You are currently browsing the daily archive for ஏப்ரல் 15, 2006.

புத்தகம் எனும் நான்கு கரை ஆற்றில்
வலப்பக்கமும். இடப்பக்கமும்
எல்லாமும் பார்த்துக்கொண்டு
எதிலும் கலக்காமல் நிற்கும்
ஒல்லிப் பனைகள் வரிசையில்

– தேவதச்சன்

 

"பின் நவீனத்துவம்" என்ற வார்த்தையை இன்றைய சூழலில் ஒருவர் தன் விருப்பத்திற்கேற்ப எந்த அர்த்தத்திலும் பயன்படுத்தலாம் என்றாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் "பின்" என்ற சொல் இருப்பதனால் அதை மேலும் மேலும் நவீனக் காலத்திலிருந்து பின்னோக்கிக் கொண்டுப்போவதற்கான ஒரு முயற்சி கூட நடக்கிறது. முதலில் அந்த வார்த்தை கடந்த இருபது ஆண்டுக்காலமாக செயல்பட்டு வந்த எழுத்தாளர்கள் அல்லது கலைஞர்களை குறிக்கப் பயன்பட்டது. அதற்கு பிறகு இந்த நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திற்கு அந்த வார்த்தை கொண்டு செல்லப்பட்டது. கூடியவிரைவில் அந்த வார்த்தை கடந்த நூற்றாண்டுகளின் படைப்பாளிகளை குறிப்பிட நேர்ந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

 

உண்மையில் "பின்நவீனத்துவம்" என்பது ஒரு செயல்பாட்டு வழிமுறை. ஒவ்வொரு காலமும் தனக்கென ஒரு தனிப் பாங்கினைக் கொண்டிருப்பதுப் போல, ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான பின்நவீனத்துவத்தை கொண்டிருக்கிறது எனக்கூறலாம்.

 

நவீனத்துவத்தின் பரவல் எல்லை :

வரலாற்று ஆய்வுகள் உண்டாக்கிய தீங்குகள் குறித்து நீட்சே எழுதிய "Thoughts out of season" என்ற நூலில், அவர் விவரித்துள்ளது போன்ற சிக்கல்கள் நிறைந்த சந்தர்ப்பங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து வந்திருக்கிறது. கடந்துபோன காலம் நம்மை கட்டுப்படுத்துகிறது, அதன் நிகழ்வுகள் நம்மை தொந்தரவு செய்கிறது, நம்மை மிரட்டுகிறது. நவீனத்துவம் வரலாறு சார்ந்த கடந்த காலத்தோடு தனக்கிருக்கும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கிறது. அதன் தொடர்ச்சியாக நவீனத்துவமானது கடந்த காலத்தை, அதன் அடையாளத்தை துடைத்துவிடுகிறது. இன்னும் மேலே சென்று அதை உருத்தெரியாமலாக்கிவிட்டு "அரூபம்" (Abstract) என்ற ஸ்தானத்தை அடைகிறது. இதனை தாண்டி நவீனத்துவம் போக முடியாதா என்ற சிக்கலான கேள்விக்கான பதில் பின்நவீனத்துவத்தில் உள்ளது எனலாம்.

 

காலத்தோடு பின்நவீனத்துவத்தின் அணுகுமுறை:

பின்நவீனத்துவத்தில் கடந்த காலம் குறித்த அணுகுமுறை தங்கியுள்ளது எனலாம்.

கடந்த காலம் என்பது முடிந்துபோய்விட்ட ஒன்றல்ல, அதனை அங்கீகரித்து அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோருகிறது. அப்படியானதொரு மறுபரிசீலனை "கடந்தகாலத்தை" அறியாமையோடும், வெகுளித்தனத்தோடும் அணுகுவதாக இல்லாமல் முரண்நகையோடு (irony) அணுகுகிறது பின்நவீனத்துவம். அறியாமை, வெகுளித்தனத்தோடு அணுக முற்பட்டால் கடந்தகாலம் குறித்த சரித்திரத்தை நாம் பாடபுத்தகங்கள் வழியாக அறியலாம், படைப்புகள் வாயிலாக அல்ல.

