You are currently browsing the category archive for the ‘இலக்கியம்’ category.

ஒரு எழுத்தாளனின் லட்சிய சாசனம்
(1950ஆம் ஆண்டில் வில்லியம் ஃபாக்னர் நோபல் பரிசு பெற்ற போது அளித்த உரை)
தமிழாக்கம் : தி.க.சி

faulkner_in_paris_l.jpg
இந்த பரிசானது மனிதன் என்ற முறையில் எனக்கு வழக்கப்பெறுவதாக நான் கருதவில்லை. புகழுக்காகவோ, லாபத்திற்காகவோ அன்றி, மனித ஆன்மா என்னும் பொருளில் இருந்து இதுவரையில் இல்லாத முறையில் ஒன்றைப் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், என் ஆயுள் முழுவதும் ஆன்ம வேதனையிலும் உழைப்பிலும் நான் உருவாக்கிய ஷ்ரிஷ்டிக்காக இப்பரிசு அளிக்கப்படுகிறது என கருதுகிறேன்.
எனவே, ஒரு அறநிதி என்ற முறையில் தான் இந்த பரிசு என்னுடையது.
இந்த பரிசின் குறிக்கோளுக்கும், தோற்றுவாய்க்கும் ஏற்ப, இதில் உள்ள
பணத்தை ஒருவருக்கு காணிக்கையாக்குவது கடினமான காரியமல்ல. ஆனால், நான் அதை சீரிய முறையில் செய்ய விரும்புகிறேன். இந்த விநாடியை நான் நிற்கும் புகழின் சிகரமாக பயன்படுத்த ஆசைப்படுகிறேன். என்னை போன்று வேதனையும் விசாரமும் நிறைந்த ஷ்ரிஷ்டிப்பணியில் தம்மை ஈடுபடுத்தியுள்ள இளைஞரும் குமரியும் என் பேச்சை செவிமடுக்க வேண்டும் என்பதற்காக, நான் இச்சிகரத்தில் நிற்கிறேன். அவர்களில் ஒருவர் இதே சிகரத்தில் நிற்கக்கூடும்.
இன்று நமது அவலம் என்னவெனில், பொதுவான உலகு தழுவிய மரண பயம் ஆகும். இதை பலகாலம் சுமந்து வந்தோம்; இப்பொழுது அனுபவிக்கவும் திராணி பெற்றுவிட்டோம்!
இன்று நம்மை வருத்திவருவது, ஆன்மாவின் பிரச்சனைகள் அல்ல. ஒரே ஒரு கேள்வி தான் நம்முன் நிற்கிறது. ‘நான் எப்பொழுது தூள் தூள் ஆவேன்?…’ எனவே இன்றைய இளம் எழுத்தாளனோ, எழுத்தாளியோ தன்னுடன் தானே போராடிக்கொண்டிருக்கும் மனித இதயத்தின் பிரச்சனைகளை மறந்துவிட்டார்கள். இத்தகைய உள்மனப்போராட்டம் தான் சிறந்த படைப்பை நல்க இயலும், ஏனெனில், இது தான் எழுதுவதற்கு ஏற்ற விஷயம்; நமது உழைப்பிற்கும், மனவுளைச்சலுக்கும் உகந்த விஷயம்.

அவன் – இன்றைய இளம் எழுத்தாளன் – மறந்துவிட்ட இந்த இதய பிரச்சனைகளை மீண்டும் கற்க வேண்டும்.

அச்சம் தான் அனைத்திலும் அற்பமானது என்பதை அவன் தன் மனதிலும் ஆழப்பதித்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர், அவன் அச்சத்தை அறவே மறந்துவிட வேண்டும். அவனது “பட்டறை”யில், “தொழிற்கூடத்தில்” பழம்பெரும் இதய உண்மைகளே நிரம்பியிருக்க வேண்டும். அந்த அனாதையான மெய்ப்பொருள்கள் இல்லாவிடில், அன்பும், தன்மானமும், இரக்கமும், பெருமையும், கருணையும், தியாகமும் ஆகிய மெய்ப்பொருள்கள் இல்லாவிடில், அவனது எந்தப்படைப்பும் கணப்பொழுதில் நசித்து ஒழிந்து போகும். இதை உணர்ந்து செயல்படாதவரையில், அவன் உழைப்பெல்லாம் சாபத்தீடு தான்!
இன்றைய இளம் எழுத்தாளன் காதலைப்பற்றி எழுதவில்லை; காமத்தைப் பற்றி எழுதுகிறான்; மதிப்பு எதையும் எவரும் இழக்காத தோல்விகள் பற்றி
எழுதுகிறான்; எல்லாவற்றிலும் கீழாக இரக்கமோ, கருணையோ, இன்றி எழுதுகிறான். அவனது துன்பங்கள் உலக அறங்களின் துன்பங்கள் அல்ல; அவை வடுப்படாத துன்பங்கள் ! அவன் இதயத்தை பற்றி எழுதவில்லை; சுரப்பிகளை பற்றி எழுதுகிறான். நான் மனிதனின் அழிவை ஏற்க மறுக்கிறேன். மனிதனுக்கு தாங்கும் சக்தி உண்டு என்பதற்காக, அவனை அமரன் என்று அழைப்பது எளிது.

அழிவின் கடைசி மணியோசை, சிவந்த மரணமுலாம் பூசப்பெற்ற அந்திப்போதில், அலைகளின் அரவமற்று வெறிச்சோடி நிற்கும் பாரையில் மோதி, மெல்லத்தேய்கிறது; அவ்வேளையில் கூட ஒரு ஒலி கேட்கும், மனிதனின் அழிக்க இயலாத  மெலிந்த பேச்சுக்குரல் கேட்கும் !…

நான் இக்கருத்தை ஏற்க மறுக்கிறேன். மனிதனால், அழிவைத்தாங்கிக்கொள்ள மட்டுமல்ல; வெற்றிக்கொள்ளவும் முடியும் என்பது என் கருத்தாகும். ஜீவராசிகளில், அவனது குரல் மட்டும் வற்றி வறண்டு, மாய்ந்து மடிந்து போகாமல் இருப்பதால், மனிதன் அமரனல்ல. அவனுக்கு ஆன்மா இருப்பதால், கருணையும் தியாகமும் பொறுமையும் பொருந்திய ஆன்ம சக்தி இருப்பதால், அவன் அமரன்.
ஒரு கவிஞனின், எழுத்தாளனின் கடமை இவ்விஷயங்களை பற்றி எழுதுவது ஆகும். மனிதனின் இதயத்தை புனிதமாக்கி, தொன்மைப்புகழ் சேர்க்கும் துணிச்சலையும், தன்மானத்தையும், பெருமிதத்தையும், நம்பிக்கையையும், கருணையையும், இரக்கத்தையும், தியாகத்தையும் நினைவூட்டி, இடுக்கண்களை தாங்கும் வலிமையை அளித்தல் எழுத்தாளனின் உரிமையாகும்.
கவிஞனின் குரல், மனிதனைப்பற்றிய ஒலிப்பதிவாக மட்டுமின்றி, ஊன்றுகோலாகவும், உரம் மிக்க தூணாகவும் உற்றுழி உதவுமாக மனிதனுக்கு (அழிவைத்) தாங்கும் ஆற்றலையும், வென்று வாழும் வலிமையையும் நல்குமாக.

உரையின் ஆங்கில வடிவம் : http://www.rjgeib.com/thoughts/faulkner/faulkner.html

உரையின் ஒலி வடிவம் :http://town.hall.org/radio/HarperAudio/080294_harp_ITH.html

cofield.jpg

வில்லியம் ஃபாக்னர் 1897 செப்டம்பர் 25ஆம் தேதி மிஸிஸிப்பியில்
ஆக்ஸ்போர்டுக்கு அருகே உள்ள நியூ ஆல்பனியில் பிறந்தவர். இளமையிலேயே மிஸிஸிபி சர்வகலா சாலையைவிட்டு கனடாவின் விமானப்படையில் சேர்ந்தார். ஒரு விமான விபத்தில் சிக்கி காயமடைந்து அமெரிக்காவிற்குத் திரும்பினார். நியூ ஆர்லியன்ஸுக்கு சென்று ஷெர்வுட் ஆண்டர்சனுடன் தங்கி சில கட்டுரைகள் எழுதத்தொடங்கினார்.

நியூயார்க்கிலும் ஆக்ஸ்போர்டிலும் சிறிது காலம் சுற்றுப்பிரயாணம் செய்து
பின் ஆக்ஸ்போர்டுக்கு திரும்பி ஒரு இயந்திர சாலையில் இரவு வேளைகளில் கரி அள்ளும் வேலையில் அமர்ந்தார். இங்குதான் தம்முடைய சிறந்த நாவல்களை திருத்தி எழுதினார். 1931ல் எழுத்து மூலமே வாழ்க்கை நடத்துவது அவருக்கு சாத்தியமாயிற்று. 1939ல் அவருக்கு ஓ. ஹென்றி ஞாபகார்த்தப் பரிசு கிடைத்தது. தேசிய கலை இலக்கிய கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். புது அமெரிக்க நாவல் இலக்கியத்திற்கு அவர் செய்த சேவைக்காக அவருக்கு 1949ல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இதன் பிறகு உலகத்தின் கவனம் அவருடைய எழுத்துகளின் மீது திரும்பியது.

(“வில்லியம் ஃபாக்னர் – சில கதைகள்” என்ற நூலிலிருந்து : வ.உ.சி நூலக வெளியீடு)

Robert Lee Frost

1874ல் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ பிரதேசத்தில் பிறந்தவர். பதினோரு வயதில் தந்தையின் மறைவு அவரை பாதித்தது. மிக இளமையிலேயே சக பெண் ஒருவரை (காதல்வயப்பட்டு) மணந்துகொண்டார். 26வது வயதில் அவர் நியு இங்கிலாந்துப் பண்ணைகளின் விவசாயி – கவிஞன் என்கிற பாத்திரத்தின் தொடக்கமாக, நியு ஹாம்ப்ஷயரின் சிறியதொரு பண்ணையில் தன்னை நிறுத்திக்கொண்டார். அவரின் குடும்பத்தினரின் மரபணுக்களில் ஏதோ குறைபாடிருந்தது. நாற்பதாண்டுகால ஆழமும், வேட்கையும் கொண்டிருந்த திருமணவாழ்வு, அவரின் மனைவியின் மறைவிற்குப் பின் திரு ஃபிராஸ்ட்டை இங்கிலாந்து பயணிக்கச் செய்தது. அங்கு அவரது முதல் தொகுப்பு “A Boy’s Will” வெளியாகி, விமர்சன ரீதியிலான வெற்றிகண்டது. எஸ்ரா பவுண்டின் கவனமும் இவரின் மேல் படிந்தது.

1914ல் இரண்டாவது தொகுதி “North of Boston” மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. அடுத்த ஆண்டு நாடு திரும்பினார். மிக்சிகன் – அம்ஹெர்ஸ்ட் பலகலைக்கழகங்களில் பேராசிரியராக விளங்கினார். கதே, தாமர் ஹார்டியைவிடவும் நீண்ட ஆயுள் கொண்டிருந்த அவர், தன் இலக்கியத்தரங்களைக் காப்பாற்றினார்.அதிலே அவர் எளிமையாயும், உன்னதமாகவும் இருந்தார். நகர்கின்ற மணல் திட்டில் கீழ்மட்டத்தில் எங்கோ ஓரிடத்தில் திடமான பாறை காணப்பட்டது. அவர் மடியும் மட்டும் அது நீடித்தது. அதுபோலவே, ஒரு போதும் திருப்தியுறாத அதீத வேட்கையும் இருந்தது. மாபெரும் கவிதைகள் எழுத விரும்பினார். டி.எஸ்.எலியட் பெற்றிருந்த அங்கீகாரம் தனக்கு வேண்டுமென விரும்பினார். வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத அறுதி அங்கீகாரம் எலியட்டுக்கு கிடைத்திருந்தது. எலியட் நோபல் பரிசை வென்றிருந்தார். எனவே 1960ல் நோபல் பரிசு தனக்கு கிட்டவில்லையென மிகவும் வருந்தினார், பிற்பாடு கலகலப்பாகிவிட்டார். அவரது 88ஆவது வயது வரையிலும் அவரை கௌரவங்களும், பதக்கங்களும் தேடிவந்தவண்ணமிருந்தன. நான்கு புலிட்ஸர் பரிசுகள் கிடைத்திருந்தன. ஆனால் நோபல் பரிசை இன்னும் வென்றபாடில்லை. 1963ல் அவரது பெயர் நோபல் பரிசுக்காக ராபர்ட் க்ரேவ்ஸ் முன்மொழிந்திருந்த கடிதத்தை அவரது நீண்டகால நண்பர் அண்டர் மேயர் வாசித்துக் காட்டினார். அதன்பின் ஒருவாரம் கழித்து இறந்துபோனார் ஃபிராஸ்ட்.

“Variety of men” (C.P. Snow / Mc Millen, 1967 – நூலிருந்து)

ராபர்ட் ஃபிராஸ்ட் கவிதைகள்
மொழியாக்கம் : சா.தேவதாஸ்

போகாத பாதை

மஞ்சள் வனமொன்றில் இருபாதைகள் பிரிகின்றன
இரண்டிலும் போகமுடியாதது வருந்த வைக்கிறது
ஒரு பயணியான நான் நீண்டநேரம் நின்று
என்னால் முடிந்தமட்டும் ஒன்றையொன்று உற்று நோக்கினேன்.
ஒன்று புதரில் எங்கே வளைந்து திரும்புகிறதென்று
மற்றொன்று சீரியதாய் இருந்தது இன்னும்
தடங்கள் படியாது புல் நிறைந்ததாயும்
அக்காலையில் இரண்டும் சமமாகக் கிடந்தன.
எந்தக் காலடியும் பதிந்திராத இவைகளில்
முதல் பாதையை இன்னொரு தினத்துக்கு ஒதுக்கினேன்!
ஒருபாதை இன்னொன்றாகக் கிளைத்துச் செல்வதறிந்ததும்
திரும்பி வருவேனா என்று சந்தேகித்தேன்.
இதனை பெருமூச்செறிய கூறிக்கொண்டிருப்பேன்
பல யுகங்கள் கழித்தும்
வனமொன்றில் இருபாதைகள் பிரிந்தன, நான்
இதுவரை போகாத பாதையைத் தெரிவு செய்தேன்.
அதுதான் உண்டாக்கியது எல்லா வித்தியாசங்களையும்.

