ராக்கி மலைத்தொடரில் இயற்கைச்சூழலில் அமைந்த வயோமிங் எனும் சிறு நகரை அடுத்து வசிக்கும் இரு (முதிய) நண்பர்கள் ஐய்னரும், பார்ட்லியும். தன் மனைவி, மகனின் மறைவுக்குப் பிறகு தனிமையாகிவிட்ட ஐய்னரின் உலகத்திற்குள் வந்து சேருகின்றனர் அவரின் மருமகள் ஜீனும், பேத்தியான சிறுமி கிரிஃபினும். (ஜீன் தனது ஆண் நண்பனின் குரூர மனப்பான்மையால் மகள் கிரிஃபினோடு வீட்டைவிட்டு வெளியேறி ஐய்னரிடம் வந்து சேர்கிறாள்).

தன் மகனை விபத்தில் சாகடித்தவள் என தன் மருமகளை குற்றவாளியாகப் பார்க்கும் ஐய்னர், முற்றுப்பெறாதக் கோடாக முடிவுற்ற தன் மகனின் வாழ்க்கையை எண்ணி வேதனையில் இன்னமும் புழுங்கிக் கொண்டிருப்பவர். இந்நிலையில் தாயையும் சேயையும் அரைமனதோடு அவர் வீட்டில் தங்க இடமளிக்கிறார். இதற்குபின் அவ்விரு முதியவர்களுக்கும் சிறுமி கிரிஃபினுக்குமிடையில் கல்லிடைச் செடியென வளரும் நட்பு, அவ்வப்போது மலைக்காட்டிலிருந்து குடியிருப்புக்களை நோக்கி வரும் கரடி, ஜீனைத்தேடி வயோமிங் நகருக்கு வரும் அவளின் ஆண் நண்பன் என கதை சில பிரிவுகளைக் கொண்டிருப்பினும் அவை மையநீரோட்டமான முதியவர்களோடு இணைந்தே பயணிக்கிறது.
"பார்ட்" எனும் கரடி படத்தில் "உயிரின்" குறியீடாக இயங்குகிறது. எங்கோ இயற்கையின் மூலையில் கிளம்பி, சற்று காலம் மனிதரிடையில் இயங்கி, சிறைப்பட்டு இறுதியில் மீண்டும் புறப்பட்ட இடத்தோடு கலக்கிறது கரடி.
மூப்பும், பிணியும் கவிய தனிமையின் இழைகள் மிகுந்த வறட்சியும், சிடுக்குமாகிவிடுவதை பார்ட்லி, ஐய்னரின் பரிதவிப்பான பாத்திரங்கள் தெளிவாக்குகின்றன.
நவீன வாழ்க்கைமுறை, குடும்பமெனும் சித்திரம் மீது கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பையை எப்போதும் கைத்தவறி கவிழ்ந்து விடுகிறது. அதன்பின் சிதைந்து எந்தவொரு சட்டகத்திலும் மாட்டவியலாது அர்த்தமும், வடிவமும் தேடிக்கொண்டு வறண்ட அதன் பிம்பம் நம்மை நிம்மதி இழக்கவைக்கிறது. அத்தகு பிம்பமாய் நம்முன் உலாவுகிறாள் ஜீன்.

வாழ்வின் களங்கமற்ற சின்னஞ்சிறு அதிசயங்களை பேசுபவர்கள், அதிர்ச்சிகளையும், வக்கிரமனதின் அருவருப்பான செயல்பாடுகளையும் ஏற்கவியலாது கண்ணீரையும், ஆழ்ந்த விம்முதலயும் கொண்டிருப்பவர்கள், பூச்சுகளற்ற மொழியை உடையவர்களென போற்றப்படும் சிறுவர் – சிறுமியர்களுக்குரிய பாங்குடன் வரும் சிறுமி கிரிஃபின் பாராட்டுதலுக்குரியவள். தெளிந்த நீரோடை போலான கதையோட்டம், கதை சொல்ல தெரிவு செய்த சூழல், இயற்கையோடு மனிதனுக்கு ஏற்படும் இசைவுதன்மை என அடிநாதமாக பல நல்ல விசயங்கள் உண்டு. அனுபவமிக்க நடிகர்கள் தங்களின் பங்கை செவ்வனே நிறைவேற்றியிருக்கின்றனர். இயக்குனர் லாஸி ஹால்ஸ்ட்ராமிற்கு வந்தனங்கள்.

தமிழ் திரைப்படம் – உப்பு

சரிவிகிதக் கலப்பா?

 

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு பிழைப்பு தேடிவரும் உப்பு என்ற பெண்ணை மையமாகக் கொண்டு நகர்கிறது கதை. உப்புவின் தாத்தா ஓபயா, அரைகுறைப் படிப்பறிவுடைய அவளின் கணவன், தங்களைப் போல துப்புரவு பணியில் கஷ்டப்படவேண்டாம் என்று மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கி கொடுக்கிறார். சூழ்நிலைக்காரணிகளால் அவன் வியாபாரம் நடத்தவியலாமல்போக, வட்டிக்கு பணம் கொடுத்த கும்பலின் நச்சரிப்பு அதிகமாகிறது. இதற்கிடையில், பாதாள சாக்கடை அடைப்பை அகற்றும் பணியில் ஒபயா சாக்கடை குழியிலேயே மாண்டுவிட, வட்டி கும்பல் முப்பது நாள் கெடுவிற்குள் பணம் கொடுக்காவிட்டால் உப்புவை மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் விற்றுவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். பணியில் இருக்கும்போது இறந்த ஒபயாவிற்கு அரசாங்கத்திடமிருந்து வரவேண்டிய ஒரு லட்சரூபாய் உதவித்தொகை வரத்தாமதமாகிறது. அரசிடமிருந்து பணம் வந்ததா? தன்னை கருக்கலைப்புக்கு உட்படுத்தி மும்பை சிவப்பு விளக்குப் பகுதிக்கு ஏற்றுமதி செய்யத்தயராக இருக்கும் வட்டிகும்பலிடம் கெடு முடிவதற்குள் உப்பு பணத்தை செலுத்தினாளா? என்னும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிகிறது இந்தப் படம்.

