படைப்பு மந்திரத்தின் கதகதப்பில் தன்னை இருத்திக்கொள்ள விழையும் சிறந்த வாசகன், ஒரு படைப்பு மேதையின் புத்தகத்தைத் தன் இதயத்தால் வாசிப்பதில்லை. மூளையால் கூட பெரிதும் வாசிப்பதில்லை. மாறாக, தன் முதுகுத்தண்டின் மூலமே வாசிக்கிறான்.

– விளாதிமிர் நொபொகோவ்

அத்தகைய படைப்பு மந்திரத்தை தன்னகத்துள் கொண்டு, கனவுகளற்றுப் பரிதவிக்கும் தன் காலத்துக்கான கனவுகளை கண்டடையும் இன்றைய படைப்பாளியிடமிருந்து வெளிப்படும் கலை-இலக்கிய பரிமாற்றத் தேவைகளின் அடிப்படைகளில் கவிதையும் ஒன்று. கவிதை என்ற சொல் உடனடியாக உணர்த்துவது போலத் தோன்றும் பொதுத்தன்மை, புகைமூட்டமான ஒரு உணர்வு தான். உண்மையில் அவ்வாறான நிரந்தரப் பொதுத்தன்மை எதுவும் கவிதை என்ற வடிவத்திற்கு கிடையாது. கால அட்டவணையில் அந்தந்த மொழியில்,
அவ்வப்போது செயல்படும் போக்குகள் கவிதை என்பதின் இலக்கணத்தையும் வரையறைகளையும் நிர்ணயித்துச் செல்லுகின்றன.

தமிழ் கவிதை என்பது யாப்பிலக்கணத்திற்கு உட்பட்ட சொற்கட்டு தான் என்ற கருத்தாக்கம் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையில் இருந்து வந்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கவிதை மரபு தமிழில் தொடர்ச்சியாக இருந்துவந்துள்ள போதிலும் கவிதையியல் பற்றிய ஆழ்ந்த விமர்சனப்பார்வை தமிழர்களிடையே எழுத்துவடிவில் இல்லாலதது தான் இதற்குக்காரணம். கவிதை தமிழில் இருக்கலாம். ஆனால் கவிதையை பற்றிய ஆராய்ச்சி தமிழில் கிடையாது. தமிழில் செய்யுளியலை பற்றி ஆராய்ச்சி இருந்திருக்கிறது. செய்யுளியல் பற்றிய தமிழ் இலக்கண நூல்கள் எல்லாம் எதுகை, மோனை, யாப்பு, அணியிலக்கணம் குறித்து விரிவாகச் சொல்லியுள்ளன. பொருளிலக்கணம் குறித்து தொல்காப்பியம் விரிவாகச் சொல்லியுள்ளதெனினும் கவிதை கலையின் அடிப்படை தன்மைகள் கவிதையியல் பற்றிய சிந்தனைகளாக அவற்றை கொள்ளவியலாது. 2000 ஆண்டு தமிழ் கவிதை மரபில் காலந்தோறும் கவிதையில் நிகழ்ந்துள்ள உருவ-உள்ளடக்க மாறுதல்களை தெளிவாக உணரலாம்.

சங்க காலம் :

ஆசிரியப்பா வகைகள் கவிதையில் மிகுதியாக கையாளப்பட்டன. கவிதைகளின் உள்ளடக்கம் காதல், வீரம், பிரிவு, கொடைச்சிறப்பு என்று குறிப்பிட்ட சில வரைமுறைக்குட்பட்டனவாகவே உள்ளன.

சங்கம் மருவியகாலம் :

பெருமளவு வெண்பா வகைகள் கவிதையில் கையாளப்பட்டன. அன்றைய வாழ்க்கை மதிப்பீடுகள் சார்ந்து உருவான நீதிகருத்துக்களின் சாரத்தையே இவை வலியுறுத்தின.

காப்பிய காலம் :

சிலப்பதிகாரம், மணிமேகலை – பெருமளவு ஆசிரியப்பா வகைகளில் எழுதப்பட்ட இவற்றின் நோக்கம் சமயம் சார்ந்த அறக்கருத்துக்களை வலியுறுத்துவதாக இருந்தாலும் அவை அனுபவம் சார்ந்த வெளிப்பாடுகளாகவே அமைந்திருந்தன. சிலப்பதிகாரத்தில் இசைத் தன்மையுடன் கூடிய பாடல்கள் இடம்பெற்றன.

சீவக சிந்தாமணி – விருத்தப்பாடல்களினால் எழுதப்பட்ட காப்பியம்.