*********************************

தொலைவாகவும் இயலாது ஆழமாகவும் இயலாது

கடற்கரை ஓரமாய் உள்ளவர்கள்
திரும்பி ஒரே திசையில் நோக்குகின்றனர் எல்லோருமாக.
தம் முதுகைத் திருப்புகின்றனர் நிலத்திற்கு
நாளெல்லாம் நோக்குகின்றனர் கடலினை.
கப்பலொன்று தன் உடற்பாகத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு
ஈரத்தரை பிரதிபலிக்கிறது புல்போல
நிற்கும் கடற்காகத்தை.

நிலம் வேறுபடக்கூடும் மேலும்
ஆனால் நிஜம் எதுவாயினும்
நீர் வந்து சேர்கிறது கரைக்கு
மக்கள் பார்க்கின்றனர் கடலினை

அவர்களால் தொலைவாக பார்க்க முடியாது
அவர்களால் ஆழமாகப் பார்க்க முடியாது
ஆனாலும் எப்போதேனும் தடையிருந்தா
அவர்களின் கவனிப்புக்கு.

*********************************

பனிப்பாலைப் பகுதிகள்

பனி வீழ்வும் இரவு கவிழ்தலும் விரைவாக
கடந்த காலத்துள் போய்க்கொண்டிருந்ததாக நான் கண்ட வயலில்
தரை அநேகமாய் பனியால் மூடுண்டது மிருதுவாய்
ஆனாலும் தலைகாட்டும் சில புல்வண்டுகள்
அதனைச் சூழ்ந்திருந்த வனங்கள்
கொண்டிருந்தன அவற்றினுடைவைகளை
விலங்குகளெல்லாம் அடைந்து கிடக்கும் தம் குகைகளில்
எண்ணிப்பார்க்க மறந்தவனாய் இருக்கின்றேன்
நானறியாதபடி என்னை உள்ளடக்கிக் கொள்ளும் தனிமை.

தனித்திருக்கும் அத்தனிமை
தான் தணிவதற்குள் மேலும் தனிமை கொள்லும்
இருளார்ந்த பனியின் வெண்விரிப்பாக
உணர்வு பலமற்று, வெளிக்காட்ட ஏதுமின்றி.

வெற்று வெளிகளில் அவை கலவரப்படுத்த இயலாது என்னை
மானுட இனம் இல்லாத நட்சத்திரங்களுக்கிடையே
என் வீட்டருகே கொண்டிருக்கிறேன் அதனை
இப்பாலைவனப் பகுதிகளாலேயே என்னைக் கலவரப்படுத்த.

*********************************

சூது

பருத்த வெண்சிலந்தி ஒன்றைக் கண்டேன்
வெள்ளை மூலிகைச் செடிமேல் பூச்சியொன்றை கவ்வியபடி
கெட்டியான வெண்பட்டுத் துணிபோல
மரணம் மற்றும் நோயின் பாத்திரங்கள்
ஆயத்தமாயுள்ளன காலை நாடகத்தை ஆரம்பிக்க
சூனியக்காரியின் கஷாயத்தில் சேர்ந்திருப்பவைபோல
ஒரு பனித்துளி சிந்தி, மலர் நீர்க் குமிழியாக
மற்றும் காகிதப் பருந்தென தூக்கிச் செல்லப்படும் உயிரற்ற சிறகுகள்.

வெண்மையாய் இருப்பதற்கும்
பாதையோரத்து நீலத்திற்கும் மற்றும் மாசற்ற மூலிகைக்கும்
அம்மலருக்கும் என்ன சம்பந்தம்?
உச்சியில் சிலந்தியை நிறுத்தி
அப்புறம் இரவில் வெண்பூச்சியை அங்கு செல்ல வைத்தது எது?
திகைப்புறச் செய்யும் இருளின் சூதன்றி வேறென்ன?
எவ்வளவு அற்பமானதெனினும் கட்டுப்படுத்தும் சூது.

ஒப்பீடுகள்:

1. http://www.wikipedia.org
2. Princeton University Library Website
3. புது எழுத்து சிற்றிதழ்

பாமுக் (My Name is Red புத்தகத்துடன்)

அரசியலைக் குறித்து பாமுக் வெளிப்படுத்தும் கருத்துக்களைவிட, அவரது படைப்புகளில் மிளிரும் கருத்துகள் மிகவும் புத்திசாலித்தனமானவை.
—ஒரு விமர்சனத்திலிருந்து.

படைப்புகள்:

1. Darkness and Light (1979)
பின்னாளில் Mr. Cavdet and his Sons (1982) என்ற பெயரில் வெளியானது பெரியதொரு ஆலமரத்தின் விழுதுகளென பிள்ளைகள் நிரம்பிய குடும்பத்தையும், செல்வ வளமிக்க அதன் மூன்று தலைமுறைகளையும் பற்றிப் பேசுகிறது இந்த நாவல். தாமஸ் மன்னின் (Thomas Mann) பாணியில் எழுதப்பட்டது.

2. The Silent House (1983)
துருக்கி நாடு உள்நாட்டுப் போரின் விளிம்பிலிருந்த 1980-களில், கடற்கரை வாசஸ்தலமொன்றில் வசிக்கும் மூதாட்டியை குடும்பத்தினர் காணச் செல்லும் நிகழ்வு 5- வெவ்வேறு கோணங்களில் விவரிக்கப்படுகிறது. இவ்வுறவினர்களிடையே நிகழும் அரசியல் விவாதங்கள் மற்றும் நட்பு ஒரு குறியீடாக மாறி, நாட்டிலிருக்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் அதிகாரப் போட்டியினால் உருவாகிற சமூக குழப்பத்தை எதிரொலிக்கிறது.

3.The White Castle (1985)
ஒரு இத்தாலியப் பொறியாளரின் விவரிப்பில் விரிகிறது புதினம். நவீன மயமாதலையும் அதன் முரண்நகையையும் விளக்குகிறது. 17-ம் நூற்றாண்டில், வெனிஸிலிருந்து நேப்பிள்ஸ் நகருக்குப் பயணமாகின்ற இத்தாலியப் பொறியாளர் ஒருவர் துருக்கியர்களால் சிறைபிடிக்கப் பட்டு ஹோஜோ என்பவனிடம் அடிமையாக்கப் படுகிறார். ஹோஜோ, அய்ரோப்பியர்களிடமிருந்து அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், வானசாஸ்திரம் ஆகிய துறைகளின் வளர்ச்சி நவீனங்களை அறிந்து கொள்வதன் மூலமாக ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் மகத்துவத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று நம்புகிறான். ஆனால், ஒரு நிலையில் தகவல்களின் பரிமாற்றம் என்ற பெயரில் தங்களின் அந்தரங்கமான ரகசியங்களை பரிமாறிக்கொள்வதில், இருவரின் சுய அடையாளங்களும் இடம் மாறுவதை உணர்ந்து ஹோஜோ ஆச்சரியப்படத் துவங்குகிறான்.

4. The Black book (1990)

இஸ்தான்புல் நகரத்தின் வழக்கறிஞர் ஒருவரின் மனைவி தலைமறைவாவதில் தொடங்குகிறது நெடுங்கதை. காணாமல் போன தனது மனைவியை அவளின் சகோதரன் (மாற்றாந்தாய் மகன்) எங்கோ மறைத்து வைத்திருக்கிறான் என்று சந்தேகப்படுகிறார் வழக்கறிஞர். பத்திரிக்கையில் பத்திகள் எழுதும் அவனை தேடும்போது அவனும் காணாமல் போயிருப்பது தெரிய வர, அவர்களிருவரையும் தேட தலைப் படுகிறார். ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் காலத்திலிருந்த இஸ்தான்புல் மற்றும் நிகழ்காலத்தில் இருக்கின்ற இஸ்தான்புல் என இரண்டையும் இணைத்துப் பார்க்க முயல்கிறார் பாமுக்.

5. The New Life (1995)
இளம் மாணவன் ஒருவன் தான் வாசிக்கின்ற ஒரு புத்தகத்தினால் தனது பழைய வாழ்க்கை மற்றும் அடையாளங்களிலிருந்து வேரோடு களைந்தெறியப்படுகிறான். தனக்கு அமைந்த புதிய வாழ்க்கையில் ஓர் அழகிய பெண்ணுடன் காதல் வயப்படுகிறான். அதன் பின் காதலில் முளைக்கும் போட்டி, கொலை முயற்சி என சுவாரசியமான சம்பவங்களோடு நகர்கிறது நாவல்.

6. My name is Red (1998)
புத்தகங்களின் ஓரங்களை அலங்காரம் செய்யும் நுண் ஓவியர்களின் வாழ்வைப் பற்றியது. 16-ம் நூற்றாண்டில் துருக்கியை ஆண்ட சுல்தான் தனது ராஜ்ஜியத்தின் பெருமைகளை விளக்கும் புத்தகம் ஒன்றிற்கு அலங்கார ஓவியங்கள் வரைவதற்காக நுண் ஓவியக்கலையில் தேர்ச்சி பெற்ற ஓவியர்களை நியமிக்கிறான். இந்த ஓவியங்கள் மேற்கத்திய சாயல் கொண்டதாக அமைய வேண்டும் என்று விரும்புகிறான். இஸ்லாமிய ஓவியன், உலகை கடவுள் ஏற்படுத்தி இருக்கும் ஒழுங்கமைவின்படி சித்திரங்களை உருவாக்குகிறான். மேற்கத்திய ஓவியன், உலகைத் தன் பார்வையின் வழியாக அவதானித்தும் உணர்ந்தும் பதிவு செய்கிறான். ஆகவே இரண்டும் எதிரெதிர் நிலைகள் கொண்டவை. சுல்தான் விரும்புகிற இந்த மரபை மீறிய சித்திரங்கள் தீட்டும் பணி ரகசியமாக நடைபெறுகிறது. அப்போது பணியில் ஈடுபட்ட ஓவியன் காணாமல் போகிறான். அதனை அடுத்து நாவலில் ஏற்படும் திருப்பங்கள் அற்புதமானவை. மேலும், பல குரல்களில் விரிகிறது நாவல். (கிணற்றில் மிதக்கும் பிரேதம், கொலையை நேரில் கண்ட நாய் என பட்டியல் நீள்கிறது).

7. Snow (2000)
சொந்த மண்ணில் நிலவிய அரசியல் சூழல்களால், ஜெர்மனியில் ஃபிராங்க்பர்ட் நகரில் பத்து வருடங்களாக அகதியாய் வசித்து வந்த ‘கா’ என்ற கவிஞர் துருக்கிக்கு திரும்புகிறார். கணவனைப் பிரிந்த தனது பழைய நண்பியை சந்திக்கவும், ஒரு பத்திரிக்கையாளனாக வாழ்வைத் தொடரும் பொருட்டும், துருக்கியின் வட கிழக்கில் இருக்கும் “கார்ஸ்’ என்ற நகரை அடையும் அவரின் பார்வையில் சுழலத் துவங்குகிறது புதினம். இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் மதச்சார்பற்றவர்களுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் “கார்ஸ்” நகரம் (மேற்கின் தாக்கம் பெற்ற துருக்கியரும் துருக்கியின் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இயங்கும் இஸ்தான்புல் நகரை குறியீடாகக் காட்டுகிறது). கார்ஸ் நகரம் உறைப்பனி பொழிவில் சிக்கி உலகின் மற்றப் பகுதிகளிலிருந்து துண்டிக்கப் படுவது (துருக்கி உலகின் மற்ற நாடுகளிடமிருந்து அறிவியல் தொழில்நுட்பம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றால் தனியாவது என்ற குறியீடாக வெளியாகிறது). கார்ஸ் நகரில் தொடராக நிகழும் பெண்களின் தற்கொலைகள், ‘கா’ சந்திக்கும் தீவிரவாதி, காவிற்கும் அவது பழைய நண்பிக்கும் இடையே நிகழும் இழையறாத நட்பு என் பல அடுக்குகளைக் கொண்ட இந்த புதினம் அரசியல் ரீதியாக மட்டுமின்றி இலக்கிய மட்டத்திலும் ஒரு முக்கியமான புத்தகம்.

8. Istanbul : Memories of a City (2005)

தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் நகரத்தை குறித்து பாமுக் எழுதியுள்ள இந்த தொகுப்பு ஒரு பாதி நினைவுக்குறிப்பாகவும் மறு பாதி பெரும் மரியாதைக்குரிய அர்ப்பணமாகவும் விரிகிறது.
இஸ்தான்புல் நகரமானது,

ஆசியா- ஐரோப்பா
கிழக்கு – மேற்கு
கிறிஸ்தவம்- இஸ்லாம்

ஆகியவைகளின் குறுக்குச் சாலைகளில் அமைந்துவிட்டது. ஒரு காலத்தில் பைசன்டைன் மற்றும் ஒட்டமான் சாம்ராஜ்ஜியங்கள் கோலோச்சிய நகரம். மேற்சொன்னவைகளின் மூலமாக கலாச்சாரம் மற்றும் வளமான சரித்திரக் கலவை உருவானது மாத்திரமல்ல தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் ஏற்பட்ட குழப்பமும் சேரும். இத்தகு பின் புலங்களால் இந்நகரின் மக்களுக்கு தங்களது உறவுகளின் வேர்களைக் குறித்த சந்தேகமும் பாதங்கள் பாவியிருக்கும் பல்கூறு கலாச்சாரங்களிலிருந்து தங்களின் அடையாளத்தை மீட்டெடுப்பது குறித்த ஐயப்பாடும் அடங்கும்.

இதனிடையே பாமுக் தனது குழந்தைப் பருவம் கூச்சலும் குழப்பமும் மிகுந்த பெரியதொரு குடும்பத்தில் கழிந்த விதத்தையும் அதனின்று துருக்கிய ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களை அவர் கண்டறிந்ததையும் அவர்கள் எவ்வாறு பாமுக்கின் வாழ்வை பாதித்தார்கள் என்பதையும் தெளிவாக கூறுகிறார்.

இஸ்தான்புல் நகரத்தின் பண்டைய செழுமையைக் குறித்து நேர்மையுடனும் வியப்புடனும் அவரது எண்ணங்கள் அசைபோடுகின்றன.