 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் செதுக்கோவியங்களின் துணுக்குகளை ஒட்டி ஒட்டி உருவாக்கிய "சேர்க்கை ஓவியங்கள்" அல்லது "கொலாஜ்கள்" பின்நவீனத்துவம் சார்ந்தவைகளாக உள்ளன. ஏனெனில் அவற்றை விசித்திரமான கதைகளாக வாசிக்கமுடியும், கனவுகளை எடுத்துக் கூறுவனவாகக் கொள்ளமுடியும். அவை செதுக்கோவியங்களின் தன்மைகள் குறித்தொரு உரையாடலை எழுப்புகின்றன என்பதையோ அவை "கொலாஜ் ஓவியங்கள்" என்பதையோ புரிந்துக்கொள்ளாமலேயே கூட அவற்றை ஒருவர் பார்த்து விளங்கிக்கொள்ள முடியும். எழுத்தில், பின்நவீனத்துவம் வாசகர்களின் கனவுகளைக் கவர்ந்து, சந்தோஷமான வாசிப்பனுபவத்தை நல்குவதாக இருக்கிறது. வாசகர்களின் கனவுகளைக் கவர்வதென்பது அவர்களைத் தப்பிக்கத் தூண்டுவதென்று மட்டுமே அர்த்தமாகாது. அது, அவர்களை இறுதிவரை துரத்திச்செல்வதென்றும் கூட அர்த்தப்படலாம்.

 

பின்நவீனத்துவ நாவல்களின் அமைப்பு:

குறிப்பாக நாவல் என்பது ஒற்றைச் சட்டகமல்ல. அது பல்வேறு விதமான இலக்கிய வடிவங்களின் ஒன்றுசேர்ந்த முயற்சி. அதாவது ஒரு இசைக்கோர்வையை போல நாவல் தன்னுள் கவிதை, நாடகம், தத்துவம், ஓவியம் என்று பல்வேறு வகைப்பட்ட தளங்களைக் கொண்டிருக்கவேண்டும். அதுபோல காரண காரியங்களாகத் தொடரும் சம்பவங்களோ, நிகழ்வுகளின் வழியாக மட்டும் வளரும் கதைமுறையோ இனி அவசியமற்றது. அதற்கு மாறாக காரண காரியங்களுக்கு வெளியே முன் பின்னாக காலம் எப்படி கடந்து செல்கிறது என்பதையும் காலத்தின் பல்வேறு அடுக்குகள் எப்படி ஒன்றின்மீது ஒன்று படிந்திருக்கின்றன என்பதையும் கண்டறிதல் நாவலின் முக்கியப் பணியாகிறது.

லட்சியவாத உலகை சிருஷ்டி செய்வதோ அரசியல் கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களை நிறுவுவதோ நாவலின் வேலையல்ல. மாறாக அரசியலின் ஆதார குணங்களான அதிகாரமும் வன்முறையும் பற்றி ஆராய்வது இங்கு நாவலின் முக்கிய பங்காகிறது. சரித்திரம் குறித்து நமக்கு கற்பிக்கப்பட்ட மனச்சித்திரங்களை அழித்து புதிய சித்திரங்களை வரைவதில்தான் புனைவு வெற்றிப்பெறுகிறது எனத் தெரிவிக்கின்றன பின்நவீனத்துவ நாவல்கள். கற்பனையின் புதிய சாத்தியங்களை உருவாக்குவதும் அந்த சாத்தியங்களை மெய்மையோடு ஒன்றுகலக்கச்செய்து புனைவின் வழியாகவே உலகை எதிர்கொள்வதுமே நம் கால நாவல்களின் பிரதானப்பாடு என்றிவை வெளிப்படுத்துகின்றன.