பக்தி இலக்கிய காலம் :

ஆழ்வார்கள், நாயன்மார்களிடம் விருத்தப்பா பல்வேறு ரூப வேறுபாடுகளையும், கவிதை நயங்களையும் பெற்று வளர்ச்சி அடைந்தது. பக்தி இலக்கிய காலத்தில், பக்தி – கவிதைக்கான முதன்மை பாடுபொருள் ஆனது. எனினும் ஆழ்வார்கள் நாயன்மார்களிடம் பக்தி அவர்களின் அனுபவங்களாக வெளிப்பட்டதால் இன்றும் அவற்றை படித்து அனுபவிக்க முடிகிறது. பக்தி இலக்கிய காலத்தை பின்தொடர்ந்த கம்பரின் கம்பராமாயணம் மற்றும் சேக்கிழாரின் பெரியபுராணம் ஆகியவற்றிலும் விருத்தப்பாவின் பல்வேறு வடிவங்களை காண இயலுகிறது.

சிற்றிலக்கியங்களின் காலம் :

கோவை, உலா, அந்தாதி, பரணி போன்ற இலக்கிய வகைகள் தோன்றின. கவிதையின் உருவம், வெளியீட்டு முறை ஆகியவற்றில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன.

16ஆம் நூற்றாண்டில் சித்தர் பாடல்களில் கவிதை புதிய மெருகு பெற்றது. சமயச் சடங்காச்சாரங்களுக்கு எதிரான குரல் அவர்கள் கவிதைகளில் வெளிப்பட்டது. கவிதை அமைப்பில் பேச்சு வழக்குகளின் பிரயோகமும் இசைத்தன்மையும் நேரடியாக சொல்லும் போக்கும் இக்காலக்கட்ட கவிதைகளின் முதன்மை குணங்களாயின.

17ஆம் நூற்றாண்டில் சிற்றின்ப உணர்வுகளை முதன்மைப்படுத்தும் போக்கு கவிதைகளில் வளர்ந்தது. ஆட்சி அதிகார மாற்றங்களின் விளைவு என்றிதனைக் கொள்ளலாம். பேரரசுகள் சிதைந்து சிறிய சிறிய ஜமீன்களின் அதிகாரம் நிலைபெற்ற காலக்கட்டம் இது.

18,19ஆம் நூற்றாண்டுகளில் இசைப்பாடல்கள் பெருகின. கவிதை என்பதே பாடல்கள் தான் என்றானது. அதற்கேற்ப கவிதையின் வெளியீட்டு வடிவங்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. இசைபாடல்களுக்கேற்ற “சிந்து வடிவங்கள்” பெருவழக்காயின. இசையுடன் கூடிய சொல்லடுக்குகளே கவிதை என்றாயின.

பாரதியின் நூற்றாண்டு : 20ஆம் நூற்றாண்டில் சித்தர் காலத்துக்குப்பின் கவிதையில் ஏற்பட்ட தேக்கத்தை உடைத்துக்கொண்டு ஒரு காட்டாற்றுப்பெருக்கென புதுவெள்ளம் பிரவேசித்தது. ஒரு மகாகவியின் வருகைக்காக சித்தர்களின் மறுபிறவி என கருதக்கூடிய பாரதிக்காக தேங்கிக்கடந்த தமிழ் கவிதை புத்துணர்வு பெற்றது. பண்டிதர்களின் புலமை விளையாட்டினால் மக்களிடமிருந்து அந்நியமாகிப்போன தமிழ் கவிதை பாரதியால் மீண்டும் புத்துயிர் பெற்றது. புதிய புதிய உருவகங்களில், புதிய சொற்களில், புதிய பார்வையில் கவிதையில் புதுமையை புகுத்திய பாரதிக்கு தேசியமும் தெய்வபக்தியும் ஆவேசமான உந்துசக்திகளாக அமைந்தன. மேலை நாட்டு கவிதை பரிச்சயமும் பாரதியின் கவிதைக்கு வலுச்சேர்த்தது. சொல்புதிதாய் பொருள் புதிதாய் தமிழ்கவிதை மறுமலர்ச்சி அடைந்தது. இசைத்தன்மையுடன் கூடிய பாடல்களிலும் கவிதையின் சாரத்தை ஏற்றியது பாரதியின் தனிச்சிறப்பாகும்.

பாரதிக்குப்பின் பாரதிதாசனிடம் கவிதை ஆரம்பத்தில் அவரிடம் இருந்த உத்வேகத்தை இழந்து, சமுதாய சீர்திருத்தத்திற்கான மந்திரக்கோலாக அதீதமான தமிழ்பற்றாக வறட்சி அடைந்தது. இவ்விருவரை பின்பற்றி அல்லது நகலெடுத்து செய்யுள் கட்டிய புலவர்களின் எண்ணிக்கை பெருகியது.