9. Other Colors

1999ல் வெளியான இந்த கட்டுரைத் தொகுப்பு அடக்குமுறையின் கீழ் வாழும் குர்த் இன மக்களின் மீது நிகழும் வன்முறையைப் பற்றி பேசுகிறது. 2008ம் ஆண்டு வசந்தத்தில் இது ஆங்கிலத்தில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

10. Museum of Innocence

அடுத்த நாவலுக்கான முயற்சிக்களில் இப்போது மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறார் பாமுக்.

இவை தவிர அவர் The Secred Face என்ற திரைப்படத்திற்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இலக்கிய கடத்தல் அல்லது இலக்கிய திருட்டு:

இலக்கிய கடத்தலுக்கான விமர்சனமும் பாமுக் மீது வீசப்பட்டது. அவரது “The White Castle”, நாவலின் சில பகுதிகள் இன்னொரு நாவலிலிருந்து திருப்பட்டது என்பதே அது. அதை மறுக்காமல் ஒப்புக்கொண்டு இன்னொரு நாவலின் பெயரை மிகத்தாமதமாகவே தனது ஒப்பீடுகளின் வரிசையில் சேர்த்தார்.

அவரை ஆதரித்துப் பேசும் விமர்சகர்கள் இத்தகு தன்மை பின்நவீனத்துவத்தில் காணப்பெறும் “intertexuality”யே (ஒரு எழுத்தாளரின் படைப்பில் பல்வேறு இதர படைப்புகளின் சாரம், பகுதிகள் இடம் பெறுவது) என்பது அவர்களின் வாதம். இதை இலக்கிய திருட்டு என்று கொள்வது கூடாது. உதாரணமாக, Umberto Ecoவின் The name of the Rose என்ற படைப்பில் பல்வேறு இதர நாவல்களின் சாரம் இடம் பெறுவது நாம் கவனிக்கலாம். ஆனால் படைப்பின் இறுதியில் நூல் ஒப்பீடுகளின் பட்டியலில் அவையாவும் இடம் பெற்றுள்ளன. ஆனால் பாமுக்கின் படைப்புகளில் அவ்வாறு இடம் பெறாததை ஒரு குற்றச்சாட்டாகவே பாமுக்கை குறைகூறும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவையனத்திற்கும் ஓர்ஹான் பாமுக்கின் வாய் பதில் பேசாமலிருந்தாலும் அவரின் மனசாட்சி அதே மவுன மொழியைப் பேசாது என்று நாம் நம்பும் அதே சமயத்தில், ஒரு தனி மனிதனுக்குள் ஊடாடித் திரிந்து அவ்வப்போது அவனது மன எழுச்சிகளில் மற்றும் வீழ்ச்சிகளில் பங்குபெற்று ஓயாது புத்துயிர் பெற்றலையும் அந்த இரண்டாவது குரலை மிக நேர்த்தியாக அவரது படைப்புகளில் பதிவு செய்திருப்பது அவரை ஒரு தன்னிகரற்ற படைப்பாளியாக காலத்தை தாண்டி முன்னிருத்துகிறது.

ஒப்பீடுகள்:

1. http://en.wikipedia.org/wiki/Orhan_Pamuk
2. http://www.orhanpamuk.net/
3.http://www.theparisreview.org/viewmedia.php/prmMID/5587
4. http://en.wikipedia.org/wiki/Kurdistan
5. http://en.wikipedia.org/wiki/Armenia

கடந்த காலத்தில், முப்பதாயிரம் “குர்த்” (Kurd) இன மக்களும் ஒரு மில்லியன்
ஆர்மீனியர்களும் துருக்கியின் நிலப்பகுதிகளில் கொல்லப்பட்டார்கள். ஆனால் இன்று நம்மில் எவருக்கும் அதைப் பற்றி பேச துணிவில்லை.
—- ஓர்ஹான் பாமுக்
(பிப்ரவரி -2005ல் சுவிஸ் நாட்டுப்பத்திரிக்கையொன்றுக்கு அளித்த நேர்காணலில்)

ஓர்ஹான் பாமுக்

துருக்கி நாட்டிற்கு முதல் நோபல் பரிசு, அதுவும் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பாமுக் பெற்றுத் தந்திருப்பது கொண்டாடத் தகுந்த விசயம்தான். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக எழுத்துத்துறையில் இயங்கி வரும் பாமுக்கின் கருத்துக்களும், எழுத்தின் கூறுகளும் சர்ச்சைக்குரியனவாகவே இருந்து வந்துள்ளன. அவர் மேலே சொன்ன கருத்துக்கு வரலாற்றிலிருந்து எடுத்தாளப்பட்ட கீழ்காணும் மூன்று பத்திகளை நீங்கள் படிப்பது தவிர்க்கவியலாததாகிறது.

இளம் துருக்கியர் இயக்கம்:

துருக்கி நாட்டை ஆண்டு வந்த ஒட்டமான் பேரரசு தனது இறுதிக் காலத்தில் வலிமை குறைந்து விளங்கியது. அந்த சமயம் ராணுவத்தில் இருந்த இளைஞர்கள் ஒன்றுகூடி வெற்றிகரமாக ஆட்சிக்கவிழ்ப்பு செய்து அரசைக் கைப்பற்றினர். அதன்பின் “இளம் துருக்கியர் இயக்கம்” என்று தங்களுக்கு பெயர் சூட்டிக்கொண்டு அவர்கள் ஈடுபட்ட செயல்கள் வரலாற்றில் படிந்த கறைகளாகவே எஞ்சுகின்றன. 1913 முதல் 1918 வரை இந்த இயக்கம் துருக்கியை தனது பிடியில் வைத்திருந்தது. அவர்கள் ஆட்சிக்காலம் “துருக்கியின் இருண்ட காலம்” எனலாம்.

குர்த் இன மக்கள்:

இரான், இராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் குர்த் இன மக்கள் வாழும்நிலப்பகுதிகள் கூட்டாக குர்திஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட எல்லா நாடுகளிலும் இன்றும் இந்த சிறுபான்மை இன மக்கள் வாழ்கிறார்கள். துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் வசித்து வந்த இவர்கள் மீது 1915 – 1917 கால கட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் கணக்கிடலங்காது. துப்பாக்கிச்சூடு, குர்த் கிராமங்கள் சூறையாடல், விடவாயுப் பிரயோகம், விமானத் தாக்குதல் என தொடர்ந்த தாக்குதல்களில் 30,000 குர்த் இன மக்கள் கொல்லப்பட்டனர். இளம் துருக்கியர் இயக்கத்தால் நிகழ்த்தப்பட்ட இந்த இனப் படுகொலை துருக்கியின் மேல் படிந்துவிட்ட தீராத களங்கமாகும்.

ஆர்மீனியா:

முதலாம் உலகப்போரின் போது தன் எல்லைப் பிரதேசமான (அப்போதைய சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த) ஆர்மீனிய நிலப்பரப்பின் மீது தாக்குதல் நடத்தி தனது கட்டினுள் கொண்டுவந்த இளம் துருக்கியர் இயக்கம் அங்கும் வெறியாட்டம் போட்டது. அதன் விளைவாக ஒரு மில்லியன் ஆர்மீனிய மக்கள் “இனப்படுகொலை” செய்யப்பட்டனர்.

உலகின் பெரும்பாண்மையான நாடுகள் “இனப்படுகொலை” என்று இடித்துரைக்கும் மேற்சொன்ன நிகழ்வுகளை துருக்கி நாடு “உலகப்போரில் பலியானோரின் எண்ணிக்கை” எனத் திருத்துகிறது.

துருக்கியின் பாரம்பரியத்தையோ, அதன் குடியரசையோ அவமானப்படுத்தும் வகையில் பேசும் எவரும் “தேசத்துரோகி” என குற்றம் சுமத்தப்பட்டு ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரை சிறை வைக்க துருக்கிய அரசு 2005ல் ஒரு சட்டம் பிறப்பித்தது.

படுகொலையான மக்கள் சிந்திய செங்குருதி நிலம் உறிஞ்சியது போக வாய்க்காலாய் வழிந்தோடி துருக்கியின் போஸ்போரஸ் நதியில் கலந்தோடச் செய்த துருக்கியின் பாரம்பரியத்தைத்தான் ஒர்ஹான் பார்முக்கின் நேர்காணல் (கட்டுரையின் துவக்க வரிகளில்) குறிப்பிடுகிறது.

பாமுக் மீதான வழக்குகள்:

பாமுக் மீது உடனடியாக குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2005 டிசம்பரில் நடந்த விசாரணை முடிவில் துருக்கியின் இராணுவத்தை அவமானப்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு விலக்கிக்கொள்ளப்பட்டது. இருப்பினும் “துருக்கியின் பாரம்பரியத்தை” விமர்சித்த குற்றச்சாட்டு விலக்கிக்கொள்ளப்படவில்லை. மேலும் இந்த வழக்கு நீடித்தது. இதனிடையே “ஐரோப்பிய ஒன்றியம்” இவருடைய விசாரணையில் கவனம் செலுத்த “பார்வையாளர் குழு” ஒன்றை துருக்கிக்கு அனுப்பியது. உலகின் பல்வேறு நாடுகள் அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டன. தவிர, ஜோஸ் சரமாகோ, கேப்ரியேலா கார்சியா மார்க்குவேஸ், குந்தர் கிராஸ், உம்பர்தோ எக்கோ, கார்லோஸ் ப்யூன்டஸ், ஜான் அப்டைக், மாரியோ வர்கஸ் லோசா, யுவான் குவைத்திசோலோ ஆகிய பிரபலமான எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து பாமுக்கிற்கென எழுப்பிய குரலும் இதில் அடங்கும்.

இறுதியாக துருக்கிய நீதித்துறையமைச்சகத்திடம் ஒப்புதலுக்கென்று வந்த இவரது இரண்டாவது வழக்கிற்கு ஒப்புதல் அளிக்க அமைச்சகம் மறுத்துவிட்டது. எனவே இவர் மீதிருந்த இரண்டாவது வழக்கும் ஜனவரி 2006ல் கைவிடப்பட்டது.

வழக்கு குறித்த விமர்சனம்:

குர்திஷ் இனத்தில் யாசர் கெமால் (Yasar Kemal) என்னும் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர், தனது வாழ்நாளை குர்திஷ் மக்களுக்கென அர்ப்பணித்து, அவ்வினத்தின் சந்தோஷங்களையும், வேதனைகளையும் எழுத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது படைப்புகளுக்கு கிடைக்காத அங்கீகாரம் அவ்வின மக்களை குறித்து துருக்கியிலிருந்து விமர்சனங்களை எழுப்பியவருக்கு கிடைப்பது (நோபல் பரிசு வடிவில்) தகுதியானது தானா?

இன்னொரு கூற்று, கடந்த முப்பது வருடங்களாக எழுத்துலகில் இயங்கி வரும் பாமுக், ஏன் இத்தனை தாமதமாக குர்த் இன மக்களுக்காகவும், ஆர்மீனியர்களுக்காகவும் குரல் எழுப்பவேண்டும். இது தன்னை விளம்பரத்திற்காக முன்னிருத்தும் முயற்சியன்றி வேறென்ன?

இத்தகைய விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில்,

“அரசியல் சார்ந்த விமர்சனங்களுக்காக வசைப்பெயரெடுத்தவன் நான். இத்தகைய விமர்சனங்களில் பெரும்பான்மையானவை, வெளிநாட்டுப் பத்திரிக்கை நேர்காணல்களின் பகுதிகள், துருக்கி தேசியவாத பத்திரிக்கையாளர்களால் வெட்கமின்றி திரிக்கப்பட்டு, அவைகளில், நான் இருப்பதைக்காட்டிலும் மிதமிஞ்சிய புரட்சியாளனாகவும் அரசியல் கோமாளியாகவும் சித்தரிக்கும் முயற்சியே.”

என்கிறார் ஒர்ஹான் பாமுக்.

ஒப்பீடுகள்:

1. http://en.wikipedia.org/wiki/Orhan_Pamuk
2. http://www.orhanpamuk.net/
3.http://www.theparisreview.org/viewmedia.php/prmMID/5587
4. http://en.wikipedia.org/wiki/Kurdistan
5. http://en.wikipedia.org/wiki/Armenia

 

ழாக் ப்ரெவர்

“கதிரவன் எல்லோருக்கும் பிரகாசிக்கிறான்
சிறையிலிருப்பவர்களுக்கு அவன்
பிரகாசிப்பதில்லை
சுரங்கங்களில் உழைப்பவர்களுக்கும்
பிரகாசிப்பதில்லை…

திறந்த வெளியில் அமர்ந்து
எல்லாமே நல்லபடியாக இருக்கிறதென்று
எழுதிக்கொண்டிருக்கும் மற்றவர்களின்
பேனாக்களை
இருட்டறையில் இருந்துகொண்டு
தயாரிப்பவர்களுக்கும்
பிரகாசிப்பதில்லை.”

என்று எழுதிய ழாக் ப்ரெவர் 1900ம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் பிறந்தார். பிரான்ஸின் வட மேற்கில் அட்லாண்டிக் கடலோரத்தின் பிரித்தானியா பிரதேசத்தை சேர்ந்தவர். மீனவர் துறைமுக வாழ்க்கையும், கடலின் மேல் இவர் கொண்டிருந்த காதலும் பல பிரபலமான கவிதைகளில் பிரதிபலித்தன. கட்டாய இராணுவ சேவை புரிந்த இவர் பிற்காலத்தில் பிரபலமான சர்ரியலிஸ்ட் ஓவியராக அறியப்பட்டார். பிரான்ஸை விட்டு புலம்பெயர்ந்தும் மீண்டும் சொந்த நகருக்கு திரும்பியும் வாழ்ந்த இவரது படைப்பாற்றல் திரைப்படம், கூட்டுறவு நாடக தயாரிப்பு (Collective Theater), எள்ளல் கவிதை மற்றும் பாடல் ஆகிய தளங்களில் இயங்கியது. இவைகளில் ஒன்றன் தாக்கம் அவரது அடுத்த படைப்புகளில் தென்பட்டு அவரது படைப்புகளுக்கு ஒருவித தனித்தன்மை அளிக்கத்துவங்கியது. 1929 – 1931 பிரான்ஸில் நடந்த பெரும் பொருளாதார சீர்குலைவு, 1935களில் ஏற்பட்ட இடதுசாரி ஆட்சி, 1937ல் இருந்து 46 வரை (ப்ரெவர்-கார்னே) உருவாக்கிய திரைப்படைப்புகள், இரண்டாம் உலகப்போர் ஆகியவைகளை தொடர்ந்து 1946ன் இறுதியில் முதல் கவிதை தொகுப்பான “சொற்கள்” வெளியானது.