முப்பதாயிரம் தொழிலாளர்கள் நூத்திப்பத்தொன்பது கழிவகற்றும் பாதாள நிலையங்களில் தங்களுக்கான பாதுகாப்பு உடையின்றி, முகக்கவசமின்றி, பிரவகிக்கும் விஷவாயுக்களிடையே பணி செய்து வருவது சென்னைக்கு மட்டுமல்லாமல், எந்த ஒரு பெருநகருக்கும் பொருந்தும். பாதுகாப்பு உடைகள் அணிந்தால் பாதாள சாக்கடைக்குள் இறங்க முடியவில்லை, துவாரம் சற்று பெரிதாக இருந்தால் வசதியாக இருக்கும் என்ற அவர்களின் கோரிக்கைக்கு அரசு இன்றுவரை செவிசாய்த்திருப்பதாக தெரியவில்லை.

சாக்கடை அள்ளுவது, குப்பை எடுப்பது, கழிவை அகற்றுவது என துப்புரவு தொழிலாளர்களின் பல்வேறு கோணங்களை ஏகதேசமாக சொல்லமுயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் செல்வராஜ் – பாராட்டுக்கள்.

தொல்பாவை கூத்தில் காணக்கிடைக்கும் கர்ணபரம்பரைக் கதைகளின் ஒன்றான "நீலகண்டப்பறவையைக்" குறித்தக் கேள்விகளிலும், தேடுதல்களிலும் கழியும் உப்பின் பால்யப் பிராயம் மட்டுமின்றி, பின்னாளில் கனவில் காணும் அந்த புனைவுப் பறவையை கையில் பச்சைக்குத்திக் கொள்ளும்போது அந்தப் பறவையின் குறியீடாக அவளே மாறுகிறாள். இதற்கு பாரதிராஜாவின் பின்னணிக்குரலில் விளக்கமேதும் படத்தின் இயக்குனர் சொல்லியிருக்கத் தேவையில்லை.

சுருட்டோடு அலையும் துப்புரவு பணிசெய்யும் பெண்கள், காய்கறி விற்கும் விதவை, கந்துவட்டிக்காரர்களின் அடாவடி, சித்தம் கலங்கியவனை தன் உடற்பசிக்கு பயன்படுத்திக்கொள்ளும் சாரயம் விற்பவள், புதுமாப்பிள்ளை என சம்பவம் சார்ந்து விரியும் பாத்திரங்களுக்கு இந்தப்படத்தில் பஞ்சமேயில்லை. ரோஜாவின் நடிப்பில் முதிர்ச்சி தென்படுகிறது. கே. ராஜன், ஒபயா பாத்திரமாகவே மாறியிருக்கிறார். மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

திரைக்கதையை சற்று கச்சிதப்படுத்தியிருந்தால் "குறிப்பிடத்தக்கப் படம்" என்றாகியிருக்க வேண்டிய திரைப்படம் "பாராட்டுகளைப் பெறும் முயற்சி" என்ற நிலையில் நின்றுவிடுகிறது.

புத்தகம் எனும் நான்கு கரை ஆற்றில்
வலப்பக்கமும். இடப்பக்கமும்
எல்லாமும் பார்த்துக்கொண்டு
எதிலும் கலக்காமல் நிற்கும்
ஒல்லிப் பனைகள் வரிசையில்

– தேவதச்சன்

 

"பின் நவீனத்துவம்" என்ற வார்த்தையை இன்றைய சூழலில் ஒருவர் தன் விருப்பத்திற்கேற்ப எந்த அர்த்தத்திலும் பயன்படுத்தலாம் என்றாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் "பின்" என்ற சொல் இருப்பதனால் அதை மேலும் மேலும் நவீனக் காலத்திலிருந்து பின்னோக்கிக் கொண்டுப்போவதற்கான ஒரு முயற்சி கூட நடக்கிறது. முதலில் அந்த வார்த்தை கடந்த இருபது ஆண்டுக்காலமாக செயல்பட்டு வந்த எழுத்தாளர்கள் அல்லது கலைஞர்களை குறிக்கப் பயன்பட்டது. அதற்கு பிறகு இந்த நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திற்கு அந்த வார்த்தை கொண்டு செல்லப்பட்டது. கூடியவிரைவில் அந்த வார்த்தை கடந்த நூற்றாண்டுகளின் படைப்பாளிகளை குறிப்பிட நேர்ந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

 

உண்மையில் "பின்நவீனத்துவம்" என்பது ஒரு செயல்பாட்டு வழிமுறை. ஒவ்வொரு காலமும் தனக்கென ஒரு தனிப் பாங்கினைக் கொண்டிருப்பதுப் போல, ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான பின்நவீனத்துவத்தை கொண்டிருக்கிறது எனக்கூறலாம்.

 

நவீனத்துவத்தின் பரவல் எல்லை :

வரலாற்று ஆய்வுகள் உண்டாக்கிய தீங்குகள் குறித்து நீட்சே எழுதிய "Thoughts out of season" என்ற நூலில், அவர் விவரித்துள்ளது போன்ற சிக்கல்கள் நிறைந்த சந்தர்ப்பங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து வந்திருக்கிறது. கடந்துபோன காலம் நம்மை கட்டுப்படுத்துகிறது, அதன் நிகழ்வுகள் நம்மை தொந்தரவு செய்கிறது, நம்மை மிரட்டுகிறது. நவீனத்துவம் வரலாறு சார்ந்த கடந்த காலத்தோடு தனக்கிருக்கும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கிறது. அதன் தொடர்ச்சியாக நவீனத்துவமானது கடந்த காலத்தை, அதன் அடையாளத்தை துடைத்துவிடுகிறது. இன்னும் மேலே சென்று அதை உருத்தெரியாமலாக்கிவிட்டு "அரூபம்" (Abstract) என்ற ஸ்தானத்தை அடைகிறது. இதனை தாண்டி நவீனத்துவம் போக முடியாதா என்ற சிக்கலான கேள்விக்கான பதில் பின்நவீனத்துவத்தில் உள்ளது எனலாம்.

