கூத்தன் – சூரியனுக்கு பின் பக்கம், கடற்கரையில் சில மரங்கள்
ஆத்மாநாம் – திடீர் மறைவிற்கு பிறகு வெளியான ஆத்மாநாம் தொகுப்பு, ஆத்மாநாம் கவிதைகள் (பிரம்மராஜன் தொகுத்தது)
கலாப்ரியா – எட்டயபுரம்
பிரம்மராஜன் – அறிந்த நிரந்தரம், வலி உணரும் மனிதர்கள், ஞாபகச் சிற்பம்
தேவதேவன் – மின்னற்பொழுதே தூரம், குளித்துக் கரையேறாத கோபியர்கள், மாற்றப்படாத வீடு
விக்ரமாதித்யன் – ஆகாசம் நீல நிறம், ஊருங்காலம், உள்வாங்கும் உலகம், எழுத்து சொல் பொருள்
ஆகிய கவிதை தொகுதிகளும் சிறப்பான கவிதை வீச்சுடன் எழுதத்தொடங்கியவர்களாக உமாபதி, சுகுமாரன், ராஜசுந்தரராஜன், கல்யாண்ஜி, சமயவேல், ரா. ஸ்ரீனிவாஸன், அபி, ஆனந்த், தேவதச்சன், ந.ஜெயபாஸ்கரன், பிரதீபன், பாதசாரி, குமாரசெல்வா ஆகியோரைக் குறிப்பிடலாம். கணையாழி பத்திரிக்கையில் 1965 முதல் வெளியான கவிதைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பான கணையாழி கவிதைகள் 1984ல் வெளிவந்தது.

90களில் சிற்றிதழ்களின் வெளியீட்டில் ஒரு மந்தநிலை ஏற்பட்டது. பெரும்பான்மையான இதழ்கள் பல்வேறு காரணங்களால் வெளியீட்டை நிறுத்திக்கொண்டன. ஆனால் கவிதைத் தொகுதிகளின் வெளியீடு முன்பை விட மிகவும் அதிகமானது. எண்பதுகளில் அறிமுகமாகி 90களில் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களாக மலர்ந்தவர்களில் யூமா. வாசுகி, எம். யுவன், மனுஷ்ய புத்திரன், உமா மகேஸ்வரி, இளம்பிறை, ப.கல்பனா, கனிமொழி ஆகியோரை முக்கியமாக சொல்லலாம். 90களில் அறிமுகமான கவிஞர்களில் முக்கியமானவர்களாக வி.அமலன் ஸ்டேன்லி, க. மோகனரங்கன், சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி, மாலதி மைத்ரி, சங்கரராம சுப்ரமணியன் போன்றோரைச் சொல்லலாம். இவர்கள் தங்கள் அனுபவங்களை செய்நேர்த்தியுடனும் புதிய கோணத்திலும் சுயமாக கைகூடிய கவிதை மொழியிலும் வெளிப்படுத்தியுள்ளனர்.
எண்பதுகள் – தொண்ணூறுகளில் கவிதைப் போக்கில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று பெண்களின் பங்களிப்பு. முன்பெப்போதையும் விட இந்த காலகட்டத்திலேயே பெண்கள் அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதத் தொடங்கினர்.
கவிதையின் புதுமொழி பேசும் பெண்கவிகள்.

2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ்கவிதை வரலாற்றில் மிகப்பழமையான சங்ககால கவிதைகள் தொடங்கி பெண்கவிஞர்களின் பங்களிப்பு ஓரளவு தான் இருந்து வந்துள்ளது. பிந்தைய காலகட்டங்களை விடவும் சங்க காலத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளதை நாம் அறியமுடியும். சங்கப்பாடல்கள் 2,381ஐ எழுதிய 473 கவிஞர்களில் சுமார் 30 பேர் பெண்கள். சங்க காலத்தில் ஔவையாரும் அவருக்குப்பின் காரைக்கால் அம்மையார், ஆண்டாள் ஆகியோரும் மிக முக்கியமான கவிஞர்கள்.
“நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்” என்று தமிழ் கவிதையில் முதன்முதலில் பெண் சார்ந்த ஆண் ஆதிக்கப் பார்வைக்கு எதிரான கலகக்குரல் எழுப்பிய பாரதியின் கவிதை மரபு, அவரது சம காலத்திலும் அவருக்கு பின்னரும் கூட பெண்கவிஞர்கள் யாராலும் தொடரப்படாதது ஆச்சரியமான விஷயம் தான். புதுக்கவிதையின் மறுமலர்ச்சி காலமான எழுத்துப் பத்திரிக்கையின் காலத்திலும் பெண் கவிஞர் இரா. மீனாட்சி ஒருவர் தான் அதில் தொடர்ந்து எழுதியவர் என்று தெரிகிறது. 40 ஆண்டுகளாக எழுதிவரும் இவரது கவிதைகளில் பெண்ணிய கருத்துருவம் (சமத்துவம் கோரும்) தீவிரம் கொள்ள வேண்டிய வாழ்க்கைச்சூழல் இவருக்கு வாய்த்திருந்த போதிலும் அத்தகைய பார்வை இவர் கவிதைகளில் வெளிப்படவில்லை. இவரின் முழுக்கவிதைகள் அடங்கிய “மீனாட்சி கவிதைகள்” தொகுப்பு 2002ல் வெளிவந்துள்ளது. புதுக்கவிதையில் பெண்களின் பங்கேற்பு 80களின் பிற்பகுதியில் தான் அதிகமும் தொடங்கியது எனலாம்.
1970 – நெருஞ்சி – இரா. மீனாட்சி
1978 – சுடுபூக்கள் – இரா. மீனாட்சி
1978 – பனியில் பட்ட பத்துமரங்கள் – திரிசடை
1982 – காற்றின் சந்தேகம் – கி. விஜயலட்சுமி
1983 – தீபாவளிப் பகல் – இரா. மீனாட்சி
1988 – புதையுண்ட வாழ்க்கை – எஸ். சுகந்தி சுப்ரமணியன்
1990 – நட்சத்திரங்களின் நடுவே – உமா மகேஸ்வரி
பின்னர் ஒரு இடைவெளிக்குப்பின் 90களில்
மௌனக்கூடு, நிசப்தம் – இளம்பிறை
கருவறை வாசனை – கனிமொழி
தீயுறைத் தூக்கம் – பெருந்தேவி
பார்வையிலிருந்து சொல்லுக்கு – ப. கல்பனா
மழை பற்றிய பகிர்தல்கள் – சே. பிருந்தா
வரிக்குதிரை – மாலதி
ஆகிய தொகுப்புகள் வெளிவந்தன.
ரிஷி, ரெங்கநாயகி, சல்மா, கிருஷாங்கினி, அ. வெண்ணிலா, வத்சலா, குட்டி ரேவதி, தேன்மொழி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி ஆகியோர் 90களின் ஆரம்பத்தில் எழுதத்துவங்கிய போதும் இவர்களது கவிதைதொகுப்புகள் 2000த்தின் ஆரம்பத்திலேயே வெளிவந்தன. மேலும் தமிழகத்தின் நவீன கவிதைச்சூழலில் பெண்கவிஞர்கள் குறித்தான கவனிப்பும் விமர்சனங்களும் 2000த்திலேயே அதிகமும் வெளிவரத்தொடங்கின. இந்த காலக்கட்டத்தில் வெளியாகத்துவங்கிய, வெளியாகி நின்றுவிட்ட, வெளியாகிக்கொண்டிருக்கிற புனைகளம், காலச்சுவடு, தாமரை, நவீன விருட்சம், புதிய கோடாங்கி, மழை, தீராநதி, கணையாழி, தொணி, தலித் முரசு, பன்முகம், அட்சரம், பனிக்குடம், உயிர்மை, இந்தியா டுடே, குதிரை வீரன் பயணம், புது எழுத்து, வடக்கு வாசல், முன்றில் ஆகிய இதழ்களில் அதிக பெண்கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. 80களின் பிற்பகுதிகளில் எழுதத்தொடங்கிய ரிஷி (ரிஷி கவிதைகள் -2002), ரெங்கநாயகி (ஸ்னேகித வனம் – 2002) கவிதைத்தொகுதிகளுடன் 90களில் எழுதத்தொடங்கிய திலகபாமா, அ.வெண்ணிலா, குட்டி ரேவதி, வைகைச்செல்வி, சுகிர்தராணி, தேன்மொழி, சல்மா, மாலதி மைத்ரி, மைதிலி ஆகியோரின் கவிதைகளும் இந்த கால கட்டத்திலேயே வெளிவந்தன.