ஓவியங்களில் பிகாஸோவும் கவிதைகளில் வில்லியம் ப்ளேக்கும் அவரை கவர்ந்திருந்தாலும் ப்ரெவரின் உலகத்தை பெரிதும் ஆக்கிரமித்திருந்தவர்கள் குழந்தைகள். அவர்களின் வெகுளித்தனமும் இயல்பான வெளிப்பாடுகளும் அவரை மிகவும் பாதித்தன. பெற்றோர்களின் கண்டிப்பு, பள்ளிக்கூடங்களின் இருக்கம், வறுமை, போர் இவற்றிற்கு ஆளாகும் குழந்தைகளின் பரிதாப நிலைக்கு காரணமான பெரியோர்களை அவர் சாடுகிறார். “குழந்தைகளின் பார்வையை சந்திப்பது பெரியவர்களுக்கு எப்போதும் சங்கடமாகவே இருந்திருக்கிறது. அவர்களின் இந்த சங்கடம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் ப்ரெவர்.

பாமர மக்களின் மொழியை இயல்பாகப்பேசிய ப்ரெவரை “இருபதாம் நூற்றாண்டின் குழந்தை” என பிரான்ஸ் மட்டுமல்லாது நமது கவியுலகமும் கொண்டாடுகிறது. இவர் 1977 ஏப்ரெல் 11ஆம் தேதி மறைந்தார். அவர் படைத்தவை 55 திரைப்பட கதை-வசனங்கள், 33 புத்தகங்கள் (6 கவிதை தொகுப்புகள் உட்பட), நூற்றுக்கணக்கான கொலாஜ் (Collage) சித்திரங்கள், 543 பாடல்கள்.

இழந்த நேரம்

ஆலையின் கதவிற்கு முன்னால்
திடீரென்று நிற்கிறான் தொழிலாளி
அவன் அங்கியைப் பிடித்து
இழுத்தது இனிய வானிலை
திரும்பிப் பார்த்த அவன்
சூரியனைப் பார்க்கிறான்
முற்றிலும் சிவப்பாக முழு உருண்டை
ஈயம் பூசிய வானிலிருந்து
புன்னகைத்தவாறு
அவனைப் பார்த்துக் கண்ணடிக்கிறது
பரிச்சயத்துடன்
தோழா, சூரியனே! நீயே சொல்
இது போன்ற ஒரு நாள்பொழுதை
முதலாளிக்கு அர்ப்பணிப்பதென்பது
சுத்த மடத்தனம் என்று
தோன்றவில்லையா உனக்கு?

மக்குப் பையன்

வேண்டாம் என்று தலையை ஆட்டுகிறான்
ஆனால் சரி என்கிறது அவன் இதயம்
அவனுக்குப் பிடித்ததற்கெல்லாம் ‘சரி’
ஆசிரியருக்கு ‘வேண்டாம்’
நின்றுகொண்டிருக்கும் அவனிடம்
கேள்வி கேட்கப்படுகிறது
எல்லாப் பிரச்சனைகளும் அவன்முன்
வைக்கப்படுகின்றன
திடீரென ஒரு பைத்தியக்காரச் சிரிப்பு
அவனைப் பற்றிக்கொள்கிறது
எல்லாவற்றையும் அழிக்கிறான்
எண்களை சொற்களை
தேதிகளை பெயர்களை
வாக்கியங்களை சிக்கல்களை
பிறகு ஆசிரியரின் மிரட்டலையும் மீறி
மேதைச் சிறுவர்களின் ஆரவாரத்தினூடே
பல வர்ணப் பென்சில்களைக் கொண்டு
இன்னல் எனும் கரும்பலகையில்
அவன் வரைவது மகிழ்ச்சியின் முகம்.

சிப்பாயின் ஒய்வுநாள்

பறவைக் கூட்டில் ராணுவத் தொப்பியை வைத்துவிட்டு
தலைமேல் பறவையுடன் கிளம்பிச் சென்றேன்
அப்படியானால்
தொப்பியை உயர்த்தி வணங்கப்போவதில்லையா
என்று கேட்டார் தளபதி
இல்லை
நாங்கள் இனி வணங்கப்போவதில்லை
என்று பதிலளித்தது பறவை
ஓகோ, சரி
மன்னிக்க வேண்டும்
வணங்குவது வழக்கம் என்று நினைத்தேன்
என்றார் தளபதி
நீங்கள் முற்றிலும் மன்னிக்கப்பட்டுவிட்டீர்கள்
எவருமே தவறு செய்யக்கூடும்
என்றது பறவை.

தகவல்

யாரோ திறந்துவைத்துவிட்டிருந்த கதவு
யாரோ மீண்டும் சாத்திவிட்ட கதவு
யாரோ அமர்ந்திருந்த நாற்காலி
யாரோ தடவிக்கொடுத்த பூனை
யாரோ கடித்துப்போட்ட பழம்
யாரோ படித்துப்போட்ட கடிதம்
யாரோ தட்டிவிட்ட நாற்காலி
யாரோ திறந்துவைத்துவிட்டிருந்த கதவு
யாரோ இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் பாதை
யாரோ கடந்துசென்றுகொண்டிருக்கும் காடு
யாரோ குதித்துவிட்டிருந்த நதி
யாரோ இறந்துவிட்ட மருத்துவ விடுதி.

எங்கள் பிதா

பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே
அங்கேயே இருங்கள்
நாங்களோ இப்பூமியிலேயே இருக்கிறோம்
சிலசமயம் எழிலான இப்பூமியிலேயே
அதன் நியூயார்க் நகரத்தின் புதிர்களுடன்
பிதா, மகன், புனித ஆவி ஆகிய மூவருக்கும் ஒப்பான
பாரிசின் புதிர்களுடன்
அதன் சிறியவூர்க் கால்வாயுடன்
அதன் பெரிய சைனா சுவருடன்
அதன் மோர்லே நதியுடன்
அதன் புதினா மணம் சேர்ந்த மிட்டாயுடன்
அதன் பசிபிக் மகா சமுத்திரத்துடன்
அதன் துலரி பூங்காவின் இரு தடாகங்களுடன்
அதன் நல்ல குழந்தைகளுடன் மோசமான பிரஜைகளுடன்
இந்த பூமியில் மட்டுமே இருக்கும்
எல்லோருக்கும் பொதுவாக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும்
எங்கும் பரவியிருக்கும்
இவ்வுலகின் எல்லா அதிசயங்களுடனும்
இப்பேர்ப்பட்ட அதிசயங்களாக இருப்பது குறித்து
தாங்களே அதிசயத்தில் ஆழ்ந்திருப்பதோடு
ஒரு நிர்வாண அழகிய பெண் வெளியே வர
பயப்படுவதுபோல
தங்களை பறைசாற்றிக்கொள்ளப் பயப்படும்
அதிசயங்களுடன்
உலகத்தின் பயங்கரமான துன்பங்களுடன்
எண்ணிலடங்காத் துன்பங்களுடன்
உலகத்தின் ராணுவ வீரர்களுடன்
உலகத்தின் சித்திரவதையாளர்களுடன்
இந்த உலகின் எஜமானர்களுடன்
மதகுருக்கள் துரோகிகள்
முரட்டுப் போர்வீரர்களுடனான எஜமானர்களுடன்
பருவ காலங்களுடன்
வருடங்களுடன்
அழகிய பெண்களுடன் கிழட்டு மடையர்களுடன்
பீரங்கிகளின் எஃகு குழல்களில்
அழுகிப்போகும் வறுமையின் வைக்கோலுடன்

மொழியாக்கம் : வெ. ஸ்ரீராம்
(ழாக் ப்ரெவரின் முதல் தொகுப்பான “சொற்களி”ல் இருந்து எடுக்கப்பட்ட கவிதைகள் இவை)

எனக்குச் சொற்களை மிகவும் பிடிக்கும். பேராசையுடன் சொற்களைப் பிடித்து என் கவிதையில் சேகரித்து வைப்பேன். பிரபஞ்சம் அணுக்களால் அல்ல, சொற்களால்தான்  உருவாக்கப்பட்டிருக்கின்றது.

– பாப்லோ நெருதா

எண்பதுகள்- தொண்ணூறுகளில்

பிரமிள்சிறுபத்திரிக்கைகளின் பெரும்பான்மையான பங்களிப்புகளால் எண்பதுகள் கவிதை பரப்பில் வளம் சேர்த்தன. ழ, ஸ்வரம், மீட்சி, லயம், காலச்சுவடு, கனவு, முன்றில், புதிய நம்பிக்கை, மையம், கிரணம், நீலமலைப் பனிமலர் போன்றவை அவற்றுள் சில. புதுக்கவிதையில் படிமங்கள் – குறியீடுகளின் அதீதமான பிரயோகங்கள் தவிர்க்கப்பட்டு நேரடியாக அனுபவங்களை உணர்த்தும் போக்கு எண்பதுகளில் வலுவடையத் தொடங்கியது. புதுக்கவிதை வெளியீட்டில் அகவயப்பார்வை, புறவையப்பார்வை என்று எழுபதுகளில் காணப்பட்ட பெரும் இடைவெளி எண்பதுகளில் குறையத்தொடங்கியது. எண்பதுகளின் இடைக்காலம் வரையிலான புதுக்கவிதையில் அகநோக்குப்பார்வையும் புறநோக்கு பார்வையும் பிரதானமான கண்ணோட்டங்களாக நிலவின. எண்பதுகளின் இறுதியில் ஒன்றிணையத்தொடங்கி தொண்ணூறுகளில் புதிய கண்ணோட்டமாக உருவானது என்று புதுக்கவிதையின் போக்கை துல்லியமாக கணிக்கிறார் சுகுமாரன்.

தேவதேவன்

“எண்பதுகளில் அகமனக் கவிதையாளர்கள் சமூகத்தை நோக்கி வந்திருப்பதும், தீவிர இடதுசாரி போக்கு தணிந்திருப்பதும் மாற்றங்களாய் தெரிகின்றன. மரபு கவிதை ஒதுக்கப்பட்ட நிலை தெளிவாகின்றது. சொல்லுக்கு அப்பாற்பட்டவைகளை சிறைபிடிக்கும் முயற்சிகளும் புலனாகின்றன.” (சிற்பி கட்டுரைகள்).

சுந்தர ராமசாமி
நகுலன் – ஐந்து, சுருதி, கோட்ஸ்டாண்ட் கவிதைகள்

பசுவய்யா – யாரோ ஒருவனுக்காக

பிரமிள் – மேல் நோக்கிய பயணம்

ஞானக்கூத்தன் – சூரியனுக்கு பின் பக்கம், கடற்கரையில் சில மரங்கள்

ஆத்மாநாம் – திடீர் மறைவிற்கு பிறகு வெளியான ஆத்மாநாம் தொகுப்பு, ஆத்மாநாம் கவிதைகள் (பிரம்மராஜன் தொகுத்தது)

கலாப்ரியா – எட்டயபுரம்

பிரம்மராஜன் – அறிந்த நிரந்தரம், வலி உணரும் மனிதர்கள், ஞாபகச் சிற்பம்

தேவதேவன் – மின்னற்பொழுதே தூரம், குளித்துக் கரையேறாத கோபியர்கள், மாற்றப்படாத வீடு

விக்ரமாதித்யன் – ஆகாசம் நீல நிறம், ஊருங்காலம், உள்வாங்கும் உலகம், எழுத்து சொல் பொருள்

ஆகிய கவிதை தொகுதிகளும் சிறப்பான கவிதை வீச்சுடன் எழுதத்தொடங்கியவர்களாக உமாபதி, சுகுமாரன், ராஜசுந்தரராஜன், கல்யாண்ஜி, சமயவேல், ரா. ஸ்ரீனிவாஸன், அபி, ஆனந்த், தேவதச்சன், ந.ஜெயபாஸ்கரன், பிரதீபன், பாதசாரி, குமாரசெல்வா ஆகியோரைக் குறிப்பிடலாம். கணையாழி பத்திரிக்கையில் 1965 முதல் வெளியான கவிதைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பான கணையாழி கவிதைகள் 1984ல் வெளிவந்தது.
கலாப்ரியா
90களில் சிற்றிதழ்களின் வெளியீட்டில் ஒரு மந்தநிலை ஏற்பட்டது. பெரும்பான்மையான இதழ்கள் பல்வேறு காரணங்களால் வெளியீட்டை நிறுத்திக்கொண்டன. ஆனால் கவிதைத் தொகுதிகளின் வெளியீடு முன்பை விட மிகவும் அதிகமானது. எண்பதுகளில் அறிமுகமாகி 90களில் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களாக மலர்ந்தவர்களில் யூமா. வாசுகி, எம். யுவன், மனுஷ்ய புத்திரன், உமா மகேஸ்வரி, இளம்பிறை, ப.கல்பனா, கனிமொழி ஆகியோரை முக்கியமாக சொல்லலாம். 90களில் அறிமுகமான கவிஞர்களில் முக்கியமானவர்களாக வி.அமலன் ஸ்டேன்லி, க. மோகனரங்கன், சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி, மாலதி மைத்ரி, சங்கரராம சுப்ரமணியன் போன்றோரைச் சொல்லலாம். இவர்கள் தங்கள் அனுபவங்களை செய்நேர்த்தியுடனும் புதிய கோணத்திலும் சுயமாக கைகூடிய கவிதை மொழியிலும் வெளிப்படுத்தியுள்ளனர்.

எண்பதுகள் – தொண்ணூறுகளில் கவிதைப் போக்கில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று பெண்களின் பங்களிப்பு. முன்பெப்போதையும் விட இந்த காலகட்டத்திலேயே பெண்கள் அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதத் தொடங்கினர்.