 

காலத்தோடு பின்நவீனத்துவத்தின் அணுகுமுறை:

பின்நவீனத்துவத்தில் கடந்த காலம் குறித்த அணுகுமுறை தங்கியுள்ளது எனலாம்.

கடந்த காலம் என்பது முடிந்துபோய்விட்ட ஒன்றல்ல, அதனை அங்கீகரித்து அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோருகிறது. அப்படியானதொரு மறுபரிசீலனை "கடந்தகாலத்தை" அறியாமையோடும், வெகுளித்தனத்தோடும் அணுகுவதாக இல்லாமல் முரண்நகையோடு (irony) அணுகுகிறது பின்நவீனத்துவம். அறியாமை, வெகுளித்தனத்தோடு அணுக முற்பட்டால் கடந்தகாலம் குறித்த சரித்திரத்தை நாம் பாடபுத்தகங்கள் வழியாக அறியலாம், படைப்புகள் வாயிலாக அல்ல.

 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் செதுக்கோவியங்களின் துணுக்குகளை ஒட்டி ஒட்டி உருவாக்கிய "சேர்க்கை ஓவியங்கள்" அல்லது "கொலாஜ்கள்" பின்நவீனத்துவம் சார்ந்தவைகளாக உள்ளன. ஏனெனில் அவற்றை விசித்திரமான கதைகளாக வாசிக்கமுடியும், கனவுகளை எடுத்துக் கூறுவனவாகக் கொள்ளமுடியும். அவை செதுக்கோவியங்களின் தன்மைகள் குறித்தொரு உரையாடலை எழுப்புகின்றன என்பதையோ அவை "கொலாஜ் ஓவியங்கள்" என்பதையோ புரிந்துக்கொள்ளாமலேயே கூட அவற்றை ஒருவர் பார்த்து விளங்கிக்கொள்ள முடியும். எழுத்தில், பின்நவீனத்துவம் வாசகர்களின் கனவுகளைக் கவர்ந்து, சந்தோஷமான வாசிப்பனுபவத்தை நல்குவதாக இருக்கிறது. வாசகர்களின் கனவுகளைக் கவர்வதென்பது அவர்களைத் தப்பிக்கத் தூண்டுவதென்று மட்டுமே அர்த்தமாகாது. அது, அவர்களை இறுதிவரை துரத்திச்செல்வதென்றும் கூட அர்த்தப்படலாம்.

 

பின்நவீனத்துவ நாவல்களின் அமைப்பு:

குறிப்பாக நாவல் என்பது ஒற்றைச் சட்டகமல்ல. அது பல்வேறு விதமான இலக்கிய வடிவங்களின் ஒன்றுசேர்ந்த முயற்சி. அதாவது ஒரு இசைக்கோர்வையை போல நாவல் தன்னுள் கவிதை, நாடகம், தத்துவம், ஓவியம் என்று பல்வேறு வகைப்பட்ட தளங்களைக் கொண்டிருக்கவேண்டும். அதுபோல காரண காரியங்களாகத் தொடரும் சம்பவங்களோ, நிகழ்வுகளின் வழியாக மட்டும் வளரும் கதைமுறையோ இனி அவசியமற்றது. அதற்கு மாறாக காரண காரியங்களுக்கு வெளியே முன் பின்னாக காலம் எப்படி கடந்து செல்கிறது என்பதையும் காலத்தின் பல்வேறு அடுக்குகள் எப்படி ஒன்றின்மீது ஒன்று படிந்திருக்கின்றன என்பதையும் கண்டறிதல் நாவலின் முக்கியப் பணியாகிறது.

லட்சியவாத உலகை சிருஷ்டி செய்வதோ அரசியல் கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களை நிறுவுவதோ நாவலின் வேலையல்ல. மாறாக அரசியலின் ஆதார குணங்களான அதிகாரமும் வன்முறையும் பற்றி ஆராய்வது இங்கு நாவலின் முக்கிய பங்காகிறது. சரித்திரம் குறித்து நமக்கு கற்பிக்கப்பட்ட மனச்சித்திரங்களை அழித்து புதிய சித்திரங்களை வரைவதில்தான் புனைவு வெற்றிப்பெறுகிறது எனத் தெரிவிக்கின்றன பின்நவீனத்துவ நாவல்கள். கற்பனையின் புதிய சாத்தியங்களை உருவாக்குவதும் அந்த சாத்தியங்களை மெய்மையோடு ஒன்றுகலக்கச்செய்து புனைவின் வழியாகவே உலகை எதிர்கொள்வதுமே நம் கால நாவல்களின் பிரதானப்பாடு என்றிவை வெளிப்படுத்துகின்றன.

மேற்கூறிய நிலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாக:

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரான ஜோஸ் சரமாகோ (Jose Saramago) (இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்), 1995ல் எழுதிய "கல் தெப்பம்" (The Stone Raft), நம் காலத்திய முக்கியமான அரசியல் நாவலாகும். ஐரோப்பாவின் பைரீனி என்ற பகுதியில் ஒரு நாள் எதிர்பாராதவிதமாக ஒரு சாலையில் சிறிய கோடு போல பிளவு ஏற்படுகிறது. அன்று ஒரு நாய் அதை கண்டு ஊளையிடுகிறது. இதை பற்றிய புகாரை அரசாங்கம் பெரிதாக எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் விஷயம் பெரிதாக வளர்ந்தவுடன் இதை வைத்துக்கொண்டு எப்படி சம்பாதிக்கலாம் என்று அதிகாரவர்க்கம் திட்டமிடுகிறது. பிரச்சனை தீரவேயில்லை. முடிவில் சாலையில் ஏற்பட்ட அந்த சிறிய பிளவு கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பள்ளமாக விரிந்துக்கொண்டே போய் ஒரு நாள் ஒரு தெப்பம் மிதந்துப்போவது போல தனியே மிதந்து செல்லத்துவங்கிவிடுகிறது. இப்படி பிரிந்து செல்லும் கல்தெப்பத்தில் மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும், ஒரு நாயும் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த தெப்பம் தனியே ஊர்ந்துப்போய்க்கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்வு அந்நகரின் நிர்வாகத்திலும் தனிநபர்களின் சிந்தனையிலும் ஏற்படுத்தும் விளைவுகளும் பிரிந்துசெல்லும் தெப்பத்திலுள்ள கதாபாத்திரங்களின் மனோநிலையும் நாவலில் விவரிக்கப்படுகிறது. ஒரு தேசம் ஏதாவது ஒரு காரணத்தினால் துண்டிக்கப்பட்டு பிரிந்துபோகும் அபாயங்களின் பின்னணியில் இது போன்ற வேதனைகளும் வன்முறைகளும் உள்ளன என்று முன்னும் பின்னுமாக ஊடாடி நகர்கிறது நாவல்.