ஒரு ஜீவநதியாகப் பயணித்த தமிழ் கவிதை தேங்கிக் கிடந்த இக்காலகட்டத்தில் தான் உரைநடை இலக்கியம் எழுச்சி பெற்றது. பின்னர் அதன் தாக்கம் கவிதையில் பிரதிபலிக்கத் தொடங்கியது. ஆரம்பகாலத்தில் தமிழில் புதிய கவிதை முயற்சிகள் “வசன கவிதை” என்றே அழைக்கப்பட்டது. இது “prose poem” என்னும் ஆங்கிலச் சொற்சேர்க்கையின் தமிழாக்கம். ஆரம்பகால வசனகவிதை முயற்சிகளை “கோவேறு கழுதை”, ” வெஜிடபிள் பிரியாணி” என்றெல்லாம் கிண்டல் செய்தவர்களும் உண்டு.

1959ல் வெளியீட்டை தொடங்கிய சி.சு. செல்லப்பாவின் “எழுத்து” காலாண்டிதழின் ஆரம்ப கால இதழ்களிலும் புதிய கவிதை முயற்சிகள் வசனகவிதை என்றே அழைக்கப்பட்டது. “சுயேச்சா கவிதை” என்னும் சொல்லை ஆரம்பகால கட்டுரைகளில் பிரமிள் பயன்படுத்தியுள்ளார். 1959ல் “சரஸ்வதி” ஆண்டு மலரில் வெளியான கட்டுரையொன்றில் முதன்முதலாக புதுக்கவிதை என்னும் பெயரை க.நா. சுப்ரமணியம் பயன்படுத்தினார். இதனை “New Poetry” என்னும் ஆங்கில பிரயோகத்தின் தமிழாக்கமாகவே கொள்ளவேண்டும்.

“புதுக்கவிதை” என்னும் பெயரும் ஒரு வகையில் குழப்பமானது தான். எந்த காலத்திலும் புதுமை குன்றாமல் காலந்தோறும் தன்னை புதுப்பித்துக்கொண்டு புதிய இலக்கிய அனுபவம் தருவது தான் நல்ல கவிதையின் இலக்கணம். எனினும், யாப்பிலக்கணத்திற்கு உட்பட்ட கவிதையிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் ஒரு பொதுப்படையான வசதிகருதியே, அடைமொழியுடன் “புதுக்கவிதை” என்று அழைக்கப்படலாயிற்று. இன்றைய
காலகட்டத்தில் கவிதை என்றால் அது புதுக்கவிதை என்றாகிவிட்டது. மேலை நாடுகளில் தோன்றிய புதிய கவிதை முயற்சிகளே புதுக்கவிதை உருவாவதற்கு ஆதர்சமாக இருந்தன. தமிழ் யாப்புருவங்களில் காலம்தோரும் ஏற்பட்ட மாற்றங்களும் தமிழ் யாப்பிலக்கணத்தின் நெகிழ்சியான அமைப்பும் புதிய கவிதை வடிவங்களை ஏற்றுக்கொள்ளும் தமிழ் மனோபாவமும் இங்கு புதிய கவிதை முயற்சி எளிதில் நிலைபெற காரணங்கள் ஆயின. யாப்பின் அடிப்படையில் தமிழ் கவிதையை “மரபுக்கவிதை” “புதுக்கவிதை” என்று பிரிப்பது தமிழில் யாப்பியல் வரலாற்றையே மறுதலிக்கும் முயற்சி ஆகும். புதுமைப்பித்தன் சொல்வது போல “யாப்பு விலங்கல்ல. அது காலந்தோறும் தன்னை புதுப்பித்துக்கொண்டே வந்துள்ளது.”

வாழ்விலும், சிந்தனையிலும், மொழியிலும் ஏற்பட்ட மாற்றங்களும் உரைநடையின் வளர்ச்சியும் சேர்ந்து யாப்பிலக்கணம் குறித்த அக்கறையை மங்கச்செய்துவிட்டன. அயல்நாடுகள் நிகழ்ந்த புதிய கவிதை போக்குகளின் பரிச்சயமும், பாரதியின் வசனக்கவிதை முயற்சி ஏற்படுத்திய ஊக்கமும், நம்பிக்கையும் அந்த ப்ரக்ஞை செயல்வடிவம் பெருவதற்கான உந்துதல்கள் என்றுகொள்வதே பொருத்தமானதாகும்.