கவிதையின் புதுமொழி பேசும் பெண்கவிகள்.
மாலதி மைத்ரி, குட்டி ரேவதி மற்றும் சுகிர்தராணி
2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ்கவிதை வரலாற்றில் மிகப்பழமையான சங்ககால கவிதைகள் தொடங்கி பெண்கவிஞர்களின் பங்களிப்பு ஓரளவு தான் இருந்து வந்துள்ளது. பிந்தைய காலகட்டங்களை விடவும் சங்க காலத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளதை நாம் அறியமுடியும். சங்கப்பாடல்கள் 2,381ஐ எழுதிய 473 கவிஞர்களில் சுமார் 30 பேர் பெண்கள். சங்க காலத்தில் ஔவையாரும் அவருக்குப்பின் காரைக்கால் அம்மையார், ஆண்டாள் ஆகியோரும் மிக முக்கியமான கவிஞர்கள்.

“நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்” என்று தமிழ் கவிதையில் முதன்முதலில் பெண் சார்ந்த ஆண் ஆதிக்கப் பார்வைக்கு எதிரான கலகக்குரல் எழுப்பிய பாரதியின் கவிதை மரபு, அவரது சம காலத்திலும் அவருக்கு பின்னரும் கூட பெண்கவிஞர்கள் யாராலும் தொடரப்படாதது ஆச்சரியமான விஷயம் தான். புதுக்கவிதையின் மறுமலர்ச்சி காலமான எழுத்துப் பத்திரிக்கையின் காலத்திலும் பெண் கவிஞர் இரா. மீனாட்சி ஒருவர் தான் அதில் தொடர்ந்து எழுதியவர் என்று தெரிகிறது. 40 ஆண்டுகளாக எழுதிவரும் இவரது கவிதைகளில் பெண்ணிய கருத்துருவம் (சமத்துவம் கோரும்) தீவிரம் கொள்ள வேண்டிய வாழ்க்கைச்சூழல் இவருக்கு வாய்த்திருந்த போதிலும் அத்தகைய பார்வை இவர் கவிதைகளில் வெளிப்படவில்லை. இவரின் முழுக்கவிதைகள் அடங்கிய “மீனாட்சி கவிதைகள்” தொகுப்பு 2002ல் வெளிவந்துள்ளது. புதுக்கவிதையில் பெண்களின் பங்கேற்பு 80களின் பிற்பகுதியில் தான் அதிகமும் தொடங்கியது எனலாம்.

1970 – நெருஞ்சி – இரா. மீனாட்சி
1978 – சுடுபூக்கள் – இரா. மீனாட்சி
1978 – பனியில் பட்ட பத்துமரங்கள் – திரிசடை
1982 – காற்றின் சந்தேகம் – கி. விஜயலட்சுமி
1983 – தீபாவளிப் பகல் – இரா. மீனாட்சி
1988 – புதையுண்ட வாழ்க்கை – எஸ். சுகந்தி சுப்ரமணியன்
1990 – நட்சத்திரங்களின் நடுவே – உமா மகேஸ்வரி

பின்னர் ஒரு இடைவெளிக்குப்பின் 90களில்

மௌனக்கூடு, நிசப்தம் – இளம்பிறை
கருவறை வாசனை – கனிமொழி
தீயுறைத் தூக்கம் – பெருந்தேவி
பார்வையிலிருந்து சொல்லுக்கு – ப. கல்பனா
மழை பற்றிய பகிர்தல்கள் – சே. பிருந்தா
வரிக்குதிரை – மாலதி

ஆகிய தொகுப்புகள் வெளிவந்தன.

ரிஷி, ரெங்கநாயகி, சல்மா, கிருஷாங்கினி, அ. வெண்ணிலா, வத்சலா, குட்டி ரேவதி, தேன்மொழி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி ஆகியோர் 90களின் ஆரம்பத்தில் எழுதத்துவங்கிய போதும் இவர்களது கவிதைதொகுப்புகள் 2000த்தின் ஆரம்பத்திலேயே வெளிவந்தன. மேலும் தமிழகத்தின் நவீன கவிதைச்சூழலில் பெண்கவிஞர்கள் குறித்தான கவனிப்பும் விமர்சனங்களும் 2000த்திலேயே அதிகமும் வெளிவரத்தொடங்கின. இந்த காலக்கட்டத்தில் வெளியாகத்துவங்கிய, வெளியாகி நின்றுவிட்ட, வெளியாகிக்கொண்டிருக்கிற புனைகளம், காலச்சுவடு, தாமரை, நவீன விருட்சம், புதிய கோடாங்கி, மழை, தீராநதி, கணையாழி, தொணி, தலித் முரசு, பன்முகம், அட்சரம், பனிக்குடம், உயிர்மை, இந்தியா டுடே, குதிரை வீரன் பயணம், புது எழுத்து, வடக்கு வாசல், முன்றில் ஆகிய இதழ்களில் அதிக பெண்கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. 80களின் பிற்பகுதிகளில் எழுதத்தொடங்கிய ரிஷி (ரிஷி கவிதைகள் -2002), ரெங்கநாயகி (ஸ்னேகித வனம் – 2002) கவிதைத்தொகுதிகளுடன் 90களில் எழுதத்தொடங்கிய திலகபாமா, அ.வெண்ணிலா, குட்டி ரேவதி, வைகைச்செல்வி, சுகிர்தராணி, தேன்மொழி, சல்மா, மாலதி மைத்ரி, மைதிலி ஆகியோரின் கவிதைகளும் இந்த கால கட்டத்திலேயே வெளிவந்தன.

பெண்ணுடலை வர்ணிக்கும் கவிதை மரபிற்கு எதிரானதாகவே பெண்ணின் உடலை ஒரு போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்கச் சமுதாய மனப்பான்மைக்கு எதிரானதாகவே இன்றைய பெண்கவிஞர்கள் மனவலிகளுடன் அவர்களின் உடல் இயற்கை சார்ந்த பிரத்யேகமான அவஸ்தைகளையும், வலிகளையும், பால் உணர்வுகளையும் கவிதைகளில் வெளிப்படுத்துகின்றனர். கூடவே குழந்தைகளின் மீதான தாய்மையின் பிணைப்பும் உரிமையும். இத்தகைய கவிதைகளிலேயே கவிதை மொழியிலிருந்து தனித்தியங்கும் பெண்கவிமொழியை நாம் இனம் காண முடியும். மேலும் இத்தகைய வலிகளையும் உணர்வுகளையும் மட்டுமே பெண்கவிஞர்கள் தங்கள் கவிதைகள் முழுக்க தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டிருக்கவும் முடியாது. அவர்கள் கவிதைகளில் வெளிப்படும் ஒரு சிறிய கூறு மட்டுமே இத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்தும் போக்கு. எனவே இத்தகைய கவிதைகளில் தனித்துவமாக வெளிப்படும் பெண்களுக்கேயான கவிமொழி அவர்களின் ஒட்டுமொத்தக் கவிதைகளிலும் வெளிப்படுவதாக சொல்லமுடியாது. ஒரு கவிஞர் பெண் என்று அறியப்படுவதாலோ அவர்களது கவிதையில் வரும் “நான்” ஒரு பெண் என்பதாலோ, சில கவிதைகளில் பெண்களுக்கு மட்டுமேயான மனவலி, உடல் சார்ந்த வலிகளும், அவர்களுக்கேயான தாய்மையுணர்வும் வெளிப்படுகின்றன என்பதாலோ அவர்கள் கவிதைகள் அனைத்துமே “பெண் கவிமொழி” யில் எழுதப்படுபவையாக கூறிவிட முடியாது. இந்த வலிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கவிதைகளை தவிர்த்துப்பார்த்தால், ஏனைய பொதுமையான உணர்வுகளை வெளிப்படுத்தும் போது அவர்களின் கவிதைமொழி , பொதுவானதாகவே இருக்கிறது. அதுவே கவிதையின், கவிதை உலகின் மொழியாகும்.

கவியுலகில் “தலித்” என்ற வேதனையின் குறியீடு:

அழகிய பெரியவன்50களில் மராத்தி,குஜராத்தி, கன்னட மொழிகளில் எழுற்சி அடைந்த தலித் இயக்கம் தமிழில் 80களின் பிற்பகுதிகளில் தான் பிரக்ஞைபூர்வமாக அறிமுகமானது. பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் போன்ற இலக்கிய வகைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் வெளிப்பட்ட போதிலும், மணிக்கொடி காலத்தில் இருந்தே நவீன தமிழ் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் துக்கங்கள் சிறுகதை, நாவல்களில் சில சந்தர்ப்பங்களில் வெளிப்பட்ட போதும், சமூக வரலாற்று இலக்கிய பிரக்ஞையுடன் தமிழில் விளிம்புநிலை மக்கள் இலக்கியம் அல்லது தலித் இலக்கியம் எழுதப்பட்டது 80களின் பிற்பகுதியின் தான்.

சாதியத்தை கடந்த விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காக சுயமரியாதையை மீட்டெடுப்பதற்காக தொடங்கப்பட்ட தலித் விடுதலை அமைப்புகள் தமிழில் தலித் இலக்கியம் தோன்றி வளரப் பெரும் உந்துதலாக அமைந்தன. “ஒரு சாதியை குறிக்கின்ற ஒன்றாக ‘தலித்’ என்கிற சொல்லை சுருக்கிவிடக்கூடாது. தலித் என்பது வேதனையின் குறியீடாக இருக்கவேண்டுமே தவிர சுரண்டலின் குறியீடாக ஆகிவிடக்கூடாது. சுரண்டல் மற்றும் கொடுமை, அக்கிரமங்களை எதிர்க்கிற குறியீடாக மலரவேண்டும். அவமானம், எதிர்ப்பு, பாதுகாப்பின்மை ஆகிய பொருளை தலித் என்ற சொல் தரவேண்டும்” என்கிறார் சித்தலிங்கையா (நிறப்பிரிகை, 1994).

தலித் இலக்கியம் தலித்துகளால் தான் எழுதப்படவேண்டும். தலித் விடுதலையில் அக்கரை கொண்டுள்ள பிற சாதியினரும் எழுதலாம் என்கிற இருவித கருத்தாக்கங்கள், தலித் படைப்பாளிகள்-சிந்தனையாளர்களிடையே நிலவி வருகின்றன.

விளிம்புநிலை மக்கள் காலம் காலமாக மேல்சாதியினரால் அனுபவித்து வரும் அடக்குமுறைகள், அவமதிப்புகளுக்கு எதிரான போர்க்குரலாக, விடுதலைக்குரலாக தலித்துகளின் ஒட்டுமொத்த எதிர்ப்புணர்வு அவர்களின் எழுத்துக்களில்-படைப்புகளில் வெளிப்பட்டது. மேல் சாதியினரின் கடவுள்கள்,சடங்காசாரங்கள், பழக்கவழக்கங்களுக்கு மாறாகத் தங்களுடைய குலதெய்வங்கள், சடங்கு முறைகள், பழக்கவழக்கங்களை தங்களது இருப்பை – சுயகௌரவத்தை அடையாளப்படுத்தும் வகையில் தங்களது பேச்சு மொழியில் பதிவு செய்தனர். தங்களை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி அவமானப்படுத்தியவர்கள், அவர்களது இலக்கியப் படைப்புகளிலும் தீண்டத்தகாத வார்த்தைகளாக கருதி ஒதுக்கியவற்றை தலித்துக்கள் தங்கள் வாழ்க்கையை அடையாளப்படுத்தும் வகையில் எவ்வித தயக்கமும் இல்லாமல் பயன்படுத்தினர். இவ்வகையில் மேல்சாதியினரின் “புனிதங்களை” எல்லாம் உடைத்துச்சிதைத்து தங்களது விடுதலையை – கௌரவமான சுய இருப்பை மீட்டெடுக்க முனைகின்றனர். மேல்சாதியினரின் ஒட்டுமொத்தமான இலக்கிய மதிப்பீடுகளுக்கு எதிராக கலகம் செய்யும் எழுத்து இவர்களுடையது.

தலித் படைப்பாளிகளின் சிறுகதை, நாவல்கள் அளவில் அவர்களின் கவிதைகள் தமிழ்ச்சூழலில் கவனம் பெறவில்லை. கண்மணி குணசேகரன், தலையாரி, இராஜமுருகுபாண்டியன், என்.டி.ராஜ்குமார், பிரதீபா ஜெயச்சந்திரன், ம. மதிவண்ணன், விழி.பா.இதயவேந்தன், அபிமானி, அன்பாதவன், அழகிய பெரியவன், தய். கந்தசாமி, ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் தலித் இலக்கிய பார்வையுடன் கவிதைகள் எழுதுகின்றனர்.

இவர்களில் தலையாரி, இராஜமுருகுபாண்டியன், ம.மதிவண்ணன், தய். கந்தசாமி, கண்மணி குணசேகரன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் கவிதைகளில் தலித் இலக்கியத்தின் பொதுவான குணாம்சங்களாக சொல்லப்படுகின்ற பண்பாடு, எதிர்-அழகியல், மரபுகளை மீறுதல், கலைத்துப்போடுதல், இதுவரையிலான கோபத்தின் வெளிப்பாடுகளை அதிகம் காணவியலும். என்.டி. ராஜ்குமாரின் கவிதைகள் ஒடுக்கப்பட்டோரின் கோபங்களையும் அவலங்களையும் பால் உணர்வின் தீவிரத்தையும் வெளிப்படுத்தினாலும் மாந்திரீக மொழி சார்ந்த வெளிப்பாடு மற்றும் குலதெய்வ வழிப்பாட்டு மரபுகளின் மீதான பிடிப்புடன் அமைந்திருக்கக் காணலாம். விழி. பா. இதயவேந்தன் சிறுகதைகளில் தலித்துகளின் பிரச்சனைகள் முழுமையாக கையாளப்பட்டிருக்க, கவிதைகளில் ஒன்றிரண்டு தவிர்த்து ஏனையவை பொதுவானவையாகவே உள்ளன. அன்பாதவன், அழகிய பெரியவன், வெ. வெங்கடாசலம் ஆகியோரின் கவிதைகளும் இவ்வகையிலானவையே.

