தமிழ் திரைப்படம் – உப்பு

சரிவிகிதக் கலப்பா?

 

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு பிழைப்பு தேடிவரும் உப்பு என்ற பெண்ணை மையமாகக் கொண்டு நகர்கிறது கதை. உப்புவின் தாத்தா ஓபயா, அரைகுறைப் படிப்பறிவுடைய அவளின் கணவன், தங்களைப் போல துப்புரவு பணியில் கஷ்டப்படவேண்டாம் என்று மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கி கொடுக்கிறார். சூழ்நிலைக்காரணிகளால் அவன் வியாபாரம் நடத்தவியலாமல்போக, வட்டிக்கு பணம் கொடுத்த கும்பலின் நச்சரிப்பு அதிகமாகிறது. இதற்கிடையில், பாதாள சாக்கடை அடைப்பை அகற்றும் பணியில் ஒபயா சாக்கடை குழியிலேயே மாண்டுவிட, வட்டி கும்பல் முப்பது நாள் கெடுவிற்குள் பணம் கொடுக்காவிட்டால் உப்புவை மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் விற்றுவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். பணியில் இருக்கும்போது இறந்த ஒபயாவிற்கு அரசாங்கத்திடமிருந்து வரவேண்டிய ஒரு லட்சரூபாய் உதவித்தொகை வரத்தாமதமாகிறது. அரசிடமிருந்து பணம் வந்ததா? தன்னை கருக்கலைப்புக்கு உட்படுத்தி மும்பை சிவப்பு விளக்குப் பகுதிக்கு ஏற்றுமதி செய்யத்தயராக இருக்கும் வட்டிகும்பலிடம் கெடு முடிவதற்குள் உப்பு பணத்தை செலுத்தினாளா? என்னும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிகிறது இந்தப் படம்.

முப்பதாயிரம் தொழிலாளர்கள் நூத்திப்பத்தொன்பது கழிவகற்றும் பாதாள நிலையங்களில் தங்களுக்கான பாதுகாப்பு உடையின்றி, முகக்கவசமின்றி, பிரவகிக்கும் விஷவாயுக்களிடையே பணி செய்து வருவது சென்னைக்கு மட்டுமல்லாமல், எந்த ஒரு பெருநகருக்கும் பொருந்தும். பாதுகாப்பு உடைகள் அணிந்தால் பாதாள சாக்கடைக்குள் இறங்க முடியவில்லை, துவாரம் சற்று பெரிதாக இருந்தால் வசதியாக இருக்கும் என்ற அவர்களின் கோரிக்கைக்கு அரசு இன்றுவரை செவிசாய்த்திருப்பதாக தெரியவில்லை.

சாக்கடை அள்ளுவது, குப்பை எடுப்பது, கழிவை அகற்றுவது என துப்புரவு தொழிலாளர்களின் பல்வேறு கோணங்களை ஏகதேசமாக சொல்லமுயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் செல்வராஜ் – பாராட்டுக்கள்.

தொல்பாவை கூத்தில் காணக்கிடைக்கும் கர்ணபரம்பரைக் கதைகளின் ஒன்றான "நீலகண்டப்பறவையைக்" குறித்தக் கேள்விகளிலும், தேடுதல்களிலும் கழியும் உப்பின் பால்யப் பிராயம் மட்டுமின்றி, பின்னாளில் கனவில் காணும் அந்த புனைவுப் பறவையை கையில் பச்சைக்குத்திக் கொள்ளும்போது அந்தப் பறவையின் குறியீடாக அவளே மாறுகிறாள். இதற்கு பாரதிராஜாவின் பின்னணிக்குரலில் விளக்கமேதும் படத்தின் இயக்குனர் சொல்லியிருக்கத் தேவையில்லை.

சுருட்டோடு அலையும் துப்புரவு பணிசெய்யும் பெண்கள், காய்கறி விற்கும் விதவை, கந்துவட்டிக்காரர்களின் அடாவடி, சித்தம் கலங்கியவனை தன் உடற்பசிக்கு பயன்படுத்திக்கொள்ளும் சாரயம் விற்பவள், புதுமாப்பிள்ளை என சம்பவம் சார்ந்து விரியும் பாத்திரங்களுக்கு இந்தப்படத்தில் பஞ்சமேயில்லை. ரோஜாவின் நடிப்பில் முதிர்ச்சி தென்படுகிறது. கே. ராஜன், ஒபயா பாத்திரமாகவே மாறியிருக்கிறார். மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

திரைக்கதையை சற்று கச்சிதப்படுத்தியிருந்தால் "குறிப்பிடத்தக்கப் படம்" என்றாகியிருக்க வேண்டிய திரைப்படம் "பாராட்டுகளைப் பெறும் முயற்சி" என்ற நிலையில் நின்றுவிடுகிறது.