பண்டிதன் செய்யுளும், கவிஞன் கவிதையும் எழுதுகிறார்கள். செய்யுள் யாப்பின் விதிகளை உள்ளடக்கியது. கவிதை என்பது யாப்பிலக்கண விதி அல்ல. கவிதையின் ஜீவநாடி, அதன் உயிர்பெற்ற வடிவம் என்கிறார் புதுமைப்பித்தன். கவிதைக்கு யாப்பிலக்கணத்தின் பயன்பாடு தேவையில்லை என்றான காலகட்டத்தில் செய்யுள், கவிதை என்று பிரித்தறியும் பார்வை தீவிரமடைந்தது. கவிதை-செய்யுள் என்னும் பாகுபாடு யாப்பு விதிகளுக்கு உட்பட்டு எழுதப்பட்டவற்றிற்கு மட்டுமல்லாமல் யாப்பிலக்கண பிரக்ஞை இல்லாமல் எழுதப்படும் இன்றைய புதுக்கவிதைகளுக்கும் பொருந்தும். கவித்துவமான வெளிப்பாடே கவிதையின் உள்ளமைப்பு சார்ந்த முதன்மையான அம்சமாகிறது. கவிஞனின் சுயமான அனுபவப்பார்வையின் வெளிப்பாடு, மொழியாளுமை, செறிவான அமைப்பு சார்ந்தே இன்றைய கவிதையின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. வரிகளை உடைத்து அச்சிடுவதனாலோ, அலங்காரமாக சொல்லடுக்குகளினாலோ, புதிய தகவல்களை வெளிப்படுத்துவதனாலோ புதுக்கவிதை சாத்தியமாகிவிடாது. வார்த்தை ஜாலங்கள் எக்காலத்திலும் கவிதையாவதில்லை.

பரவலாக இன்றைய புதுக்கவிதையின் தளத்தில், வாசக மனத்துள் அனுபவ அதிர்வுகள் எதையும் ஏற்படுத்தாத, கவித்துவச் செறிவற்ற தட்டையான மொழி இயங்க தமிழின் யாப்புருவங்கள் என்றும் தடையாக இருந்ததில்லை. “முன்னர் யாப்பை உதறி வெளியே தள்ளியதற்கு கவிதையின் பொருள் நியாயம் சொல்லிற்று. ஆனால் இன்றைய அனேகம் கவிதைகளில் காணும் பத்தாம்பசலி சமாச்சாரங்களுக்கும் அரசியல் கோஷங்களுக்கும் யாப்பு எப்படி வில்லங்கம் என்று எனக்குப் புரியவில்லை ” என அமரர். சுந்தர ராமசாமி கூறியது அத்தகைய தட்டையான மொழிகொண்ட கவிதைகளுக்குப் பொருந்தும்.

ஆக, கவிதையின் புறவடிவமான யாப்பு இன்றையப் புதுக்கவிஞர்களால் தேவையற்றதென கருதப்பட்ட போதிலும் கவிதையின் அடிப்படையான, உள்ளமைப்பு சார்ந்த சில குணாம்சங்கள் இன்றும் பொதுவானவையாகவே இருந்துவருகின்றன. எக்காலத்திலும் யாப்பு-யாப்பின்மை பிரச்சனையையும் மீறிய அனுபவப்பகிர்தல்களாகவே கவிதை இருக்கிறது. எதுகை மோனை உள்ளிட்ட யாப்பின் வரையறைகள் கவிதையின் அனுபவ வெளிப்பாட்டிற்கு செறிவும், நுட்பமும் ஊட்டுவதற்கு நேற்றைய கவிஞர்களால் பயன்படுத்தப்பட்ட உத்திகளே அல்லாமல் அவையே கவிதையின் மூலக்கூறுகள் அல்ல என்பதை உணரலாம். இந்தக்குழப்பங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு கவிதையில் கவிதையை, கவித்துவத்தை மட்டும் தேடும் பார்வை விரிவடையவேண்டும். அப்போது தான், நேற்றைய கவிதைகளில் மேலானவற்றையும் இன்றைய நவீன கவிதைகளில் தரமானவறையும் தெளிவாக வகைப்பிரித்தறிந்து அனுபவிக்க இயலும்.

புதுக்கவிதை ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட காலங்களிலும் அது ஓர் இயக்கமாக மறுமலர்ச்சி அடைந்த காலகட்டத்திலும் அதற்கு எதிராக எழுந்த எதிர்ப்புக்குரல்களும், முணுமுணுப்புக்களும் இன்று மறைந்துவிட்டன. தமிழறிஞர்களும் இன்று புதுக்கவச்ிதையை ஏற்றுக்கொண்டுவிட்டனர். பல்கலைகழகங்களின் பாடதிட்டத்திலும் ஆய்வுத்துறையிலும் சிறுகதை, நாவல் போலவே புதுக்கவிதையும் அங்கீகாரம் பெற்றுவிட்டது.

– பாம்பாட்டி சித்தன்

நூல் ஒப்பீடுகள்:

1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – திரு. வல்லிக்கண்ணன்
2. புதுக்கவிதை வரலாறு – திரு. ராஜ மார்த்தாண்டன்
3. ஜென் கவிதைகள் – திரு. யுவன்
4. காலம், கலை, கலைஞன் – திரு. சி. மோகன்