கவிதைகளுக்கென இருந்து வந்திருக்கும் அழகியல் கோட்பாடுகள் அனைத்தையும் மறுதலித்து தலித் இலக்கியத்திற்கான எதிர்-அழகியலை கட்டமைப்பதாக இவர்கள் எழுதும் கவிதைகளில் கவிதைக்கு உகந்ததாக இது வரையிலும் கருதப்படாத பேச்சுவழக்குகளையும் கையாளுகின்றனர். கவிதை மொழிக்கு புதிய வளம் சேர்க்கும் முயற்சியாக இதை கருதலாம். ஆனால் பெரும்பான்மையான கவிதைகளில் எதிர்-அழகியலை கட்டமைக்கும் முயற்சி என்ற போதிலும் அதனளவில் கவிதைக்கான குறைந்த பட்ச அழகியல் கூட இல்லாத கோபாவேச சொல்லடுக்குகளாகவே தோற்றமளிக்கின்றன (விதிவிலக்கு அழகிய பெரியவன் கவிதைகள்).

நமது நீண்ட கவிதை வரலாற்றில் நீதி இலக்கியம், சைவ இலக்கியம், வைணவ இலக்கியம், புத்த மத இலக்கியம், சமண இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம், கிருஸ்தவ இலக்கியம், நாட்டார் இலக்கியம்,முற்போக்கு இலக்கியம் என்கிற பாகுபாடெல்லாம் சில வசதிகள் கருதியும் இலக்கியப் போக்கின் புரிதல் கருதியுமான அடையாளப்படுத்தலுக்காக மட்டும் என்பதற்கு மேலான இலக்கிய தகுதி சார்ந்த விஷயமல்ல. அடையாளம் எதுவாயினும், எதனைப்பற்றியதாயினும் அது கவிதையாக இருக்கிறதா என்பதே முதன்மையானதாகிறது. மற்ற அடையாளப்படுத்தல்கள் எல்லாம் ஒரு வகையில் இலக்கியத்திற்கு புறம்பானவைதான்.

கட்டுரையின் இறுதியாக:

புதுமைப்பித்தன் கூறியபடி “கவிதை மோகனமான கனவு”, யதார்த்தத்தின் புழுதியில் காலூன்றி நின்று இந்த பிரபஞ்சத்தையே அறிய முனையும் கனவு. எனவே பிரபஞ்சத்திற்குட்பட்ட எல்லாமும் இன்றைய கவிதைக்கான விஷயங்களாகின்றன.

அனுபவங்களின் சாரத்தை உணர்த்துவதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுவதாக இன்றைய கவிதை வெளிப்படுகிறது. விவரிக்கும் போது அது கவிதையல்லாத ஒன்றாகிவிடக்கூடும். “உணர்த்துதல்” மொழி சார்ந்த விஷயம் .ஆதலால் வார்த்தை பிரயோகத்தில் இன்றைய கவிஞன் தீவிர கவனம் கொள்கிறான். பேச்சு வழக்கில் உள்ள சொற்களைக் கூர்மைப்படுத்துகிறான். பொதுவான மொழியிலிருந்து தனக்கான கவிதை மொழியைக் கண்டடைகிறான்.

விவரிப்பை விடுத்து உணர்த்துவதை முதன்மைபடுத்துவதால் இன்றைய கவிதை கச்சிதமான அமைப்புக் கொண்டதாகிறது. இதனால் கவிதை பன்முகத்தன்மை கொண்டதாகவும் ஆகிறது. அதே சமயம், பன்முகத்தன்மை கொண்டதுதான் நல்ல கவிதை என்றும் ஆகிவிடாது. அவ்வாறு அல்லாமல் நேரடியான வெளிப்பாடாகவும் இன்றைய கவிதைகள் அமைகின்றன.

கவிதைக்கு பல முகங்கள், பல குரல்கள் உண்டு. இது கவிஞனின் வாழ்க்கை பின்னணி, அவனது ஆளுமை சார்ந்தது. எனினும் அந்த குரல் ஜீவன் மிகுந்ததாக வெளிப்படவேண்டும். உண்மையின் குரலாக இருக்கவேண்டும். பாவனையும், பொய்மையும் கொண்ட குரல் எத்தனை தான் கவர்ச்சிகரமானதாயினும் ஒருபோதும் கவிதையாவதில்லை. கவிதை என்றும் புதியதாகத் தோன்றவேண்டும். கவிஞனின் சுயமான பார்வை, அவனுக்கேயான மொழி சார்ந்து கவிதையில் இந்த புதுமை சாத்தியமாகிறது.

எல்லாவற்றுக்கும் உரைநடையையே பயன்படுத்தும் இன்றைய காலகட்டத்தில் இன்றைய கவிதையும் உரைநடை தன்மைகொண்டதாகவே வெளிப்படுகிறது. ஆனால் உரைநடையில் இயல்பை மீறிய உத்வேகமும், உணர்ச்சியும், இயல்பான சப்தநயமும் கொண்டதாக வெளிப்படுகிறது. இன்றைய கவிதையின் தளம் பல்வேறு பிரதிபலிப்பு சாத்தியங்களை உள்ளடக்கி இருக்கிறது. அதில் வசதிக்காகவேனும் சில பேதங்களும், பாகுபாடுகளும் எழவே செய்கின்றன. அவைகளையும் மீறி மனக்குகையின் சித்திரங்களை கவிதையின் தளத்தில் வடித்தெடுப்பது கவிக்கே உரிய பணியாகும். அத்தகைய பணியை தொடர்வதற்கு 2000 வருட கலை, கலாசார புகழையும், இழுக்கையும் சுமந்துகொண்டு ஊடுபாவாய் அலைகின்ற மொழியும் அதனை சார்ந்து வயிறு வளர்க்கின்ற ஊடகங்களும் தன்னிச்சையாக உதவ முன்வரவேண்டும்.

நூல் ஒப்பீடுகள்:

1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்
2. புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்
3. காலம் கலை கலைஞன் – சி.மோகன

விஸ்லவா சிம்ப்போர்ஸ்கா"மனித யதார்த்தத்தின் வெளிச்சத்தில் வரலாறு மற்றும் உயிரியல் சூழல்களை அங்கதத்தின் கூர்மையுடன் வெளிப்படுத்தும் கவிதைகளுக்காக" 1996ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர் போலந்து பெண் கவிஞரான விஸ்லவா சிம்ப்போர்ஸ்கா.எழுபத்தி மூன்று வயதாகும் சிம்ப்போர்ஸ்கா தனது இருபத்திரண்டாம் வயதில் முதல் தொகுப்பை வெளியிட்டார். எளிய ஜீவன்களின் மீதான அக்கறை, புறக்கணிக்கப்பட்ட வஸ்துக்கள், மனிதர்கள்பால் அன்பு, விளிம்பு மனிதர்களிடம் பரிவு, உதாசீனப் படுத்தப்படும் உணர்வுகள் இவையே அவரது கவனத்துக்குரிய கவிதை அம்சங்களாக அமைந்தவை.

"பெரிய எண்களுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. எனது கற்பனை
ஒற்றைப்படையில் பயணம் செய்வது" என்று கூறும் சிம்ப்போர்ஸ்கா, அரசியல் சார்ந்த
கவிதைகளையும் எழுதியுள்ளார்.

"கனமான சொற்களைக் கடன் வாங்குகிறேன். அவற்றை எளிமையானவையாக மாற்ற மிகவும் சிரமப் படுகிறேன்" என்பது அவரது கவிதை இயலின் அடிப்படை. போலிஷ் கவிதையின் மிக அசலான நகைச்சுவை சார்ந்ததும், இயல்பானதுமான கவிதைக்குரல் சிம்ப்போர்ஸ்காவின் குரல். எந்த சித்தாந்தத்தையும் சாராமல் போலந்து நாட்டின் அரசியல், சமூக, தனிமனித யதார்த்தங்களை ஆற்றலுடன் வெளிப்படுத்தும் இந்தப் பெண் கவிஞர் நவீன போலிஷ் கவிதை உலகின் முன் உதாரணங்களில் ஒருவராக நம்பப்படுகிறார்.

முடிவும் தொடக்கமும்

ஒவ்வொரு யுத்தத்துக்குப் பிறகும்
யாராவது
ஒழுங்கப்படுத்த வேண்டியிருக்கிறது.
யாராவது கட்டிடச் சிதிலங்களைப்
பாதையோரம் ஒதுக்கவேண்டியிருக்கிறது
அதனால்
பிணங்கள் நிரம்பிய வண்டிகள் கடந்துபோகும்.
யாராவது
சகதி சாம்பலின் ஊடே
சோபா ஸ்பிரிங்குகளின் ஊடே

இரத்தம் படிந்த கந்தலின் ஊடே சிரமப்பட்டு நடக்க வேண்டியிருக்கிறது.
சுவரை தூக்கி நிறுத்த
யாராவது
கம்பத்தைப் பிடுங்க வேண்டியிருக்கிறது
யாராவது
ஜன்னலுக்குக் கண்ணாடி போட வேண்டியிருக்கிறது
கதவை அதன் சட்டத்தில் பொருத்த வேண்டியிருக்கிறது.
வலுவான பிடிப்பு எதுவுமில்லை
புகைப்பட வாய்ப்பு எதுவுமில்லை
அநேக வருடங்கள் ஆகின்றன.
எல்லா காமிராக்களும்
வேறு யுத்தங்களுக்கு போய்விட்டன
பாலங்கள் புனரமைக்கப்பட வேண்டும்
புகைவண்டி நிலையங்களும்
சட்டைக் கைகள் கந்தலாகச் சுருட்டப்படும்
யாராவது கையில் துடைப்பத்துடன்
எப்படி இருந்தது அது என்று
இன்னும் நினைவு கூர்கிறார்கள்.
வேறு யாராவது
நொறுங்கிப் போகாத தம் தலையசைத்து
அதைக் கேட்கிறார்கள்.
ஆனால்
அதை ஓர் அலுப்பாக நினைக்கும் பிறர்
அருகிலிருந்து பரபரப்பார்கள்.
காலம் காலமாக
யாராவது
துருப்பிடித்த விவாதத்தைப் புதரடியிலிருந்து
நிச்சயம் தோண்ட வேண்டியிருக்கும்
வாரிக் கொட்ட வேண்டியிருக்கும்.
இவையெல்லாம் தெரிந்தவர்கள்
கொஞ்சம் தெரிந்தவர்களுக்கும்
அவர்கள் அதைவிட சொற்பமாக தெரிந்தவர்களும்
கடைசியில் எதுவுமே தெரியாதவர்களுக்கும்
வழிவிட வேண்டியிருக்கும்.
காரணங்களையும் விளைவுகளையும்
மூடிய புல்வெளியில்
சோளத்தண்டை பற்களில் கடித்தப்படி
மேகங்களை மிரண்டு பார்த்துக்கொண்டு
யாராவது பொய்சொல்ல வேண்டியிருக்கும்.

பியட்டா

அந்தக் கதாநாயகன் பிறந்த சிறு நகரம்.

நினைவுச் சின்னத்தைப் பார்த்தல்,
அதன் அளவு கண்டு புகழ்தல்,
புறக்கணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தின் படிகளில் திரியும்
பெட்டைக் கோழிகளை விரட்டல்,
அந்தத் தாய் வசிப்பது எங்கே என்ற கண்டுபிடித்தல்
கிரீச்சிடும் கதவைத்தட்டி, தள்ளி, திறத்தல்.

நிமிர்ந்தே இருந்தாள் அவள்.
கூந்தல் சீவி முடிக்கப்பட்டிருந்தது. கண்களில் தெளிவு.
"போலந்திலிருந்து வருகிறேன்" என்று சொல்லல்,
குசலங்கள் பரிமாறல், கேள்விகளை உரக்கவும்
தெளிவாகவும் கேட்டல்.

ஆம், அவள் அவனை வெகுவாக நேசித்தாள்.
ஆம், அவன் எப்போதும் அப்படித்தான்
ஆம், அப்போது அவள் சிறையின் சுவரருகில்
ஆம், துப்பாக்கி வெடியோசையை அவள் கேட்டாள்.

டேப் ரிகார்டரும், மூவி காமிராவும் கொண்டுவராததற்கு வருந்துதல்,
ஆம், அவளுக்கு அவை என்னவென்று தெரியும்.

மகன் எழுதிய கடைசி கடிதத்தை
அவள் வானொலியில் வாசித்து இருக்கிறாள்
தொலைக்காட்சியில் பழைய தாலாட்டுக்களைப்
பாடி இருக்கிறாள்
ஒரு காலத்தில் சினிமாவிலும் நடித்திருக்கிறாள்,
கண்ணீர் வரும்வரை விளக்குகளை உற்றுப் பார்த்திருக்கிறாள்
ஆம், அந்த ஞாபகம் நெகிழச் செய்கிறது
ஆம், அவள் சற்று சோர்ந்திருக்கிறாள்
ஆம், அது போய்விடும்

எழுந்து கொள்ளல், நன்றி தெரிவித்தல், விடைபெறுதல்
வெளியே போதல்
சுற்றுலாப் பயணிகளின் இன்னொரு அணி வேகமாக நடத்தல்

நன்றி: சுகுமாரனின் "கவிதையின் திசைகள்" நூலிலிருந்து.

விஸ்லவா பற்றிய சுட்டிகள்:

நவீன உலக மனிதனின் இருப்பு தான் எனது கவனமாகிறது. எவ்வளவு விதமான சாத்தியங்களுக்கு மனித இருப்பை நகர்த்த முடியும்? பிறப்பு, உடல், சாதி, நிறம், மரணம் எதுவுமே நமது தேர்வில் இல்லை. நமது இருப்பு மட்டும் தான் குறைந்த பட்சம் நமது தேர்வில் இருப்பது போல தோன்றுகிறது. ஆனால், மனித இருப்பை சட்டதிட்டங்களால் சமூகம் இறுக்குகிறது, திட்டமிடுகிறது. அப்போது குறிப்பிட்ட வாய்ப்புகளே உள்ள வாழ்வை வாழத் தள்ளப்படுகிறோம். உலக வாழ்வே ஒரு அலுவலக நடைமுறையாகிவிட்ட இந்த நிலையில் மனிதன் தன் வாழ்விற்கான சாத்தியங்களை விஸ்தரித்துக்கொண்டு போவதன் மூலமாகத்தான் அர்த்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

– பிரான்ஸ் காஃப்கா

தன் காலத்திய உலகமே ஒரு அலுவலகமாக மாறி விட்டதாக காஃப்கா கருதுவது மிகச் சரியான கணிப்பு. இன்றைய இந்த நிலையில் வேறு வெளிகளை நோக்கியும் கட்டுப்பாடற்ற வெட்டவெளிகளின் சுவாசத்தை நோக்கியும் நம்மை அழைத்துச்செல்ல படைப்பாளி விழைகிறான். அவன் காட்டும் திசைகளில் தான் நம் வாழ்வுக்கான கனவும், சுதந்திரமும், கொண்டாட்டமும் தங்கி இருக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கவிமொழி கொண்டது நம் தமிழ். “தமிழ் கவிமொழி” படைப்பாளிக்கு இது பலம்; சவால்; பலவீனம். காலத்துக்கும் மனித வாழ்வுக்கும் மொழிக்குமான உறவை பேணுவதில் நவீன தமிழ்க் கவிதை படைப்பாளிகளான கவிஞர்கள் அப்படியொன்றும் சோடைப்போய்விடவில்லை. இன்றைய “நவீன விருட்சம்” என்ற நிலையை அடைய கவிதை மேற்கொண்ட தன்னிலை மாறுதல்கள் பல உண்டு.