பெண்ணுடலை வர்ணிக்கும் கவிதை மரபிற்கு எதிரானதாகவே பெண்ணின் உடலை ஒரு போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்கச் சமுதாய மனப்பான்மைக்கு எதிரானதாகவே இன்றைய பெண்கவிஞர்கள் மனவலிகளுடன் அவர்களின் உடல் இயற்கை சார்ந்த பிரத்யேகமான அவஸ்தைகளையும், வலிகளையும், பால் உணர்வுகளையும் கவிதைகளில் வெளிப்படுத்துகின்றனர். கூடவே குழந்தைகளின் மீதான தாய்மையின் பிணைப்பும் உரிமையும். இத்தகைய கவிதைகளிலேயே கவிதை மொழியிலிருந்து தனித்தியங்கும் பெண்கவிமொழியை நாம் இனம் காண முடியும். மேலும் இத்தகைய வலிகளையும் உணர்வுகளையும் மட்டுமே பெண்கவிஞர்கள் தங்கள் கவிதைகள் முழுக்க தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டிருக்கவும் முடியாது. அவர்கள் கவிதைகளில் வெளிப்படும் ஒரு சிறிய கூறு மட்டுமே இத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்தும் போக்கு. எனவே இத்தகைய கவிதைகளில் தனித்துவமாக வெளிப்படும் பெண்களுக்கேயான கவிமொழி அவர்களின் ஒட்டுமொத்தக் கவிதைகளிலும் வெளிப்படுவதாக சொல்லமுடியாது. ஒரு கவிஞர் பெண் என்று அறியப்படுவதாலோ அவர்களது கவிதையில் வரும் “நான்” ஒரு பெண் என்பதாலோ, சில கவிதைகளில் பெண்களுக்கு மட்டுமேயான மனவலி, உடல் சார்ந்த வலிகளும், அவர்களுக்கேயான தாய்மையுணர்வும் வெளிப்படுகின்றன என்பதாலோ அவர்கள் கவிதைகள் அனைத்துமே “பெண் கவிமொழி” யில் எழுதப்படுபவையாக கூறிவிட முடியாது. இந்த வலிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கவிதைகளை தவிர்த்துப்பார்த்தால், ஏனைய பொதுமையான உணர்வுகளை வெளிப்படுத்தும் போது அவர்களின் கவிதைமொழி , பொதுவானதாகவே இருக்கிறது. அதுவே கவிதையின், கவிதை உலகின் மொழியாகும்.
கவியுலகில் “தலித்” என்ற வேதனையின் குறியீடு:
50களில் மராத்தி,குஜராத்தி, கன்னட மொழிகளில் எழுற்சி அடைந்த தலித் இயக்கம் தமிழில் 80களின் பிற்பகுதிகளில் தான் பிரக்ஞைபூர்வமாக அறிமுகமானது. பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் போன்ற இலக்கிய வகைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் வெளிப்பட்ட போதிலும், மணிக்கொடி காலத்தில் இருந்தே நவீன தமிழ் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் துக்கங்கள் சிறுகதை, நாவல்களில் சில சந்தர்ப்பங்களில் வெளிப்பட்ட போதும், சமூக வரலாற்று இலக்கிய பிரக்ஞையுடன் தமிழில் விளிம்புநிலை மக்கள் இலக்கியம் அல்லது தலித் இலக்கியம் எழுதப்பட்டது 80களின் பிற்பகுதியின் தான்.