மேற்கூறிய நிலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாக:

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரான ஜோஸ் சரமாகோ (Jose Saramago) (இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்), 1995ல் எழுதிய "கல் தெப்பம்" (The Stone Raft), நம் காலத்திய முக்கியமான அரசியல் நாவலாகும். ஐரோப்பாவின் பைரீனி என்ற பகுதியில் ஒரு நாள் எதிர்பாராதவிதமாக ஒரு சாலையில் சிறிய கோடு போல பிளவு ஏற்படுகிறது. அன்று ஒரு நாய் அதை கண்டு ஊளையிடுகிறது. இதை பற்றிய புகாரை அரசாங்கம் பெரிதாக எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் விஷயம் பெரிதாக வளர்ந்தவுடன் இதை வைத்துக்கொண்டு எப்படி சம்பாதிக்கலாம் என்று அதிகாரவர்க்கம் திட்டமிடுகிறது. பிரச்சனை தீரவேயில்லை. முடிவில் சாலையில் ஏற்பட்ட அந்த சிறிய பிளவு கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பள்ளமாக விரிந்துக்கொண்டே போய் ஒரு நாள் ஒரு தெப்பம் மிதந்துப்போவது போல தனியே மிதந்து செல்லத்துவங்கிவிடுகிறது. இப்படி பிரிந்து செல்லும் கல்தெப்பத்தில் மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும், ஒரு நாயும் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த தெப்பம் தனியே ஊர்ந்துப்போய்க்கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்வு அந்நகரின் நிர்வாகத்திலும் தனிநபர்களின் சிந்தனையிலும் ஏற்படுத்தும் விளைவுகளும் பிரிந்துசெல்லும் தெப்பத்திலுள்ள கதாபாத்திரங்களின் மனோநிலையும் நாவலில் விவரிக்கப்படுகிறது. ஒரு தேசம் ஏதாவது ஒரு காரணத்தினால் துண்டிக்கப்பட்டு பிரிந்துபோகும் அபாயங்களின் பின்னணியில் இது போன்ற வேதனைகளும் வன்முறைகளும் உள்ளன என்று முன்னும் பின்னுமாக ஊடாடி நகர்கிறது நாவல்.

நேர்முகம் ஒன்றில் "சரமாகோ" இந்த நாவலை பற்றிக் குறிப்பிடுகையில் "ஸ்பெயினும் போர்ச்சுகலும் அருகருகே உள்ளன. இருப்பினும் கண்ணுக்கு தெரியாத ஒரு கோடு வழியாக இரண்டாக பிளவுப்பட்டு வருகின்றன. உண்மையில் ஐரோப்பா கண்ணுக்கு தெரியாத ஒரு இடைவெளியின் வழியாக பிளவுப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களும் அவர்களின் அதிகார அரசியலும்தான்" என்கிறார்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காக பலமுறை சிபாரிசு செய்யப்பட்டவரும், இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முதல் எழுத்தாளர் என்று விமர்சகர்களால் கொண்டாடப்படுபவருமான "மிலோராட் பாவிக்" பெல்கிரேடில் வசித்து வருகிறார். அவரது "கசார்களின் அகராதி" (Dictionary of the Khazars) என்ற நாவல் ஆண் பதிப்பு, பெண் பதிப்பு (male edition, female edition) என்று இரண்டு விதங்களில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு பதிப்புகளுக்கும் உள்ள வேறுபாடு ஒரேயொரு பத்தி மட்டுமே. அதாவது பதினேழு வரிகள் மட்டுமே.

இந்த நாவல் அகராதியின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அகராதி கசார்கள் என்ற இனக்குழுவின் அறிவுத்திரட்டு போல புனையப்பட்டிருக்கிறது. மரபான அகராதியின் வடிவத்தில் இது எழுதப்பட்டிருப்பதால் எங்கிருந்தும் வாசிக்கும் சுதந்திரம் இந்த நாவலுக்கு ஏற்படுகிறது.