நேர்முகம் ஒன்றில் "சரமாகோ" இந்த நாவலை பற்றிக் குறிப்பிடுகையில் "ஸ்பெயினும் போர்ச்சுகலும் அருகருகே உள்ளன. இருப்பினும் கண்ணுக்கு தெரியாத ஒரு கோடு வழியாக இரண்டாக பிளவுப்பட்டு வருகின்றன. உண்மையில் ஐரோப்பா கண்ணுக்கு தெரியாத ஒரு இடைவெளியின் வழியாக பிளவுப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களும் அவர்களின் அதிகார அரசியலும்தான்" என்கிறார்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காக பலமுறை சிபாரிசு செய்யப்பட்டவரும், இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முதல் எழுத்தாளர் என்று விமர்சகர்களால் கொண்டாடப்படுபவருமான "மிலோராட் பாவிக்" பெல்கிரேடில் வசித்து வருகிறார். அவரது "கசார்களின் அகராதி" (Dictionary of the Khazars) என்ற நாவல் ஆண் பதிப்பு, பெண் பதிப்பு (male edition, female edition) என்று இரண்டு விதங்களில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு பதிப்புகளுக்கும் உள்ள வேறுபாடு ஒரேயொரு பத்தி மட்டுமே. அதாவது பதினேழு வரிகள் மட்டுமே.

இந்த நாவல் அகராதியின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அகராதி கசார்கள் என்ற இனக்குழுவின் அறிவுத்திரட்டு போல புனையப்பட்டிருக்கிறது. மரபான அகராதியின் வடிவத்தில் இது எழுதப்பட்டிருப்பதால் எங்கிருந்தும் வாசிக்கும் சுதந்திரம் இந்த நாவலுக்கு ஏற்படுகிறது.

கசார்கள் என்ற இனக்குழு கருங்கடலுக்கு வடக்கேயுள்ள வோல்கா டெல்டா பிரதேசத்தில் வாழ்ந்த இனக்குழுவாகும். இவர்கள் ஒன்பதாம் நூற்றாண்டுவரை வலிமையான அரசாட்சி புரிந்து வந்தனர். கசார்களின் அரசனொருவன் தான் கண்ட கனவிற்கு பலன் சொல்வதற்காக தனது தேசத்திலுள்ள மூன்று முக்கிய மதங்களை சேர்ந்தவரகளையும் அழைக்கிறான். அதன்படி யூதமதம், கிறிஸ்துவம், இஸ்லாம் என்ற மூன்று மதப்பிரிவுகளின் பிரமுகர்களும் அரசனின் கனவை விளக்க முயற்சிக்கிறார்கள். மூவரில் எவருடைய விளக்கம் தன்னை திருப்தி செய்கிறதோ அவருடைய மதத்தை தனது தேசமே தழுவ செய்வதாக அந்த அரசன் அறிவிக்கிறான். இந்த சிறிய புனைக்கதையினை துவக்கமாகக் கொண்டு இந்நாவல் கசார்களின் வாழ்க்கை எப்படி மூன்றுவிதமான அறிவு முறையைக் கொண்டுள்ளது என்பதை தனித்தனி தொகுதிகளில் விவரிக்கிறது.

தனது எழுத்தைப் பற்றி "பாவிக்" குறிப்பிடுகையில் "எனது எழுத்து கட்டிடக் கலையும், ஓவியமும் ஒன்று சேர்ந்த இசைக்கோலம்" என்கிறார். நம்முடைய நாட்டார் கதைகளைப் போன்ற விந்தையான கதைப்போக்கும், கனவு நிலைப்பட்ட படிமங்களும், தத்துவத்தின் ஆழ்ந்த பார்வையும், மிகைக் கற்பனையும், சரித்திர உண்மைகளை மீள் ஆய்வு செய்வதும் இந்த நாவலின் தனித்துவமான அம்சங்களாகக் கொள்ளலாம்.

புரிதல் அணுகுமுறை:

பின்நவீனத்துவ நாவல்கள் எல்லாம் "குப்பைகள்", "அசட்டுத்தனத்தின் உச்சம்", "பேத்தல்கள்" என வெளிப்படும் வார்த்தைகள் அவற்றிடம் பரிச்சயமற்ற அறியாமையில் இருந்து வெளிப்படுபவை. "படைப்பை வாசித்துவிட்டு" புரியவில்லை என்று சொல்வது நாகரீகமாகிவிட்ட இன்றைய சூழலில், அந்தப் படைப்பு நாளையோ, அடுத்த வருடமோ, (நாம் உயிரோடு இருந்தால்) பத்து வருடங்களுக்கு அப்புறமோ நமக்குள் புரிதலை நிகழ்த்தலாம். அப்படியே புரியாமல் போய்விட்டால்தான் என்ன? வாழ்க்கையில் புதிர்வட்டத்திற்குள் எல்லா நிகழ்வுகளும் புரிதலின் அடிப்படையில்தானா நிகழ்கின்றன?