பாரதிக்குப்பின் 1921 – 1934 காலக்கட்டத்தில் கவிதை எழுதியுள்ளவர்களில் முக்கியமானவர்களாக பாரதிதாசன், தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் வே. இராமலிங்கம் பிள்ளை ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். மரபு வழிக் கவிதை அமைப்பில் பல புதுமைகளைச் செய்து இசைப்பாடல்களை கவிதையின் தரத்திற்கு உயர்த்தி தமிழ்க் கவிதைப்போக்கில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய – பாரதி, தன் இறுதிக்காலத்தில் வசன கவிதை முயற்சிகளையும் மேற்கொண்டார். பாரதியின் வசன கவிதை முயற்சியை தமிழில் புதுக்கவிதை இயக்கத்திற்கான விதை என்று கொள்ளவேண்டும்.

பாரதியை தொடர்ந்து அவரது கவிதைப்பாட்டையில், அவரது நிழல்களாகவே பயணம் செய்த கவிஞர்கள் யாருமே வசன கவிதை முயற்சியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சுத்தானந்த பாரதியார், சாது. சு. யோகி, திருலோக சீதாராம், எஸ்.டி. சுந்தரம், வாணிதாசன், கம்பதாசன், கொத்தமங்கலம் சுப்பு என்று அப்போதைய கவிஞர்களின் பட்டியல் நீண்டாலும் கவிதைப்போக்கு திருப்திகரமானதாக இல்லை. பரவலாகப்பேசப்பட்ட சீர்திருத்தக்கருத்துக்களையே திரும்பத் திரும்பத் தம் கவிதைகளில் சலிப்படையும் விதத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தனர். மரபின் தொடர்ச்சியான பாரதியையே அவர்கள் நகலெடுத்துக் கொண்டிருந்தனர்.

தமிழில் புதுக்கவிதையின் தொடக்க காலம் 1934ல் தொடங்கியது என கூறலாம். பாரதியின் அடியொற்றி வசன கவிதை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிறுகதைகள் எழுதுவதிலேயே தீவிர கவனம் செலுத்தி வந்த ந.பிச்சமூர்த்தியே அம்முயற்சியின் முன்னோடி. 1934ல் “மணிக்கொடி” இதழில் ந. பிச்சமூர்த்தியின் முதல் வசனக்கவிதை “காதல்” பிரசுரமானது. “மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது” என்று தொடங்குகிறது அந்தக்கவிதை. இப்புதுக்கவிதை முயற்சிக்கு அமெரிக்க கவிஞர் “வால்ட் விட்மன்” எழுதிய “புல்லின் இதழ்கள்” என்ற தொகுப்பு தான் வித்திட்டது. அதை படித்தபோது கவிதையின் ஊற்றுக்கண் எனக்குத் தெரிந்தது. பின்னர் பாரதியின் வசன கவிதையை படிக்க நேர்ந்தது. என் கருத்து வலுவடைந்தது. இவற்றின் விளைவாக கவிதைகளை உணர்ச்சிப்போக்கில் எழுதத் துவங்கினேன் என்று பின்னொரு சந்தர்ப்பத்தில் பிச்சமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இவரை
பின்பற்றி கு.ப. ராஜகோபாலனும் 1938ல் வசன கவிதைகளை மணிக்கொடி இதழில் எழுதத்தொடங்கினார்.

ந. பிச்சமூர்த்திக்கு வெகு சமீபமாக புதுமைப்பித்தன் 1934ல் “ஊழியன்” இதழில் புதுக்கவிதை முயற்சியை தொடங்கினார். தன் சமகாலத்து வசன கவிதை முயற்சிகளை கடுமையாக விமர்சித்துள்ள போதிலும் புதிய கவிதை முயற்சிகளை வரவேற்றார். உருவ அமைப்பில் மரபுக்கவிதையை பின்பற்ற முனைந்த போதிலும் கவிதைக்கான விஷயங்களும் பார்வையும் புதுமையானவை. இவரது கவிதையமைப்பை பின்பற்றி கவிதைகளை எழுதியவர் சிதம்பர ரகுநாதன்.

1939ல் “சூறாவளி” என்னும் வார இதழை தொடங்கிய க.நா. சுப்ரமணியம், “மயன்” என்னும் பெயரில் எழுதிய “மணப்பெண்” வசன கவிதைகள் வந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் புதுக்கவிதைப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட கவிதையாகும். இந்தக்கவிதை “சூறாவளி”யில் வெளியானதை தொடர்ந்தே வசன கவிதை பற்றிய விவாதங்கள் எழுந்ததாக வல்லிக்கண்ணன் தனது “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” எனும் நூலில் குறிப்பிடுகிறார். இந்தக்காலகட்டத்தில் எம்.வி. வெங்கட்ராம், தி.க.சிவசங்கரன் போன்றோரும் வசன கவிதைகள் எழுதியுள்ளனர்.

இத்தனை பேர்கள் புதுக்கவிதையின் ஆரம்ப முயற்ச்சியில் ஈடுபட்ட போதிலும் மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி, சூறாவளி போன்ற இதழ்களின் ஆதரவு இருந்த போதிலும் குறிப்பிட்டு சொல்லும் வகையில் கவிதையின் வளர்ச்சி இல்லை. காரணம், புதிய கவிதை முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களின் கவனம் சிறுகதை எழுதுவதிலேயே, அதில் சாதனை புரிவதிலேயே முனைப்பாகக் குவிந்திருந்தது. புதிய கவிதை முயற்சியில் ஆர்வம் இருந்த அளவிற்கு அதில் செயல்படவில்லை. இதனால் சிறுகதைகளில் அவர்கள் அடைந்த வெற்றியை புதிய கவிதை முயற்சியில் அடைய முடியவில்லை. எனினும், பின்னாளில் அறுபதுகளில் புதுக்கவிதை ஓர் இயக்கமாக வளர்ந்து, தமிழ் கவிதை வரலாற்றில் உரிய அங்கீகாரம் பெறுவதற்கான விதை 1934 – 1944 காலகட்டத்தில் தான் விதைக்கப்பட்டது.

“எழுத்து” காலகட்டம்:

கு.ப.ரா (1944), புதுமைப்பித்தன் (1948) இருவரின் மறைவு, ந.பிச்சமூர்த்தியின் “இலக்கியத் துறவு”, புதிய கவிதை முயற்சிக்கு களம் அமைத்துக் கொடுத்த இலக்கிய இதழ்களின் மறைவு, இந்த காலகட்டத்தில் புதிதாக எழுதத்தொடங்கிய படைப்பாளிகளின் முனைப்பின்மை காரணமாக 1944 – 1958 காலகட்டத்தில் புதுக்கவிதை முயற்சியில் ஒரு தேக்கநிலை – இடைவெளி ஏற்பட்டது.

இந்தச்சூழ்நிலையில் “மணிக்கொடி” இதழுடனும், அதன் படைப்பாளிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சி.சு.செல்லப்பாவின் தனித்த முயற்சியில் ஜனவரி 1959ல் “எழுத்து” இலக்கிய மாத இதழ் தொடங்கப்பட்டது. இலக்கிய அபிப்ராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துகளுக்கும் களமாக “எழுத்து” அமைவது போலவே, இலக்கிய தரமான எத்தகைய புது சோதனைகளுக்கும் “எழுத்து” இடம் தரும் என்று முதல் இதழில் சி.சு.செல்லப்பா அறிவித்திருந்தார். இதே காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த சாந்தி, சரஸ்வதி, தாமரை ஆகிய இதழ்கள் புதிய கவிதை முயற்சிகளுக்கு ஓரளவே ஊக்கமளித்தன. 1959ல் சரஸ்வதி ஆண்டு மலரில் எழுதிய கட்டுரையில் “புதுக்கவிதை” என்ற பதத்தை க.நா.சு குறிப்பிட்டுள்ளார். அதுவரை வசன கவிதை, சுயேச்சா கவிதை, கட்டற்ற கவிதை, ப்ரீவெர்ஸ் என்றே புதுக்கவிதை குறிப்பிடப்பட்டு வந்தது.

“எழுத்து” முதல் இதழில் ந. பிச்சமூர்த்தியின் “பெட்டிக்கடை நாரணன்” (1944ல் கிராம ஊழியனில் வெளிவந்த அருமையான கவிதையின் மறுபிரசுரம்), மயன் (க.நா.சு) எழுதிய “கவிதை மற்றும் வர்ணம்” என்ற தழுவல் கவிதையும் சிட்டி, சாலிவாகனன் ஆகியோரின் கவிதைகளும் வெளிவந்தன. ஓராண்டு நிறைவில் எழுத்து இதழானது ஏற்கனவே இருந்த பழைய கவிகளோடு சேர்த்து பல புதியவர்களையும் அறிமுகப்படுத்தி இருந்தது.

டி.கே. துரைசாமி (நகுலன்) – காத்தபானை – இவரின் முதல் கவிதைத் தலைப்பு

சுந்தர ராமசாமி (பசுவய்யா) – “உன் கை நகம்” எனும் இவரின் முதல் கவிதை ஏற்படுத்திய அதிர்ச்சி நீங்க கொஞ்சகாலம் ஆயிற்று

சி.மணி (சி. பழனிச்சாமி) – “முக்கோணம்” என்பது இவரின் முதல் கவிதைத் தலைப்பு.

ம. இளையபெருமாள், கி. கஸ்தூரிரங்கன், தி.சோ. வேணுகோபாலன் ஆகியோரும் “எழுத்தின்” புதிய கவிஞர்கள் பட்டியலில் அடங்குவர்.

இவர்களுக்குப்பின் 1960ல் “நான்” எனும் தலைப்பில் தருமு சிவராமின் (பிரமிள்) முதல் கவிதை வெளியானது.

“ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
ஊரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும் வெளியில்
ஒன்றுமற்ற பாழ் நிறைத்து
உருளுகின்ற கோளமெல்லாம்
அன்று பெற்றுவிட்டவளென்
தாய்!”

என்று தொடங்கும் மரபு வடிவத்தை நினைவூட்டும் கவிதை அது. 1961ல் வைத்தீஸ்வரனின் முதல் கவிதையான “கிணற்றில் விழுந்த நிலவு” வெளியானது. பின்னர் ஜெயகாந்தன் எழுதிய “நீ யார் ?” என்ற கவிதையும் வெளியானது. எழுத்து இதழை நடத்தி புதிய கவிதை முயற்சிகளில் இயங்கி, சக எழுத்தாளர்களின் கவிதைத் தொகுப்புக்களை பிரசுரம் செய்து, என பன்முக தளங்களில் இயங்கியவர் சி.சு.செல்லப்பா. அன்னைத் தமிழுக்கு கிடைத்த அரும்பெரும் கொடை. 1959ல் ஆரம்பித்து 1970 ஜனவரி வரை அவர் நடத்தி வந்த “எழுத்து” மறைய நேர்ந்தது. “இந்தப் பனிரெண்டு ஆண்டு காலத்தில் அதன் பொருளாதார அவதிகளை
அனுபவித்து வைராக்கியமாக நடத்தியும் அதற்கு மேல் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை” என்று தனது பத்திரிக்கை மறைவை மிகுந்த வருத்தத்தோடு குறிப்பிடுகிறார்.

பத்தாண்டுகளுக்கும் மேற்பட்ட இந்தக் காலத்தில் 700க்கும் அதிகமான புதுக்கவிதைகளையும், 20க்கும் மேற்பட்ட நல்ல கட்டுரைகளையும் வெளியிட்டது “எழுத்து”. மேலும், பாரதி – பாரதிதாசன் கவிதை திறனாய்வுகள், சங்க கால கவிதைகளை பற்றிய கட்டுரைகள், மேல் நாட்டுக்கவிஞர்கள் பற்றிய கட்டுரைகள், (டி.எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட், யேட்ஸ், ஆஃடன் லாவரி ஆகியோரின் கவிதை பற்றிய கோட்பாடுகளை வெளியிட்டது) மொழிபெயர்ப்புக்கவிதைகளையும் வெளியிட்டது. காந்தியுகத்தின் அர்ப்பண உணர்வோடும், லட்சிய பிடிவாதத்தோடும் “எழுத்தை” ஒரு இயக்கமாக கட்டமைத்த அபார சக்தி
சி.சு.செல்லப்பாவுடையது. “எழுத்து”க்கு பின் அவ்விடத்தை நிரப்பிக்கொள்ள தாமரை, தீபம், நடை கணையாழி, ஞானரதம்,
சரஸ்வதி, இலக்கிய வட்டம் போன்ற இதழ்கள் முனைந்த போதும், “எழுத்து” விட்டுச்சென்ற பெரும் இடைவெளியை மேற்கூறிய
அத்தனை இதழ்களாலும் நிரப்பவியலாமல் போனது நமது துரதிர்ஷ்டம்.