சாதியத்தை கடந்த விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காக சுயமரியாதையை மீட்டெடுப்பதற்காக தொடங்கப்பட்ட தலித் விடுதலை அமைப்புகள் தமிழில் தலித் இலக்கியம் தோன்றி வளரப் பெரும் உந்துதலாக அமைந்தன. “ஒரு சாதியை குறிக்கின்ற ஒன்றாக ‘தலித்’ என்கிற சொல்லை சுருக்கிவிடக்கூடாது. தலித் என்பது வேதனையின் குறியீடாக இருக்கவேண்டுமே தவிர சுரண்டலின் குறியீடாக ஆகிவிடக்கூடாது. சுரண்டல் மற்றும் கொடுமை, அக்கிரமங்களை எதிர்க்கிற குறியீடாக மலரவேண்டும். அவமானம், எதிர்ப்பு, பாதுகாப்பின்மை ஆகிய பொருளை தலித் என்ற சொல் தரவேண்டும்” என்கிறார் சித்தலிங்கையா (நிறப்பிரிகை, 1994).
தலித் இலக்கியம் தலித்துகளால் தான் எழுதப்படவேண்டும். தலித் விடுதலையில் அக்கரை கொண்டுள்ள பிற சாதியினரும் எழுதலாம் என்கிற இருவித கருத்தாக்கங்கள், தலித் படைப்பாளிகள்-சிந்தனையாளர்களிடையே நிலவி வருகின்றன.
விளிம்புநிலை மக்கள் காலம் காலமாக மேல்சாதியினரால் அனுபவித்து வரும் அடக்குமுறைகள், அவமதிப்புகளுக்கு எதிரான போர்க்குரலாக, விடுதலைக்குரலாக தலித்துகளின் ஒட்டுமொத்த எதிர்ப்புணர்வு அவர்களின் எழுத்துக்களில்-படைப்புகளில் வெளிப்பட்டது. மேல் சாதியினரின் கடவுள்கள்,சடங்காசாரங்கள், பழக்கவழக்கங்களுக்கு மாறாகத் தங்களுடைய குலதெய்வங்கள், சடங்கு முறைகள், பழக்கவழக்கங்களை தங்களது இருப்பை – சுயகௌரவத்தை அடையாளப்படுத்தும் வகையில் தங்களது பேச்சு மொழியில் பதிவு செய்தனர். தங்களை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி அவமானப்படுத்தியவர்கள், அவர்களது இலக்கியப் படைப்புகளிலும் தீண்டத்தகாத வார்த்தைகளாக கருதி ஒதுக்கியவற்றை தலித்துக்கள் தங்கள் வாழ்க்கையை அடையாளப்படுத்தும் வகையில் எவ்வித தயக்கமும் இல்லாமல் பயன்படுத்தினர். இவ்வகையில் மேல்சாதியினரின் “புனிதங்களை” எல்லாம் உடைத்துச்சிதைத்து தங்களது விடுதலையை – கௌரவமான சுய இருப்பை மீட்டெடுக்க முனைகின்றனர். மேல்சாதியினரின் ஒட்டுமொத்தமான இலக்கிய மதிப்பீடுகளுக்கு எதிராக கலகம் செய்யும் எழுத்து இவர்களுடையது.
தலித் படைப்பாளிகளின் சிறுகதை, நாவல்கள் அளவில் அவர்களின் கவிதைகள் தமிழ்ச்சூழலில் கவனம் பெறவில்லை. கண்மணி குணசேகரன், தலையாரி, இராஜமுருகுபாண்டியன், என்.டி.ராஜ்குமார், பிரதீபா ஜெயச்சந்திரன், ம. மதிவண்ணன், விழி.பா.இதயவேந்தன், அபிமானி, அன்பாதவன், அழகிய பெரியவன், தய். கந்தசாமி, ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் தலித் இலக்கிய பார்வையுடன் கவிதைகள் எழுதுகின்றனர்.