மொசைக் தளத்தில் வரையப்பட்ட ஓவியங்களென சிதறி கிடக்கும் பின்நவீனத்துவ நாவலின் பகுதிகள் வாசகனின் ஆழ்ந்த ஈடுபாட்டு அனுபவத்தையும், முன்முடிவுகளற்ற புரிதலையும் கோருகின்றன. அவையிரண்டும் ஒருசேர அமைகையில் நாவல் வாசகனின் மனதில் ஒன்றிணைக்கப்பட்ட சித்திரமாக, இணைவுபெற்ற புதிர்த்துண்டுகளில் ஒளிந்துக்கிடந்த புதையல் ரகசியமாக வாசகனை பரவசத்திற்குள்ளாக்குகிறது.

தன்னுடைய தாய்மொழியில் அல்லது தனக்கு பரிச்சயமான மொழியில் எழுதப்பட்ட நாவல்களை புரிந்துக்கொண்ட வாசகன், அதே அகந்தை மனநிலையில் ஒரு பின்நவீனத்துவ நாவலை அணுகும்பொழுது அது அவனுடைய "எட்ட நின்று குச்சியால் கிளறுவதே வாசிப்பு" என்ற மனோபாவத்தை பரிகசிக்கத் தொடங்கிவிடுகிறது. இதனால் கலவரமடைந்த வாசகன் அந்த பின்நவீனத்துவ நாவலை நிந்தித்து தூக்கி எறிவது இயல்பே. ஆனால் முன்முடிவுகளின்றி, அந்த எழுத்தோடு தன்னைப் பிணைத்துக்கொள்ளும் ஒரு வாசக நாடோடிக்கு வாஞ்சையான அணைப்பும், ரசவாதம் சித்தித்த கிளர்ச்சியும் அளிக்கின்றன பின்நவீனத்துவ எழுத்துக்கள்.

இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியாக எழுத்தாள நண்பரான திரு எஸ். ராமகிருஷ்ணனின் கூற்றோடு முடிப்பது பொருத்தமாக இருக்கும்.

"பொதுவாக தமிழ் எழுத்தாளர்கள் அன்றாட வாழ்வை தவிர வேறு எந்த விசயங்களில் ஈடுப்பாடு அற்றவர்கள். இவர்களின் கதையும் அன்றாட பிரச்சினைகளுக்குள் அடங்கியதுதான். இதை விடுத்து தங்கள் வாழ்விடங்களுக்கு அருகாமையில் இருக்கும் மலையை, குகையை, கானகத்தை என எதையும் காணவோ அதன் நுட்பங்களை அறிந்துகொள்ளவோ விருப்பமற்று இருக்கிறார்கள். இதைவிடவும் விளையாட்டிலும், விஞ்ஞானத்திலும் ஆர்வமிருப்பவன் இலக்கிய ரசனை அற்றவன் என்ற ஒரு பொய்யான கற்பிதம் வேறு தமிழ் எழுத்தாளர்களை பீடித்திருக்கிறது. உம்பர்த்தோ எக்கோ, இடாலோ கால்வினோ, பார்த்தல்மே, பிரைமோ லெவி போன்று சரித்திரத்தை மட்டுமல்லாது விஞ்ஞானத்தையே ஒரு புனைவாக உருமாற்றும் பின்நவீன எழுத்தாளர்கள் உருவாகிவிட்ட காலகட்டத்தில் நொய்ந்த வார்த்தைகளால் தமிழில் கவிதைகள், கதைகள், நாவல்கள் எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. "

 

நன்றிகள்:

1. திரு எஸ். ராமகிருஷ்ணன்

2. திரு. உம்பர்த்தோ எக்கோ

 

நூல் ஒப்பீடுகள்:

1. விழித்திருப்பவனின் இரவு – எஸ். ராமகிருஷ்ணன்

2. கால்வினோ கதைகள் – பிரம்மராஜன்

3. பிரைமோ லெவி கதைகள் – லதா ராமகிருஷ்ணன்

4. The castle of crossed destinies – Italo Calvino

5. If on a winter's night a traveller – Italo Calvino

6. Reflections on the name of the rose (Umberto Eco)

படைப்பு மந்திரத்தின் கதகதப்பில் தன்னை இருத்திக்கொள்ள விழையும் சிறந்த வாசகன், ஒரு படைப்பு மேதையின் புத்தகத்தைத் தன் இதயத்தால் வாசிப்பதில்லை. மூளையால் கூட பெரிதும் வாசிப்பதில்லை. மாறாக, தன் முதுகுத்தண்டின் மூலமே வாசிக்கிறான்.

– விளாதிமிர் நொபொகோவ்

அத்தகைய படைப்பு மந்திரத்தை தன்னகத்துள் கொண்டு, கனவுகளற்றுப் பரிதவிக்கும் தன் காலத்துக்கான கனவுகளை கண்டடையும் இன்றைய படைப்பாளியிடமிருந்து வெளிப்படும் கலை-இலக்கிய பரிமாற்றத் தேவைகளின் அடிப்படைகளில் கவிதையும் ஒன்று. கவிதை என்ற சொல் உடனடியாக உணர்த்துவது போலத் தோன்றும் பொதுத்தன்மை, புகைமூட்டமான ஒரு உணர்வு தான். உண்மையில் அவ்வாறான நிரந்தரப் பொதுத்தன்மை எதுவும் கவிதை என்ற வடிவத்திற்கு கிடையாது. கால அட்டவணையில் அந்தந்த மொழியில்,
அவ்வப்போது செயல்படும் போக்குகள் கவிதை என்பதின் இலக்கணத்தையும் வரையறைகளையும் நிர்ணயித்துச் செல்லுகின்றன.