கசார்கள் என்ற இனக்குழு கருங்கடலுக்கு வடக்கேயுள்ள வோல்கா டெல்டா பிரதேசத்தில் வாழ்ந்த இனக்குழுவாகும். இவர்கள் ஒன்பதாம் நூற்றாண்டுவரை வலிமையான அரசாட்சி புரிந்து வந்தனர். கசார்களின் அரசனொருவன் தான் கண்ட கனவிற்கு பலன் சொல்வதற்காக தனது தேசத்திலுள்ள மூன்று முக்கிய மதங்களை சேர்ந்தவரகளையும் அழைக்கிறான். அதன்படி யூதமதம், கிறிஸ்துவம், இஸ்லாம் என்ற மூன்று மதப்பிரிவுகளின் பிரமுகர்களும் அரசனின் கனவை விளக்க முயற்சிக்கிறார்கள். மூவரில் எவருடைய விளக்கம் தன்னை திருப்தி செய்கிறதோ அவருடைய மதத்தை தனது தேசமே தழுவ செய்வதாக அந்த அரசன் அறிவிக்கிறான். இந்த சிறிய புனைக்கதையினை துவக்கமாகக் கொண்டு இந்நாவல் கசார்களின் வாழ்க்கை எப்படி மூன்றுவிதமான அறிவு முறையைக் கொண்டுள்ளது என்பதை தனித்தனி தொகுதிகளில் விவரிக்கிறது.

தனது எழுத்தைப் பற்றி "பாவிக்" குறிப்பிடுகையில் "எனது எழுத்து கட்டிடக் கலையும், ஓவியமும் ஒன்று சேர்ந்த இசைக்கோலம்" என்கிறார். நம்முடைய நாட்டார் கதைகளைப் போன்ற விந்தையான கதைப்போக்கும், கனவு நிலைப்பட்ட படிமங்களும், தத்துவத்தின் ஆழ்ந்த பார்வையும், மிகைக் கற்பனையும், சரித்திர உண்மைகளை மீள் ஆய்வு செய்வதும் இந்த நாவலின் தனித்துவமான அம்சங்களாகக் கொள்ளலாம்.

புரிதல் அணுகுமுறை:

பின்நவீனத்துவ நாவல்கள் எல்லாம் "குப்பைகள்", "அசட்டுத்தனத்தின் உச்சம்", "பேத்தல்கள்" என வெளிப்படும் வார்த்தைகள் அவற்றிடம் பரிச்சயமற்ற அறியாமையில் இருந்து வெளிப்படுபவை. "படைப்பை வாசித்துவிட்டு" புரியவில்லை என்று சொல்வது நாகரீகமாகிவிட்ட இன்றைய சூழலில், அந்தப் படைப்பு நாளையோ, அடுத்த வருடமோ, (நாம் உயிரோடு இருந்தால்) பத்து வருடங்களுக்கு அப்புறமோ நமக்குள் புரிதலை நிகழ்த்தலாம். அப்படியே புரியாமல் போய்விட்டால்தான் என்ன? வாழ்க்கையில் புதிர்வட்டத்திற்குள் எல்லா நிகழ்வுகளும் புரிதலின் அடிப்படையில்தானா நிகழ்கின்றன?

மொசைக் தளத்தில் வரையப்பட்ட ஓவியங்களென சிதறி கிடக்கும் பின்நவீனத்துவ நாவலின் பகுதிகள் வாசகனின் ஆழ்ந்த ஈடுபாட்டு அனுபவத்தையும், முன்முடிவுகளற்ற புரிதலையும் கோருகின்றன. அவையிரண்டும் ஒருசேர அமைகையில் நாவல் வாசகனின் மனதில் ஒன்றிணைக்கப்பட்ட சித்திரமாக, இணைவுபெற்ற புதிர்த்துண்டுகளில் ஒளிந்துக்கிடந்த புதையல் ரகசியமாக வாசகனை பரவசத்திற்குள்ளாக்குகிறது.