எழுபதுகளில்:

1970களில் வெளியான இதழ்களில் தரமாக செயல்பட்ட பெருமையுடையவை “கசடதபற” மற்றும் “அஃக்”. இதில் “அஃக்”
பதிப்புக்கும், அச்சுக்கும் தேசிய விருதுகள் பெற்ற சிறுபத்திரிக்கை. அதன் காலத்திற்குப் பின்னரும் இன்றைய காலகட்டத்திலும் எந்த சிறுபத்திரிக்கையுமே தேசிய விருதுகள் எதுவும் பெறவில்லை. மேற்கூறிய இதழ்களில் எழுதியவர்களில் சுந்தர ராமசாமி, பிரமிள், க.நா.சு, ஞானக்கூத்தன், சி.மணி, நா.ஜெயராமன், கலாப்ரியா, ஆத்மாநாம், கல்யாண்ஜி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். 1973ல் குழுவினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக “கசடதபற” இதழ் நிறுத்தப்பட்டு மீண்டும் 1975ல் தொடங்கி 1977ல் வெளியான 42வது இதழுடன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது.

1971ல் கோவையிலிருந்து வெளியீட்டை தொடங்கியது வானம்பாடி என்னும் கவிதை இதழ். அதில் “கசடதபற” இதழை கடுமையாக விமர்சித்து இருந்தார் அக்கினிபுத்திரன். வானம்பாடி கவிஞர்களில் முக்கியமானவர்களாக கருதப்படுகிறவர்கள் புவியரசு, சிற்பி, மீரா, தமிழன்பன், ஞானி, சக்திக்கனல், மு.மேத்தா, பா.கங்கைகொண்டான், அக்கினிபுத்திரன் ஆகியோர். அப்துல் ரகுமான், அபி, கலாப்ரியா, இன்குலாப், கல்யாண்ஜி போன்றவர்களும் “வானம்பாடி” இதழில் எழுதி இருக்கின்றனர். ஆனால், இவர்கள் வானம்பாடி கவிஞர்கள் வரிசையில் சேரவில்லை. “நவ நவமான யுத்திகளில், புதுப்புது உருவ வார்ப்புகளில் சமூகத்தில் நசுக்கப்பட்டவர்களின் நியாயங்களை உள்ளடக்கமாகப் புனையும் இலக்கியவாதிகள் நாங்கள்” என்று (வானம்பாடிகள்) இவர்கள்
தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டதால் எழுத்து, இலக்கியவட்டம், நடை, கணையாழி, கசடதபற, அஃக் போன்ற இதழ்களில்
வெளிவந்த புதுக்கவிதைகளை இவர்கள் கவிதைகளாக ஏற்றுக்கொள்ளவில்லை.

வானம்பாடிகள் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்காக மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் கவிதை புனைவதாகப் பெருமை கொண்டவர்கள் ; இவர்கள், ஆதிக்க சக்திக்களை, சமுதாய ஊழல்களை தரைப்புழுவாய் மிதித்து நசுக்க ஆவேசம் கொண்டு இந்த சமூக அமைப்பையே தலைகீழாக மாற்றிவிடுவதாக நம்பிக்கை கொண்டவர்கள், கவிதையில் என்ன சொல்ல வேண்டும் என்று அக்கறை காட்டிய அளவிற்கு அதன் கலைத்தன்மையைக் குறித்து கவனம் கொண்டிருக்கவில்லை. இதனால் இவர்கள் எழுதியவை மேடை முழக்கங்களாகவும், அரசியல் கோஷங்களாகவும், துணுக்களாகவும் ஒலித்தனவே தவிர,
கவிதைகளாகவில்லை. வானம்பாடிகளில் கவிதையைத் தேடுவது, புதுமைப்பித்தன் ஒரு மதிப்புரையில் கூறியிருப்பது போல்,
“மணல் சோற்றில் கல் பொறுக்கும் வேலை தான்.”. புவியரசுவின் சில கவிதைகள் மட்டுமே விதிவிலக்கு.

வானம்பாடிகள் மானுட கீதமாகத் தொகுக்கப்பட்டு 1973ல் வெளிவந்த “வெளிச்சங்கள்” தொகுதி பற்றி “தெறிகள்” (1975) காலாண்டிதழில் வெளிவந்த வெங்கட் சாமிநாதனின் விமர்சனமான “வானம்பாடிகளின் வெளிச்சங்கள்” கட்டுரையின் கடைசிப்பகுதியை எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

“வானம்பாடிகளின் கவிதைகளை, அவர்களின் எழுத்துகளை எல்லாம் பார்த்தபின் எனக்கு ஒன்று சொல்லத்தோன்றுகிறது. பேச்சளவில் இவர்களிடம் அடிபடும் “சமூகப் பிரக்ஞை” இவர்களது பிரக்ஞையில் உண்மையில் இல்லை. சுய அனுபவத்தில் இருந்து கிளராத இக்கவிதைக் குரல்கள், பூர்ஷ்வா புத்திஜீவிகளின் “பேஷ்”களுக்கும், “ஆஹா”க்களுக்குமாகவே “கலையழகு”,”இலக்கிய நயம்” இவற்றைச் சேர்க்கும் கவிதை தயாரிப்பு முயற்சிகள். இவையெல்லாம், ஓர் உண்மையை எனக்குப் பளிச்சிட்டுக் காட்டுகின்றன. பாட்டாளி துயரம், முதலாளித்துவ சுரண்டல், வர்க்கப் புரட்சி இவைகளில் இவர்களுக்கு அக்கறை இல்லை. இவற்றைக் கருவிகளாக கவிதையில் பயன்படுத்திக்கொண்டு, கவிஞர்கள் என்னும் தங்களுடைய சமூக அந்தஸ்து கலையாமல் பாதுகாத்துக் கொள்கிறார்கள். “வெளிச்சங்கள்” தொகுப்பு இதற்கு சாட்சி.”.
இது கொஞ்சம் கடுமையான விமர்சனம் தான் என்றபோதும் உண்மையில் தீவிரமான சமுதாயப் பிரச்சனைகளை எல்லாம் வானம்பாடி கவிஞர்கள் கோஷங்களாகவும், மிகையுணர்ச்சி வெளிப்பாடுகளாகவும் ஆக்கிவிட்டார்கள். பிரமிள் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருப்பது போல “ரொமான்டிக் புஷ்பங்க”ளாக்கி விட்டார்கள்.
1971ல் நாகர்கோவிலிருந்து வெளிவந்த “சதங்கை” இதழ் இலக்கியத்திற்காக பிரத்யேகமாக வெளிவந்தது. இதில் முக்கியமான புதுக்கவிஞர்கள் பலரும் எழுதியிருக்கிறார்கள்.

1972ல் “ஓர் எழுத்தாயுத மாத ஏடு” மற்றும் “அஃக்” ஆகிய இதழ்கள் வெளிவரத்தொடங்கின. சிற்றிதழ்கள் பெருகியதால் புதுக்கவிதைகளும் நிறையவே வெளிவந்தன.
நீலக்குயில் இதழில் நகுலன் எழுதிய “அஞ்சலி” (குறுங்காவியம்)

தெறிகள் இதழில் கலாப்ரியா எழுதிய “சுயம்வரம்” (குறுங்காவியம்)

கொல்லிப்பாவை இதழில் நகுலன் எழுதிய “மழை, மரம், காற்று” (நெடுங்கவிதை)

கொல்லிப்பாவை இதழில் கலாப்ரியா எழுதிய “ஞானபீடம்” (குறுங்காவியம்)

யாத்ரா இதழில் பிரமிள் எழுதிய “ஊர்த்துவ யாத்ரா அல்லது மேல்நோக்கிய பயணம்” (குறுங்காவியம்)

இதே காலகட்டத்தில் தான் ஏராளமான கவிதைத் தொகுப்புகள் வெளியாயின. அதில் 32 கவிஞர்களின் 42 கவிதைகள் அடங்கிய “நாற்றங்கால்” (1974) கவிதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்கது. இந்தக் காலக்கட்டத்தில் புதுக்கவிதைகளிலும் போலிகளின் எண்ணிக்கை அதிகமாயிற்று. சமத்காரத் துணுக்குகள், வெற்றுக்கோஷங்கள், அலங்காரச் சொல்லடுக்குகள் போன்றவை புதுக்கவிதை போல வரி பிரித்து எழுதிவிட்டால் கவிதையாகிவிடும் என்ற மனப்பான்மையும் வளர்ந்தது. தவறான புரிதல்களுடன் புதுக்கவிதையை அணுகிய காரணத்தால் துணுக்குகளும், புதிர்களும், விடுகதைகளும் கூட “புதுக்கவிதை” என்ற பெயர்தாங்கி வெளியாயின. கணையாழி, தீபம் இதழ்களும் இதற்கு விதிவிலக்கல்ல. புதுக்கவிதையின் முன்னோடிகளை பின்பற்றி அதன் நோக்கத்தையும், குணாம்சங்களையும் உள்வாங்கிக்கொண்ட புதிய கவிஞர்களான கலாப்ரியா, அபி, தேவதேவன், நாரணோ ஜெயராமன், வண்ணநிலவன், விக்கிரமாதித்யன், ஆத்மாநாம் போன்றவர்களும் 70களில் புதுக்கவிதைக்கு வளம் சேர்த்தனர். சமகால அரசியல், சமுதாய பிரச்சனைகளை கவிதையாக்கிய முக்கியமான கவிஞர் ஆத்மாநாம். நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்ட சமயத்தில் அதற்கு எதிரான தனது உணர்வுகளை கவிதையில் இயல்பாக குறிப்புணர்த்தினார். “என் அறை” என்னும் அந்த கவிதையின் கடைசிப்பகுதி.

“புரட்சிக்காய்
காத்திருந்து கொட்டாவி விடும்
புத்திசாலி நடுத்தரங்கள்
வீரமாய் மார்தூக்கி
முதுகைச் சொறியும்
புத்திசாலிப் பன்றிகள்.
முதலில் ஒழிப்போம்
நம் புத்திசாலித்தனம்
நிர்வாணமாய் நிற்போம்
நீரலைகள் கரைகளிலே”

தொகுப்பு – காகிதத்தில் ஒரு கோடு, ஆத்மாநாம்.

நூல் ஒப்பீடுகள்:

1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்
2. புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்
3. காலம் கலை கலைஞன் – சி.மோகன்

இர்விங் லேட்டன் 1912ல் ருமேனியாவில் பிறந்தவர். ஒரு வயதில் கனடாவிலுள்ள மாண்ட்ரியலுக்கு புலம் பெயர்ந்தவர். வேளாண் இயலில் இளங்கலை பட்டம் பெற்றவர். சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றி, மெக்கில் பல்கலைக்கழகத்தில் அரசியல் படித்தார். நாற்பது கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

1969-78 காலகட்டத்தில் யார்க் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக பதவி வகித்தார். இவரின் பெயர் இருமுறை நோபல் பரிசுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டது.

"Fortunate Exile" என்னும் இவருடைய கவிதை தொகுப்பு வரலாற்றுடனான நீண்ட தனித்தன்மை வாய்ந்த யூதர்களின் அனுபவங்களைப் பேசுகின்றன. குறிப்பாக நாஜிகளுடன் பல்வேறு சமயங்களில் எழுதப்பட்ட கவிதைகளின் இந்தத் தொகுப்பிலிருந்து தமிழில் சில.

பாடம்

இது ஒரு விரல்
இது ஒரு கண்
ஒரு சிறிய வெட்டுக்கூட வலிக்கிறது
பிறகு எரிச்சலோடு
பெரும் அச்சம் வருகிறது
எலும்புகளைத் துண்டுகளாக்கும்
துப்பாக்கிரவை
கழுத்திலோ அடி வயிற்றிலோ நுழையும்போது
அல்லது இரத்தம் பின்வாங்கும்
கத்தியை தொடர்ந்து வரும்போதும்
மரணத்தைப் பற்றிய
திடீரென சூன்யமாய் அழிக்கப்படும் நினைப்பு
உதடுகளை வெளிறச் செய்கிறது.

உனக்கு நீயே சொல்லிக்கொள்ள வேண்டும்
இது திரைப்படமல்ல. இது நிஜம்
ஒரு சமயம் இருளில் குழந்தையாயழுத
ஒரு மனிதனுக்கு நிகழ்கிறதென்று
அவை உண்மையான குடல்கள்
அவன் கைகளில் வழிந்து கொண்டிருப்பவை
வலியும் பேரச்சமும் உண்மையானவை
நாம் மீண்டும் துவங்குவோம்
இது ஒரு விரல்
இது ஒரு கண்

ஆஸ்க்விட்ஜ்க்குப் பிறகு
(ஆஸ்க்விட்ஜ் : நாஜிகளின் வதைமுகாம்)

மகனே
தெளிவற்ற கவிஞனாய் இராதே
நீ எழுதும் ஒவ்வொரு வார்த்தையும்
நேரடியாகவும் நேர்மையாகவுமிருக்கட்டும்
துப்பாக்கியின் சத்தத்தைப்போல.

இருபதாம் நூற்றாண்டின்
முதிர்ந்த கவிஞனொருவனை நம்பு
நம்பாதே பழைய ஆகமத்தை
புதிய ஆகமத்தையும்
அல்லது குரானின் அறிவுரைகளை
அல்லது மூன்று கூடைகளின் ஞானத்தை
அல்லது தம்மபதத்தை
அவை மனிதனின் மிருகத்தனத்தை
மாற்றுமென்றும் கட்டுப்படுத்துமென்றும்.

அன்பை உபதேசித்த
மக்களின் தோல்களிலிருந்து
விளக்குச் சீலைகள் செய்யப்பட்டன
ஆஸ்க்விட்ஜின் பெல்சன் எரியடுப்புகள்
அவர்களின் முட்டாள்தனத்துக்கு
பகிரங்க சாட்சிகளாயின.

பயங்கரத்துக்கும் வருத்தத்துக்கும்
நினைவுப் பேழைகளிருப்பினும்
வருத்தம், மகனே
அற்ப நேரத்துக்காகத்தான்
ஒரு தானியங்கித் துப்பாக்கி
காக்கிறது
ஒரு ஆயுட்காலத்தை.

(மொழிபெயர்ப்பு – லாவண்யா)

நன்றி : புது எழுத்து, நவ் 2005

வலைப்பதிவிற்கு வருகை தரும் தோழமைக்கு, நன்றாய் இல்லையென்று சொல். வாசித்துவிட்டு ஒதுக்கப்படவேண்டியவை என்று கூறு. நிராகரிக்காதே. கூர்விமர்சனம் தீட்டி மீண்டும் வர வேண்டும் நீ. காத்திருப்பேன். நன்றி.
மே 2023
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Blog Stats

  • 21,274 hits