தமிழ் கவிதை என்பது யாப்பிலக்கணத்திற்கு உட்பட்ட சொற்கட்டு தான் என்ற கருத்தாக்கம் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையில் இருந்து வந்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கவிதை மரபு தமிழில் தொடர்ச்சியாக இருந்துவந்துள்ள போதிலும் கவிதையியல் பற்றிய ஆழ்ந்த விமர்சனப்பார்வை தமிழர்களிடையே எழுத்துவடிவில் இல்லாலதது தான் இதற்குக்காரணம். கவிதை தமிழில் இருக்கலாம். ஆனால் கவிதையை பற்றிய ஆராய்ச்சி தமிழில் கிடையாது. தமிழில் செய்யுளியலை பற்றி ஆராய்ச்சி இருந்திருக்கிறது. செய்யுளியல் பற்றிய தமிழ் இலக்கண நூல்கள் எல்லாம் எதுகை, மோனை, யாப்பு, அணியிலக்கணம் குறித்து விரிவாகச் சொல்லியுள்ளன. பொருளிலக்கணம் குறித்து தொல்காப்பியம் விரிவாகச் சொல்லியுள்ளதெனினும் கவிதை கலையின் அடிப்படை தன்மைகள் கவிதையியல் பற்றிய சிந்தனைகளாக அவற்றை கொள்ளவியலாது. 2000 ஆண்டு தமிழ் கவிதை மரபில் காலந்தோறும் கவிதையில் நிகழ்ந்துள்ள உருவ-உள்ளடக்க மாறுதல்களை தெளிவாக உணரலாம்.

சங்க காலம் :

ஆசிரியப்பா வகைகள் கவிதையில் மிகுதியாக கையாளப்பட்டன. கவிதைகளின் உள்ளடக்கம் காதல், வீரம், பிரிவு, கொடைச்சிறப்பு என்று குறிப்பிட்ட சில வரைமுறைக்குட்பட்டனவாகவே உள்ளன.

சங்கம் மருவியகாலம் :

பெருமளவு வெண்பா வகைகள் கவிதையில் கையாளப்பட்டன. அன்றைய வாழ்க்கை மதிப்பீடுகள் சார்ந்து உருவான நீதிகருத்துக்களின் சாரத்தையே இவை வலியுறுத்தின.

காப்பிய காலம் :

சிலப்பதிகாரம், மணிமேகலை – பெருமளவு ஆசிரியப்பா வகைகளில் எழுதப்பட்ட இவற்றின் நோக்கம் சமயம் சார்ந்த அறக்கருத்துக்களை வலியுறுத்துவதாக இருந்தாலும் அவை அனுபவம் சார்ந்த வெளிப்பாடுகளாகவே அமைந்திருந்தன. சிலப்பதிகாரத்தில் இசைத் தன்மையுடன் கூடிய பாடல்கள் இடம்பெற்றன.

சீவக சிந்தாமணி – விருத்தப்பாடல்களினால் எழுதப்பட்ட காப்பியம்.

பக்தி இலக்கிய காலம் :

ஆழ்வார்கள், நாயன்மார்களிடம் விருத்தப்பா பல்வேறு ரூப வேறுபாடுகளையும், கவிதை நயங்களையும் பெற்று வளர்ச்சி அடைந்தது. பக்தி இலக்கிய காலத்தில், பக்தி – கவிதைக்கான முதன்மை பாடுபொருள் ஆனது. எனினும் ஆழ்வார்கள் நாயன்மார்களிடம் பக்தி அவர்களின் அனுபவங்களாக வெளிப்பட்டதால் இன்றும் அவற்றை படித்து அனுபவிக்க முடிகிறது. பக்தி இலக்கிய காலத்தை பின்தொடர்ந்த கம்பரின் கம்பராமாயணம் மற்றும் சேக்கிழாரின் பெரியபுராணம் ஆகியவற்றிலும் விருத்தப்பாவின் பல்வேறு வடிவங்களை காண இயலுகிறது.

சிற்றிலக்கியங்களின் காலம் :

கோவை, உலா, அந்தாதி, பரணி போன்ற இலக்கிய வகைகள் தோன்றின. கவிதையின் உருவம், வெளியீட்டு முறை ஆகியவற்றில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன.

16ஆம் நூற்றாண்டில் சித்தர் பாடல்களில் கவிதை புதிய மெருகு பெற்றது. சமயச் சடங்காச்சாரங்களுக்கு எதிரான குரல் அவர்கள் கவிதைகளில் வெளிப்பட்டது. கவிதை அமைப்பில் பேச்சு வழக்குகளின் பிரயோகமும் இசைத்தன்மையும் நேரடியாக சொல்லும் போக்கும் இக்காலக்கட்ட கவிதைகளின் முதன்மை குணங்களாயின.

17ஆம் நூற்றாண்டில் சிற்றின்ப உணர்வுகளை முதன்மைப்படுத்தும் போக்கு கவிதைகளில் வளர்ந்தது. ஆட்சி அதிகார மாற்றங்களின் விளைவு என்றிதனைக் கொள்ளலாம். பேரரசுகள் சிதைந்து சிறிய சிறிய ஜமீன்களின் அதிகாரம் நிலைபெற்ற காலக்கட்டம் இது.

18,19ஆம் நூற்றாண்டுகளில் இசைப்பாடல்கள் பெருகின. கவிதை என்பதே பாடல்கள் தான் என்றானது. அதற்கேற்ப கவிதையின் வெளியீட்டு வடிவங்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. இசைபாடல்களுக்கேற்ற “சிந்து வடிவங்கள்” பெருவழக்காயின. இசையுடன் கூடிய சொல்லடுக்குகளே கவிதை என்றாயின.

பாரதியின் நூற்றாண்டு : 20ஆம் நூற்றாண்டில் சித்தர் காலத்துக்குப்பின் கவிதையில் ஏற்பட்ட தேக்கத்தை உடைத்துக்கொண்டு ஒரு காட்டாற்றுப்பெருக்கென புதுவெள்ளம் பிரவேசித்தது. ஒரு மகாகவியின் வருகைக்காக சித்தர்களின் மறுபிறவி என கருதக்கூடிய பாரதிக்காக தேங்கிக்கடந்த தமிழ் கவிதை புத்துணர்வு பெற்றது. பண்டிதர்களின் புலமை விளையாட்டினால் மக்களிடமிருந்து அந்நியமாகிப்போன தமிழ் கவிதை பாரதியால் மீண்டும் புத்துயிர் பெற்றது. புதிய புதிய உருவகங்களில், புதிய சொற்களில், புதிய பார்வையில் கவிதையில் புதுமையை புகுத்திய பாரதிக்கு தேசியமும் தெய்வபக்தியும் ஆவேசமான உந்துசக்திகளாக அமைந்தன. மேலை நாட்டு கவிதை பரிச்சயமும் பாரதியின் கவிதைக்கு வலுச்சேர்த்தது. சொல்புதிதாய் பொருள் புதிதாய் தமிழ்கவிதை மறுமலர்ச்சி அடைந்தது. இசைத்தன்மையுடன் கூடிய பாடல்களிலும் கவிதையின் சாரத்தை ஏற்றியது பாரதியின் தனிச்சிறப்பாகும்.