தன்னுடைய தாய்மொழியில் அல்லது தனக்கு பரிச்சயமான மொழியில் எழுதப்பட்ட நாவல்களை புரிந்துக்கொண்ட வாசகன், அதே அகந்தை மனநிலையில் ஒரு பின்நவீனத்துவ நாவலை அணுகும்பொழுது அது அவனுடைய "எட்ட நின்று குச்சியால் கிளறுவதே வாசிப்பு" என்ற மனோபாவத்தை பரிகசிக்கத் தொடங்கிவிடுகிறது. இதனால் கலவரமடைந்த வாசகன் அந்த பின்நவீனத்துவ நாவலை நிந்தித்து தூக்கி எறிவது இயல்பே. ஆனால் முன்முடிவுகளின்றி, அந்த எழுத்தோடு தன்னைப் பிணைத்துக்கொள்ளும் ஒரு வாசக நாடோடிக்கு வாஞ்சையான அணைப்பும், ரசவாதம் சித்தித்த கிளர்ச்சியும் அளிக்கின்றன பின்நவீனத்துவ எழுத்துக்கள்.

இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியாக எழுத்தாள நண்பரான திரு எஸ். ராமகிருஷ்ணனின் கூற்றோடு முடிப்பது பொருத்தமாக இருக்கும்.

"பொதுவாக தமிழ் எழுத்தாளர்கள் அன்றாட வாழ்வை தவிர வேறு எந்த விசயங்களில் ஈடுப்பாடு அற்றவர்கள். இவர்களின் கதையும் அன்றாட பிரச்சினைகளுக்குள் அடங்கியதுதான். இதை விடுத்து தங்கள் வாழ்விடங்களுக்கு அருகாமையில் இருக்கும் மலையை, குகையை, கானகத்தை என எதையும் காணவோ அதன் நுட்பங்களை அறிந்துகொள்ளவோ விருப்பமற்று இருக்கிறார்கள். இதைவிடவும் விளையாட்டிலும், விஞ்ஞானத்திலும் ஆர்வமிருப்பவன் இலக்கிய ரசனை அற்றவன் என்ற ஒரு பொய்யான கற்பிதம் வேறு தமிழ் எழுத்தாளர்களை பீடித்திருக்கிறது. உம்பர்த்தோ எக்கோ, இடாலோ கால்வினோ, பார்த்தல்மே, பிரைமோ லெவி போன்று சரித்திரத்தை மட்டுமல்லாது விஞ்ஞானத்தையே ஒரு புனைவாக உருமாற்றும் பின்நவீன எழுத்தாளர்கள் உருவாகிவிட்ட காலகட்டத்தில் நொய்ந்த வார்த்தைகளால் தமிழில் கவிதைகள், கதைகள், நாவல்கள் எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. "

 

நன்றிகள்:

1. திரு எஸ். ராமகிருஷ்ணன்

2. திரு. உம்பர்த்தோ எக்கோ

 

நூல் ஒப்பீடுகள்:

1. விழித்திருப்பவனின் இரவு – எஸ். ராமகிருஷ்ணன்

2. கால்வினோ கதைகள் – பிரம்மராஜன்

3. பிரைமோ லெவி கதைகள் – லதா ராமகிருஷ்ணன்

4. The castle of crossed destinies – Italo Calvino

5. If on a winter's night a traveller – Italo Calvino

6. Reflections on the name of the rose (Umberto Eco)

வலைப்பதிவிற்கு வருகை தரும் தோழமைக்கு, நன்றாய் இல்லையென்று சொல். வாசித்துவிட்டு ஒதுக்கப்படவேண்டியவை என்று கூறு. நிராகரிக்காதே. கூர்விமர்சனம் தீட்டி மீண்டும் வர வேண்டும் நீ. காத்திருப்பேன். நன்றி.
ஏப்ரல் 2006
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Blog Stats

  • 20,409 hits