இவர்களில் தலையாரி, இராஜமுருகுபாண்டியன், ம.மதிவண்ணன், தய். கந்தசாமி, கண்மணி குணசேகரன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் கவிதைகளில் தலித் இலக்கியத்தின் பொதுவான குணாம்சங்களாக சொல்லப்படுகின்ற பண்பாடு, எதிர்-அழகியல், மரபுகளை மீறுதல், கலைத்துப்போடுதல், இதுவரையிலான கோபத்தின் வெளிப்பாடுகளை அதிகம் காணவியலும். என்.டி. ராஜ்குமாரின் கவிதைகள் ஒடுக்கப்பட்டோரின் கோபங்களையும் அவலங்களையும் பால் உணர்வின் தீவிரத்தையும் வெளிப்படுத்தினாலும் மாந்திரீக மொழி சார்ந்த வெளிப்பாடு மற்றும் குலதெய்வ வழிப்பாட்டு மரபுகளின் மீதான பிடிப்புடன் அமைந்திருக்கக் காணலாம். விழி. பா. இதயவேந்தன் சிறுகதைகளில் தலித்துகளின் பிரச்சனைகள் முழுமையாக கையாளப்பட்டிருக்க, கவிதைகளில் ஒன்றிரண்டு தவிர்த்து ஏனையவை பொதுவானவையாகவே உள்ளன. அன்பாதவன், அழகிய பெரியவன், வெ. வெங்கடாசலம் ஆகியோரின் கவிதைகளும் இவ்வகையிலானவையே.
கவிதைகளுக்கென இருந்து வந்திருக்கும் அழகியல் கோட்பாடுகள் அனைத்தையும் மறுதலித்து தலித் இலக்கியத்திற்கான எதிர்-அழகியலை கட்டமைப்பதாக இவர்கள் எழுதும் கவிதைகளில் கவிதைக்கு உகந்ததாக இது வரையிலும் கருதப்படாத பேச்சுவழக்குகளையும் கையாளுகின்றனர். கவிதை மொழிக்கு புதிய வளம் சேர்க்கும் முயற்சியாக இதை கருதலாம். ஆனால் பெரும்பான்மையான கவிதைகளில் எதிர்-அழகியலை கட்டமைக்கும் முயற்சி என்ற போதிலும் அதனளவில் கவிதைக்கான குறைந்த பட்ச அழகியல் கூட இல்லாத கோபாவேச சொல்லடுக்குகளாகவே தோற்றமளிக்கின்றன (விதிவிலக்கு அழகிய பெரியவன் கவிதைகள்).
நமது நீண்ட கவிதை வரலாற்றில் நீதி இலக்கியம், சைவ இலக்கியம், வைணவ இலக்கியம், புத்த மத இலக்கியம், சமண இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம், கிருஸ்தவ இலக்கியம், நாட்டார் இலக்கியம்,முற்போக்கு இலக்கியம் என்கிற பாகுபாடெல்லாம் சில வசதிகள் கருதியும் இலக்கியப் போக்கின் புரிதல் கருதியுமான அடையாளப்படுத்தலுக்காக மட்டும் என்பதற்கு மேலான இலக்கிய தகுதி சார்ந்த விஷயமல்ல. அடையாளம் எதுவாயினும், எதனைப்பற்றியதாயினும் அது கவிதையாக இருக்கிறதா என்பதே முதன்மையானதாகிறது. மற்ற அடையாளப்படுத்தல்கள் எல்லாம் ஒரு வகையில் இலக்கியத்திற்கு புறம்பானவைதான்.