பாரதிக்குப்பின் பாரதிதாசனிடம் கவிதை ஆரம்பத்தில் அவரிடம் இருந்த உத்வேகத்தை இழந்து, சமுதாய சீர்திருத்தத்திற்கான மந்திரக்கோலாக அதீதமான தமிழ்பற்றாக வறட்சி அடைந்தது. இவ்விருவரை பின்பற்றி அல்லது நகலெடுத்து செய்யுள் கட்டிய புலவர்களின் எண்ணிக்கை பெருகியது.

ஒரு ஜீவநதியாகப் பயணித்த தமிழ் கவிதை தேங்கிக் கிடந்த இக்காலகட்டத்தில் தான் உரைநடை இலக்கியம் எழுச்சி பெற்றது. பின்னர் அதன் தாக்கம் கவிதையில் பிரதிபலிக்கத் தொடங்கியது. ஆரம்பகாலத்தில் தமிழில் புதிய கவிதை முயற்சிகள் “வசன கவிதை” என்றே அழைக்கப்பட்டது. இது “prose poem” என்னும் ஆங்கிலச் சொற்சேர்க்கையின் தமிழாக்கம். ஆரம்பகால வசனகவிதை முயற்சிகளை “கோவேறு கழுதை”, ” வெஜிடபிள் பிரியாணி” என்றெல்லாம் கிண்டல் செய்தவர்களும் உண்டு.

1959ல் வெளியீட்டை தொடங்கிய சி.சு. செல்லப்பாவின் “எழுத்து” காலாண்டிதழின் ஆரம்ப கால இதழ்களிலும் புதிய கவிதை முயற்சிகள் வசனகவிதை என்றே அழைக்கப்பட்டது. “சுயேச்சா கவிதை” என்னும் சொல்லை ஆரம்பகால கட்டுரைகளில் பிரமிள் பயன்படுத்தியுள்ளார். 1959ல் “சரஸ்வதி” ஆண்டு மலரில் வெளியான கட்டுரையொன்றில் முதன்முதலாக புதுக்கவிதை என்னும் பெயரை க.நா. சுப்ரமணியம் பயன்படுத்தினார். இதனை “New Poetry” என்னும் ஆங்கில பிரயோகத்தின் தமிழாக்கமாகவே கொள்ளவேண்டும்.

“புதுக்கவிதை” என்னும் பெயரும் ஒரு வகையில் குழப்பமானது தான். எந்த காலத்திலும் புதுமை குன்றாமல் காலந்தோறும் தன்னை புதுப்பித்துக்கொண்டு புதிய இலக்கிய அனுபவம் தருவது தான் நல்ல கவிதையின் இலக்கணம். எனினும், யாப்பிலக்கணத்திற்கு உட்பட்ட கவிதையிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் ஒரு பொதுப்படையான வசதிகருதியே, அடைமொழியுடன் “புதுக்கவிதை” என்று அழைக்கப்படலாயிற்று. இன்றைய
காலகட்டத்தில் கவிதை என்றால் அது புதுக்கவிதை என்றாகிவிட்டது. மேலை நாடுகளில் தோன்றிய புதிய கவிதை முயற்சிகளே புதுக்கவிதை உருவாவதற்கு ஆதர்சமாக இருந்தன. தமிழ் யாப்புருவங்களில் காலம்தோரும் ஏற்பட்ட மாற்றங்களும் தமிழ் யாப்பிலக்கணத்தின் நெகிழ்சியான அமைப்பும் புதிய கவிதை வடிவங்களை ஏற்றுக்கொள்ளும் தமிழ் மனோபாவமும் இங்கு புதிய கவிதை முயற்சி எளிதில் நிலைபெற காரணங்கள் ஆயின. யாப்பின் அடிப்படையில் தமிழ் கவிதையை “மரபுக்கவிதை” “புதுக்கவிதை” என்று பிரிப்பது தமிழில் யாப்பியல் வரலாற்றையே மறுதலிக்கும் முயற்சி ஆகும். புதுமைப்பித்தன் சொல்வது போல “யாப்பு விலங்கல்ல. அது காலந்தோறும் தன்னை புதுப்பித்துக்கொண்டே வந்துள்ளது.”

வாழ்விலும், சிந்தனையிலும், மொழியிலும் ஏற்பட்ட மாற்றங்களும் உரைநடையின் வளர்ச்சியும் சேர்ந்து யாப்பிலக்கணம் குறித்த அக்கறையை மங்கச்செய்துவிட்டன. அயல்நாடுகள் நிகழ்ந்த புதிய கவிதை போக்குகளின் பரிச்சயமும், பாரதியின் வசனக்கவிதை முயற்சி ஏற்படுத்திய ஊக்கமும், நம்பிக்கையும் அந்த ப்ரக்ஞை செயல்வடிவம் பெருவதற்கான உந்துதல்கள் என்றுகொள்வதே பொருத்தமானதாகும்.