கட்டுரையின் இறுதியாக:
புதுமைப்பித்தன் கூறியபடி “கவிதை மோகனமான கனவு”, யதார்த்தத்தின் புழுதியில் காலூன்றி நின்று இந்த பிரபஞ்சத்தையே அறிய முனையும் கனவு. எனவே பிரபஞ்சத்திற்குட்பட்ட எல்லாமும் இன்றைய கவிதைக்கான விஷயங்களாகின்றன.
அனுபவங்களின் சாரத்தை உணர்த்துவதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுவதாக இன்றைய கவிதை வெளிப்படுகிறது. விவரிக்கும் போது அது கவிதையல்லாத ஒன்றாகிவிடக்கூடும். “உணர்த்துதல்” மொழி சார்ந்த விஷயம் .ஆதலால் வார்த்தை பிரயோகத்தில் இன்றைய கவிஞன் தீவிர கவனம் கொள்கிறான். பேச்சு வழக்கில் உள்ள சொற்களைக் கூர்மைப்படுத்துகிறான். பொதுவான மொழியிலிருந்து தனக்கான கவிதை மொழியைக் கண்டடைகிறான்.
விவரிப்பை விடுத்து உணர்த்துவதை முதன்மைபடுத்துவதால் இன்றைய கவிதை கச்சிதமான அமைப்புக் கொண்டதாகிறது. இதனால் கவிதை பன்முகத்தன்மை கொண்டதாகவும் ஆகிறது. அதே சமயம், பன்முகத்தன்மை கொண்டதுதான் நல்ல கவிதை என்றும் ஆகிவிடாது. அவ்வாறு அல்லாமல் நேரடியான வெளிப்பாடாகவும் இன்றைய கவிதைகள் அமைகின்றன.
கவிதைக்கு பல முகங்கள், பல குரல்கள் உண்டு. இது கவிஞனின் வாழ்க்கை பின்னணி, அவனது ஆளுமை சார்ந்தது. எனினும் அந்த குரல் ஜீவன் மிகுந்ததாக வெளிப்படவேண்டும். உண்மையின் குரலாக இருக்கவேண்டும். பாவனையும், பொய்மையும் கொண்ட குரல் எத்தனை தான் கவர்ச்சிகரமானதாயினும் ஒருபோதும் கவிதையாவதில்லை. கவிதை என்றும் புதியதாகத் தோன்றவேண்டும். கவிஞனின் சுயமான பார்வை, அவனுக்கேயான மொழி சார்ந்து கவிதையில் இந்த புதுமை சாத்தியமாகிறது.
எல்லாவற்றுக்கும் உரைநடையையே பயன்படுத்தும் இன்றைய காலகட்டத்தில் இன்றைய கவிதையும் உரைநடை தன்மைகொண்டதாகவே வெளிப்படுகிறது. ஆனால் உரைநடையில் இயல்பை மீறிய உத்வேகமும், உணர்ச்சியும், இயல்பான சப்தநயமும் கொண்டதாக வெளிப்படுகிறது. இன்றைய கவிதையின் தளம் பல்வேறு பிரதிபலிப்பு சாத்தியங்களை உள்ளடக்கி இருக்கிறது. அதில் வசதிக்காகவேனும் சில பேதங்களும், பாகுபாடுகளும் எழவே செய்கின்றன. அவைகளையும் மீறி மனக்குகையின் சித்திரங்களை கவிதையின் தளத்தில் வடித்தெடுப்பது கவிக்கே உரிய பணியாகும். அத்தகைய பணியை தொடர்வதற்கு 2000 வருட கலை, கலாசார புகழையும், இழுக்கையும் சுமந்துகொண்டு ஊடுபாவாய் அலைகின்ற மொழியும் அதனை சார்ந்து வயிறு வளர்க்கின்ற ஊடகங்களும் தன்னிச்சையாக உதவ முன்வரவேண்டும்.
நூல் ஒப்பீடுகள்:
1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்
2. புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்
3. காலம் கலை கலைஞன் – சி.மோகன
அண்மைய பின்னூட்டங்கள்