பண்டிதன் செய்யுளும், கவிஞன் கவிதையும் எழுதுகிறார்கள். செய்யுள் யாப்பின் விதிகளை உள்ளடக்கியது. கவிதை என்பது யாப்பிலக்கண விதி அல்ல. கவிதையின் ஜீவநாடி, அதன் உயிர்பெற்ற வடிவம் என்கிறார் புதுமைப்பித்தன். கவிதைக்கு யாப்பிலக்கணத்தின் பயன்பாடு தேவையில்லை என்றான காலகட்டத்தில் செய்யுள், கவிதை என்று பிரித்தறியும் பார்வை தீவிரமடைந்தது. கவிதை-செய்யுள் என்னும் பாகுபாடு யாப்பு விதிகளுக்கு உட்பட்டு எழுதப்பட்டவற்றிற்கு மட்டுமல்லாமல் யாப்பிலக்கண பிரக்ஞை இல்லாமல் எழுதப்படும் இன்றைய புதுக்கவிதைகளுக்கும் பொருந்தும். கவித்துவமான வெளிப்பாடே கவிதையின் உள்ளமைப்பு சார்ந்த முதன்மையான அம்சமாகிறது. கவிஞனின் சுயமான அனுபவப்பார்வையின் வெளிப்பாடு, மொழியாளுமை, செறிவான அமைப்பு சார்ந்தே இன்றைய கவிதையின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. வரிகளை உடைத்து அச்சிடுவதனாலோ, அலங்காரமாக சொல்லடுக்குகளினாலோ, புதிய தகவல்களை வெளிப்படுத்துவதனாலோ புதுக்கவிதை சாத்தியமாகிவிடாது. வார்த்தை ஜாலங்கள் எக்காலத்திலும் கவிதையாவதில்லை.

பரவலாக இன்றைய புதுக்கவிதையின் தளத்தில், வாசக மனத்துள் அனுபவ அதிர்வுகள் எதையும் ஏற்படுத்தாத, கவித்துவச் செறிவற்ற தட்டையான மொழி இயங்க தமிழின் யாப்புருவங்கள் என்றும் தடையாக இருந்ததில்லை. “முன்னர் யாப்பை உதறி வெளியே தள்ளியதற்கு கவிதையின் பொருள் நியாயம் சொல்லிற்று. ஆனால் இன்றைய அனேகம் கவிதைகளில் காணும் பத்தாம்பசலி சமாச்சாரங்களுக்கும் அரசியல் கோஷங்களுக்கும் யாப்பு எப்படி வில்லங்கம் என்று எனக்குப் புரியவில்லை ” என அமரர். சுந்தர ராமசாமி கூறியது அத்தகைய தட்டையான மொழிகொண்ட கவிதைகளுக்குப் பொருந்தும்.

ஆக, கவிதையின் புறவடிவமான யாப்பு இன்றையப் புதுக்கவிஞர்களால் தேவையற்றதென கருதப்பட்ட போதிலும் கவிதையின் அடிப்படையான, உள்ளமைப்பு சார்ந்த சில குணாம்சங்கள் இன்றும் பொதுவானவையாகவே இருந்துவருகின்றன. எக்காலத்திலும் யாப்பு-யாப்பின்மை பிரச்சனையையும் மீறிய அனுபவப்பகிர்தல்களாகவே கவிதை இருக்கிறது. எதுகை மோனை உள்ளிட்ட யாப்பின் வரையறைகள் கவிதையின் அனுபவ வெளிப்பாட்டிற்கு செறிவும், நுட்பமும் ஊட்டுவதற்கு நேற்றைய கவிஞர்களால் பயன்படுத்தப்பட்ட உத்திகளே அல்லாமல் அவையே கவிதையின் மூலக்கூறுகள் அல்ல என்பதை உணரலாம். இந்தக்குழப்பங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு கவிதையில் கவிதையை, கவித்துவத்தை மட்டும் தேடும் பார்வை விரிவடையவேண்டும். அப்போது தான், நேற்றைய கவிதைகளில் மேலானவற்றையும் இன்றைய நவீன கவிதைகளில் தரமானவறையும் தெளிவாக வகைப்பிரித்தறிந்து அனுபவிக்க இயலும்.

புதுக்கவிதை ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட காலங்களிலும் அது ஓர் இயக்கமாக மறுமலர்ச்சி அடைந்த காலகட்டத்திலும் அதற்கு எதிராக எழுந்த எதிர்ப்புக்குரல்களும், முணுமுணுப்புக்களும் இன்று மறைந்துவிட்டன. தமிழறிஞர்களும் இன்று புதுக்கவச்ிதையை ஏற்றுக்கொண்டுவிட்டனர். பல்கலைகழகங்களின் பாடதிட்டத்திலும் ஆய்வுத்துறையிலும் சிறுகதை, நாவல் போலவே புதுக்கவிதையும் அங்கீகாரம் பெற்றுவிட்டது.

– பாம்பாட்டி சித்தன்

நூல் ஒப்பீடுகள்:

1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – திரு. வல்லிக்கண்ணன்
2. புதுக்கவிதை வரலாறு – திரு. ராஜ மார்த்தாண்டன்
3. ஜென் கவிதைகள் – திரு. யுவன்
4. காலம், கலை, கலைஞன் – திரு. சி. மோகன்

கடலின் கவிதைக்கு
கற்றலின் அவசியமில்லை
சாத்தியமான வெற்றிடம்
துளிமௌனத்துடன் அமர
கடலெழுதுகிறது
மூளைக்குள் கவிதையை

——————————————-

சமுத்திரத்திற்கான
வாகசைவுகளோடு
தொட்டிநீர் மீன்கள்

– பாம்பாட்டி சித்தன்

மெல்லிய சாரலில் நனையும் சிலிர்ப்பை
வெயிலுக்கு நிழலில் ஒதுங்கும் ஆறுதலை
பறவையின் சிறகசைவில்
ஊடறுத்தேகும் காற்றை
காட்டுத் தாவரங்கள் பேசிக்கொள்ளும் பாஷை ரகசியங்களை
உணரச்செய்யும் பரவச நிலையின் நீட்டிப்பாக
இந்த வலைப்பூவின் வசீகரத்தை நீங்கள் உணரக்கூடுமானால்,
அவைகள் எனதல்ல. உங்களின் அனுபவங்களே.

– பாம்பாட்டி சித்தன்

வலைப்பதிவிற்கு வருகை தரும் தோழமைக்கு, நன்றாய் இல்லையென்று சொல். வாசித்துவிட்டு ஒதுக்கப்படவேண்டியவை என்று கூறு. நிராகரிக்காதே. கூர்விமர்சனம் தீட்டி மீண்டும் வர வேண்டும் நீ. காத்திருப்பேன். நன்றி.
மார்ச் 2023
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Blog Stats

  • 21,237 hits